Friday, March 2, 2012

ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் வரலாற்றுப் பூர்வ முயற்சியை வரவேற்போம் - ஆதரிப்போம்


நம் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் மிக அதிகம். அப்பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக இருக்கின்றன என்று கருதப்படக்கூடிய கட்சிகளின் எண்ணிக்கையும் மிக அதிகமே. இன்னும் குறிப்பாகப் பார்த்தால் இருக்கும் அனைத்துக் கட்சிகளிலும் பொறுப்புடன் பிரச்னைகளின் தீர்வுக்காகப் பாடுபடக் கூடியவை என்று அரசியல்  அறிவு கொண்டவர்களால் கருதப்படக் கூடிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கூட நமது நாட்டில் பஞ்சமில்லை. அவ்வாறிருக்கையில் மற்றொரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு உருக்கொடுக்கப் போகிறோம் என்றால் அதற்கான தேவை என்ன என்ற கேள்வி மக்கள் மனதில் யதார்த்தமாக எழவே செய்யும். 


ஆனாலும் அப்படிப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கான தேவை -வரலாற்றுத் தேவை - பெரிதும் உள்ளது. ஒரு சரியான கம்யூனிஸ்ட் கட்சி அது செயல்படும் காலத்தில் நிலவும் சமூக நிலைகளை கணக்கிற்கொண்டு சமூக வளர்சிக்குக் குறுக்கே நிற்கும் பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக சமூக நடவடிக்கைகளைத் தட்டி எழுப்பி சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்ய வேண்டும். அதன் சிந்தனையும், செயல்பாடும் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு உகந்த வகையில் எல்லாம் செழுமை பெற வேண்டும். அதனால் தான் மாமேதை எங்கெல்ஸ் மாமேதை மார்க்ஸும் தானும் இணைந்து எழுதிய மனித குலத்தின் 20 நூற்றாண்டு கால வரலாற்றின் இணையற்ற நூலான கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஒவ்வொரு பதிப்பின் போதும் ஒரு விசயத்தைத் தவறாமல் குறிப்பிடுவார். அதாவது 'ஒரு பதிப்பிற்கும் அதற்கு அடுத்த பதிப்பிற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க மாறுதல் எதுவுமில்லை ;  எனவே அந்நூல் முன்வைக்கும் கருத்துகளிலும் மாற்றம் செய்வது அவசியம் இல்லை" என்று குறிப்பிடுவார்.

ஆனால் இன்று இந்தியாவில் கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்படும் காட்சிகளிலெல்லாம் பெரியதாகவும் ஸ்தாபன வலுவுடனும் விளங்குவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட் ). அதன் தலைவர் பிரகாஷ் கரத் அவர்கள் சமீபத்தில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஸ் பலகலைக் கழகத்தில் ஆற்றியதொரு உரையில் கூறியுள்ளார்: 1940 களில் ஒன்றாயிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியச் சூழ்நிலை குறித்து வைத்திருந்த கருத்தின் அடிப்படையிலையே இன்று வரை நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்று. 1940 - க்குப் பின்னர்தான் வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்தான விடுதலை போன்ற மிகப்பெரிய வரலாற்று நிகழ்வுகள் நமது நாட்டில் ஏற்பட்டுள்ளன. அவையெல்லாம் தங்களது செயலிலும் சிந்தனையிலும் கணக்கிற்கொள்ளப்படவில்லை என்று அதன்மூலம் அவர் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

சி.பி.ஐ ( எம் ) கட்சி மட்டுமல்ல; அதன் அடிப்படை அரசியல் வழியை ஒத்ததொரு அடிப்படை அரசியல் வழியினையே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டிருக்கிறது; மற்ற அதி தீவிரக் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் குழுக்கள் எனக் கருதப்படும் அதிலிருந்து பிரிந்த அமைப்புகளும் கொண்டுள்ளன. அதாவது இக்கட்சிகளின் இந்தியச் சூழ்நிலை குறித்த சிந்தனை 1940 - களோடு உறைந்து போய்விட்டது. 1947 -ல் அந்நிய ஏகாதிபத்தியத்தை அகற்றிவிட்டு முதலாளிகளின் துரித வளர்ச்சிக்காக விடுதலை பெற்ற இந்திய அரசு ஐந்தாண்டுத் திட்டங்கள் போன்ற திட்டங்களை வகுத்து ஆதாரத் தொழில்களான மின்சாரம், போக்குவரத்து, செய்தித்தொடர்பு , இரும்பு, எகு போன்றவற்றை அரசுத் துறையில் உருவாக்கி அதனை மலிவு விலையில் வழங்கி தேசிய முதலாளிகளின் விரைவான வளர்ச்சிக்கு உதவியது; அவற்றைப் பயன்படுத்தி வளர்ந்த , தேசிய முதலாளிகள் ஏகபோகங்களாகி அவர்களின் சரக்குகள் மட்டுமல்ல மூலதனமும் வெளி நாடுகளுக்குச் செல்லும் ஏகாதிபத்தியக் கூறுகள் இந்திய அரசமைப்பில் தோன்றியுள்ளது போன்றவை இக்கட்சிகளால் கணக்கிற்கொள்ளப்படவில்லை. 

அத்தகைய முதலாளித்துவச் சுரண்டலின் விளைவாக மக்களின் வாங்கும் சக்தி சூறையாடப்பட்டு மக்களிடையே ஒரு மிகப்பெரும் பொருளாதார ரீதியிலான ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளதும் பார்க்கப்பட வேண்டிய கோணத்தில் இக்கட்சிகளால் பார்க்கப்படவில்லை. அடிப்படையில் முதலாளித்துவச் சுரண்டலினால் நமது நாட்டில் தோன்றி வளர்ந்துவரும் சந்தை நெருக்கடி இக்கட்சிகளால் ஏகாதிபத்தியச் சுரண்டலின் விளைவாக ஏற்பட்டது என்று பார்க்கப்படுகிறது. நெருக்கடி சூழ்ந்த இக்காலக்கட்டத்தில் இந்திய முதலாளிகளின் வளர்ச்சிக்காக அவர்களின் நலனுக்காகச் செயல்படும் நமது அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டதே உலக மயம்; அதன் விளைவான தகவல் தொழில் நுட்ப , உற்பத்தித் துறைகளின் வளர்ச்சியினைக் கருத்திற்கொண்டு அதனால் செய்து கொள்ளப்பட்டுள்ளதே அணு ஒப்பந்தம்; ஆனால் அவை அந்நிய ஏகாதிபத்தியங்களால் நம் மீது திணிக்கப்படுபவை என்று இக்கட்சிகளால் பார்க்கப்படுகின்றன. 

அத்தகைய பார்வைக் கோளாறின் காரணமாக இந்திய மக்கள் இன்று அனுபவித்து வரும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் மூலகாரணமான இந்திய முதலாளிகள் ஏகாதிபத்தியக் சுரண்டலின் அப்பாவி பலிகிடாய்களாகப் பார்க்கப்படுகின்றனர். அவர்கள் நடத்தும் தொழிற்சாலைகளில் ஏற்கனவே ஓரளவு செயல்பட்டு வந்த தொழிற் சங்கங்களும் கூட உலகமயத்தின் விளைவாகப் பாதிக்கப் பட்டவர்களாக முதலாளிகள் ஆகியுள்ளனர் என்று காரணம் காட்டப்பட்டுச் செயலிழந்தவைகளாக ஆக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மிக அடிப்படைச் செயல்பாட்டுத் தளமான வர்க்கப் போராட்டம் இவ்வாறு இக்கட்சிகளால் கைவிடப்பட்டுள்ளது. அவர்களின் அனைத்து இயக்கங்களும் இலக்கிழந்தவையாக இதனால் ஆக்கப்பட்டு இகட்சிளால் அமைப்பு ரீதியாக பெரியவையாக உள்ளவை அப்பட்டனமான நாடளுமன்ற வாதத்திலும், அதிதீவிரத் தன்மை வாய்ந்தவையகளாகக் கருதப்படுபவை நாடளுமன்றப் பங்கேற்பையே புறக்கனிப்பவையுமாகி திருத்தல்வாத மற்றும் குட்டி முதலாளித்துவச் சாகச வாதங்களில் மூழ்கிப் போயுள்ளன.  

இக்கட்சிகள் தவிர சரியான அடிப்படை அரசியல் வழியான முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சிப் பாதையினைத் தங்கது அரசியல் வழியாகக் கொண்டிருக்கும் அரசியல் காட்சிகளில் ஒன்றான புரட்சி சோசலிஸ்ட் கட்சி , ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தனது வளர்சிக்காக் கைகொள்ளவேண்டிய மார்க்சிய தத்துவத்தை ஒரு அரசியல் , பொருளாதாரக் கண்ணோட்டமாக மட்டுமின்றி ஒரு வாழ்க்கைத் தத்துவமாகக் கடைபிடிக்க வேண்டும் என்ற போக்கைக் கடைப்பிடிக்காததன் காரணமாக ஒரு புரட்சிகர அமைப்பாக வளர முடியாமல் முடங்கிப் போயுள்ளது. 

ஒரு கம்யூனிஸ்ட் கட்சி வளர்க்கப்பட வேண்டிய சரியான முறைகளின்படி தோழர்.சிப்தாஷ் கோஷினால் உருவாக்கி வளர்க்கப்பட்ட சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா அமைப்பு அவரது மறைவிற்கு பின் உலக அரங்கிலும், தேசிய அளவிலும் தோன்றியுள்ள மாறுதல்களைக் கணக்கில் கொண்டு அதன் சிந்தனையைச் செறிவு செய்யாமல் உறைந்து போயுள்ள அமைப்பாக ஆகியுள்ளது. சிப்தாஷ் கோஷின் மறைவிற்குப் பின் ஏற்பட்ட சோவியத் யூனியனிலும், பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிசத்திற்கு ஏற்பட்ட விழ்ச்சி ,அதன் விளைவாக சோஷலிச முகாம் இல்லாமல் போயுள்ள நிலை, மாவோவின் மக்கள் சீனம் டெங்சியோபிங்கின் பாதையில் முதலாளித்துவ நாடாகிவரும் அவலம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு தனது சிந்தனையைச் செளுமைப்படுத்தாது சிப்தாஷ் கோஷ் முன் வைத்த கருத்துகள் எந்தவகைச் செழுமைப் படுத்துதலுமின்றியே புரட்சியினை வழிநடத்தப் போதுமானவை என்ற எந்திர கதியிலான நாடாகிவரும் சூழலில் ஏதோ அந்நிய மூலதச் சுரண்டலினால் இந்திய முதலாளிகள் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று கருத இடமளிக்கும் வகையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாடு நடத்திக் கொண்டுள்ளது. 

இவ்வாறு இந்தியாவில் கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்படும் அனைத்துக் கட்சிகளும் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகளாக விளங்கி மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளுக்கான தீர்வையும், சமூக மாற்றத்திற்கான சரியான பாதையையும் முன் வைக்காத நிலையில் ஒரு உண்மையானதும், சரியானதுமான் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்ப்பது ஒரு வரலாற்றுத் தேவைதானே. அதனை நிறைவேற்ற தோழர்.சங்கர் சிங்கினால் உருவாக்கி வளர்க்கப்பட்ட கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் ( சி.டபிள்யு.பி ௦) தனது முதல் அகில இந்திய அமைப்பு மாநாட்டினை மதுரை நகரில் நடத்தவுள்ளது. அந்த வரலாற்றுப் பணி சிறக்க உணர்வு பெற்ற உழைக்கும் வர்க்கத்தின் பேராதரவினை வேண்டுகிறோம். 

No comments:

Post a Comment