ஆடு, கோழி பலியிடல் தடை அரசாணையும் தடம்புரண்ட தமிழக கம்யூனிஸ்டுகளின் வர்க்க சமரச - ஜாதியவாதச் சறுக்கலும்


ஆடு, கோழி பலியிடல் தடை அரசாணையும் தடம்புரண்ட தமிழக கம்யூனிஸ்டுகளின் வர்க்க சமரச - ஜாதியவாதச் சறுக்கலும்

முதற்பதிப்பு:டிசம்பர் 2003

கோயில்களில் பறவைகளையும் விலங்குகளையும் பலி கொடுப்பதை தடை செய்யும் வகையில் 1950 முதல் இருந்து வரும் சட்டத்தை தமிழகத்தில் தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசு சமீபத்தில் ஓர் ஆணை பிறப்பித்துள்ளது.  இந்த ஆணை பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளிடையே பல்வேறு விதமான பிரதிபலிப்புகளை  வெளிக்கொணர்ந்துள்ளது.  பல கட்சிகள் தங்களின் அடிப்படைக் கொள்கைகளுக்குப் புறம்பான நிலைபாடுகளை இந்த விஷயத்தில் எடுத்துள்ளன.  எனவே தமிழக அரசின் இந்த ஆணை இப்போது பிறப்பிக்கப் பட்டுள்ளதன் பின்னணி என்ன? இது போன்ற ஆணைகள் மற்றும் சட்டங்கள் குறித்து உணர்வு பெற்ற உழைக்கும்  வர்க்கத்தின் நிலை எதுவாக இருக்க வேண்டும்பல்வேறு கட்சியினர் குறிப்பாக கம்யூனிஸ்டுகள் என்று தங்களைக் கூறிக் கொள்வோர் தங்களின் அடிப்படைக் கொள்கைகளுக்கு விரோதமான நிலையினை எடுக்கும் நிலைக்கு ஏன் இந்த விஷயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்? என்ற கேள்விகளை அலசி ஆராய்வது இந்தப் பிரசுரத்தின் நோக்கமாகும்.  கடுமையான வாழ்க்கை நெருக்கடிகளுக்கு மத்தியில் அவற்றின் தீர்வுக்கான திசைவழி தெரியாது தடுமாற்றத்தில் இருக்கும் தமிழ்நாட்டு உழைக்கும் வர்க்கத்தின் போராட்டப் பாதையை அது பிரதானமாக வர்க்கப் போராட்டப் பாதையா அல்லது ஜாதீய போராட்டப் பாதையா என்பதைத் தீர்மானிப்பதற்கு உதவும் என்ற அடிப்படையில் இந்த விஷயத்திற்கு இத்தனை முக்கியத்துவம் தருவது அவசியமாகின்றது.

 
                பொதுவாக வழிபாட்டுத் தலங்களில் உயிரினங்களைப் பலி கொடுப்பது ஒர் அநாகரீகச் செயலே.  அந்த அடிப்படையில் நாகரீகத்தையும் மனிதகுல மேம்பாட்டையும் விரும்பும் எவரும் இந்த ஆணையை நிச்சயமாகத் தவறென்று கூறமாட்டார்கள்.  அநாகரீகப் பழக்கவழக்கங்களில் இருந்து விடுபட்டு சமூகம் மென்மேலும் ஜனநாயகமயமாக்கப்படவேண்டும் என விரும்பிய மகாகவி.  பாரதி போன்றவர்கள் உட்பட பலரும் இந்தப் பலி கொடுக்கும் பழக்கத்திற்கு எதிராகவே நின்றனர்.  அவ்வாறு செறிவு பெற்ற அந்த உணர்வின் அடிப்படையில் தான் 1950 ம் ஆண்டு சட்டமும் இயற்றப்பட்டது.  ஆனால் அந்த உணர்வின் பிரதிபலிப்பாகத்தான் தமிழக அரசின் இந்த அரசு ஆணையும் பிறபிக்கப் பட்டுள்ளது என்று எவரும் தவறாக எண்ணிவிடக்கூடாது.  தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் இப்படி ஒரு முற்போக்கான ஆணையை பிறப்பித்துள்ளதால் அவர் ஒரு மதசார்பற்றவர் என்றோ சமூகம் ஜனநாயக மயமாக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர் என்றோ எந்த பிரமையும் நமக்கு இல்லை.  ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, அவர் ஒரு மதவாதி என்பதில் எவ்வகை ஐயத்திற்கும் இடமில்லை.  மற்ற திராவிடக் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்களைப்போல் அவர் பகுத்தறிவுப் பாசாங்கு கூடச் செய்வதில்லை.  கோயில்களுக்கு யானைகள் வழங்குவதற்கோ, வீட்டில் யாகங்கள் செய்வதற்கோ அவரது திராவிட பாரம்பரியம் சிறிதளவு கூட குறுக்கே நின்றது கிடையாது.  எனவே அவர் இந்த அரசாணையை பகுத்தறிவாளர் என்ற நிலையில் நின்றோ, அல்லது  மதசார்பற்ற தன்மையை பிரதிபலித்தோ முற்போக்காக கொண்டு வந்துள்ளார் என்று எண்ணுவதற்கு சிறிதும் இடமில்லை.

ஆணைபிறப்பிக்கப்பட்டதன் அரசியல் பின்னணி 
                பி.ஜே.பி கட்சியினர் எப்பொழுதுமே பசுவதை தடை குறித்து பேசி வந்தாலும் சமீபத்தில் மத்திய பிரதேச காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் திக் விஜயசிங் அவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக அந்த கோஷத்தை கையிலெடுத்தவுடன், காங்கிரஸ் ஒத்துழைத்தால் பசுவதை தடைச் சட்டத்தை உடனே கொண்டு வருவோம் என கொக்கரிக்கத் தொடங்கினர்.  இந்த விஷயம் சூடுபிடிக்கத் தொடங்கியவுடன் பகுத்தறிவு வாதத்தை அவ்வப்போது தங்களது நாடாளுமன்ற அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திவரும் தி.மு.க வின் தலைவர் பசு என்பது மற்ற விலங்குகளைப் போல் ஒன்றுதானே, அதனைக் கொல்வதை மட்டும் ஏன் தடை செய்ய வேண்டும் ?”  என கேள்வி எழுப்பினார்.  அதற்கு பி.ஜே.பி கட்சியின் தமிழ் மாநில தலைவர், அனைத்து விலங்குகளை கொல்வதையும் தடை செய்தாலும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என பதிலளித்தார்.   இந்தப் பின்னணியில் தான் ஜெயலலிதா அரசின் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதே சமயத்தில் சில கிராமக் கோவில்களில் நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகள் பலியிடப்பட்ட செய்தி வெளிவந்ததும் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டதற்கு மற்றொரு பின்னணியாகும்.
                இதைத் தவிர முற்போக்கானதாகக் காட்சியளிக்கும் இந்த ஆணை  பிறப்பிக்கப்பட்டதற்கு வேறு பின்னணியும் உள்ளது.  ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசாங்கம் இரண்டாவது முறையாக பதவியேற்ற காலம் தொட்டு பலவகையான மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம்.  இக்கால கட்டத்தில் மக்களுக்கு அரசாங்கம் இதுவரை அளித்து வந்த பல்வேறு சலுகைகள் திரும்பப் பெறப்பட்டன.  கல்வி, பேருந்து, மின் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.   இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டது.  இது தவிர அரசு ஊழியர் - ஆசிரியர் போராட்டத்தினை ஈவிரக்கமின்றி ஒடுக்கியதோடு அத்தியாவசிய பணிப் பராமரிப்புச் சட்டத்தினை பயன்படுத்தி வரலாறு காணாத விதத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதும் இந்த ஆட்சியில் தான்.  உழைக்கும் மக்களின் வேலைநிறுத்த உரிமை போன்ற அத்தியாவசிய   உரிமைகளைப் பணிப்
பராமரிப்புச் சட்டத்தினை  அமல் செய்து பறிப்பது மக்களின் அடிப்படை
மற்றும் சிவில் உரிமைகளைப் பறிக்கும் போட்டோ சட்டத்தினை கொண்டுவர தூண்டுகோலாக இருந்ததோடு அதனை தன் அரசியல் எதிரிகளின்  தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக பயன்படுத்துவது போன்ற ஜனநாயக விரோத செயல்களில் இந்த அரசு தங்குதடையின்றி ஈடுபட்டு வருகின்றது.  தனக்கும் தனது அரசுக்கும் எதிரான விமர்சன குரல்களை ஒடுக்கும் இந்த அரசின் அடக்குமுறை நடவடிக்கைக்கு பலம் வாயந்த பத்திரிக்கைகள் கூடத் தப்பவில்லை.  மொத்தத்தில் தனது அரசாங்கத்திற்கு எதிராக வரும் எதிர்ப்புக்குரல்களை எந்த வகையில் எல்லாம் நசுக்க முடியுமோ அந்த வகையிலெல்லாம் நசுக்கும் நடவடிக்கைகளை எடுத்து இந்த அமைப்பினை ஒரு ஜனநாயக விரோத, பாசிஸ சூழ்நிலையை நோக்கி கொண்டு சென்று கொண்டுள்ளது.  
பாசிசத்தின் இரட்டை முகம்
                பாசிசம் என்றால் அது ஒரு இராணுவ சர்வாதிகாரம் அல்லது அப்பட்டமான அடக்குமுறை ஆட்சி என்பதே பாசிசம் குறித்த பொதுவான கருத்தாக உள்ளது.  ஆனால் பாசிச ஆட்சியாளர் களுக்கு அடக்குமுறை என்ற முகத்தோடு வேறொரு முகமும் இருந்ததை வரலாறு பல சமயங்களில் நமக்குக் கோடிட்டுக் காட்டுகின்றது.  ஹிட்லர் போன்ற தீர்மானகரமான பாசி°டுகள் கூட அடக்குமுறைத் தன்மையோடு வெளிப்படையாக முற்போக்காக காட்சியளிக்கும் சில செயல்களை தங்களைப் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் மக்கள் மத்தியில் ஏற்படுவதற்காக செய்யவே செய்தனர்.  கள்ள மார்க்கெட்காரர்களையும், கந்து வட்டிக் காரர்களையும்  விளக்குக் கம்பங்களில் தூக்கிலிடுவது போன்ற செயல்களில் ஹிட்லர் ஈடுபடவே செய்தான்.  அதைப்போலவே தமிழகத்தை ஆளும் ஜெயலலிதாவும் கந்துவட்டித் தடைச் சட்டம், லஞ்சத்திற்கு எதிரான அதிரடி நடவடிக்கைகள், தொலைநோக்குப் பார்வையுடன் செயல் படுவதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கும் மழைநீர் சேகரிப்புத்திட்டம் போன்ற நடவடிக்கைகளையும் கண்கூடாக வெளியே தெரியும் அடக்குமுறை நடவடிக்கைகளோடு சேர்த்தே எடுத்து வருகின்றார்.  எத்தகைய எதிர்ப்புகளையும் பொருட் படுத்தாது எதையும் செய்யக்கூடிய மனவலிமை படைத்தவர் என்ற எண்ணத்தை உருவாக்கும் விதத்தில் அவர் எடுத்துள்ள மற்றொரு நடவடிக்கைதான் ஆடு, கோழி போன்றவற்றை கோயில்களில் பலியிடுவதை தடை செய்து பிறப்பித்துள்ள இந்த ஆணையாகும். உள்ளபடியே பத்தாம்பசலித்தனமான மனநிலையும் மூடநம்பிக்கைகளும் தலைவிரித்தாடும் நமது கிராமப்புற மக்களை ஒருமுறை பருவமழை பொய்த்தால் கூட பலி கொடுப்பதை நிறுத்தியதால் ஏற்பட்ட தெய்வக் குற்றம் தான் அதற்குக் காரணம் என யாரும் எளிதில் எண்ண வைக்க முடியும்.  இப்படிப்பட்ட ஒரு அபாயகரமான வாய்ப்பு தன் அரசியல் எதிரிகளுக்கு இதன் மூலம் உருவாகும் என்று தெரிந்தும் கூட இந்த ஆணையை அவர் பிறப்பித்துள்ளார் என்றால் அதற்குக் காரணம், தனக்குச் சரியெனத் தோன்றுவதை எப்படியும் செய்து முடிக்கும் தைரியம் படைத்தவர் என்ற தன்னைப் பற்றிய எண்ணத்தை மக்கள் மத்தியில் பரவ விடுவதற்குதானே தவிர வேறெதெற்கும் அல்ல.  ஏனெனில் இன்று மீளமுடியாத நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்  முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதற்கு இத்தகைய உறுதித்தன்மைவாய்ந்த ஆட்சியாளர்கள் தான் தேவைப்படுகின்றனர்.
அரசாணை குறித்த சரியான அரசியல் நிலை
                தமிழக அரசின் ஆடு, கோழி பலியிடத்தடை செய்யும் இந்த  அரசு ஆணை, சமூகத்தை ஜனநாயக மயப்படுத்தும் போக்கில் - எவ்வளவுதான் சிறிய அளவில் என்றாலும் அதனளவிற்கு - ஒரு சிறு முன்னேற்றமேயாகும்.  ஆனால் அது ஜெயலலிதா போன்ற வெளிப்படையான தவறான நபர் ஒருவரால் வெளிப்படையான தவறான நோக்கத்திற்காக கொண்டு வரப்படும் சரியான விஷயமாக இருப்பதே இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும்.  இதே போல், மத்தியில் பி.ஜே.பி கட்சியினர் சமீபத்தில் ஒரு உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து தங்களது நீண்ட நாள் திட்டத்தில் ஒன்றான பொது சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து தற்போது  பேசி வருகின்றனர்.  ஆனால் அப்பொதுசிவில் சட்டம் என்பது பி.ஜே.பி கட்சியினர் கூறும் பொது சிவில் சட்டமாக இல்லாமல், உண்மையிலேயே விஞ்ஞான ரீதியான ஜனநாயகப் பூர்வமான பொது சிவில் சட்டமாக இருந்தால் அதுவும் சமூகத்தை ஜனநாயக மயப்படுத்தும் போக்கில் ஓர் அடி முன்னெடுத்து வைப்பதே ஆகும்.  ஆனால் இங்கு அப்பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது எல்லோரும் அறிந்த தவறான கட்சியான பி.ஜே.பி யால் தவறான நோக்கத்திறகாக கொண்டுவரப்படும் சரியான விஷயம் ஆகும்.  எனவே இது போன்று தவறான நோக்கத்திற்காக தவறானவர்களால் ஒரு சரியான திட்டம் கொண்டுவரப்பட்டால் அது குறித்து அரசியல் கட்சிகளின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்பது இங்கு அவசியமாகின்றது.  அங்ஙனம் பார்க்கும் போது ஆளும் கட்சியினர் எதனைச் செய்தாலும் அதனை விமர்சித்து ஆட்சியதிகாரத்தில் அமர அருகதையுடைவர் தாங்கள் தான் எனக் காட்ட விரும்பும் தி.மு.கழகம், காங்கிர° போன்ற  கட்சியினரை இங்கு நாம் குறிப்பிடவில்லை.  ஏனெனில் அவர்களுக்கும் ஆட்சியதிகாரத்தில் தற்போது இருக்கும் அ.தி.மு.க போன்ற கட்சிகளுக்கும் அடிப்படையில் கொள்கைகளோ சமூகம் குறித்த தொலைநோக்குப் பார்வைகளோ இல்லை என்பதை நாம் அறிவோம்.  நடைமுறைரீதியில் சொன்னால் இவர்களில் ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்களின் கொள்கை தங்களது ஆட்சியதிகாரத்தை எவ்வாறேனும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாக இருக்கும்.  ஆட்சியதிகாரத்தில் இல்லாதவர்களின் கொள்கையோ எவ்வாறேனும் ஆட்சிக்கு வரவேண்டும்என்பதாக இருக்கும்.  இவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும்  என்பதற்காக சூழ்நிலையைப் பொறுத்து யாருடனும்  கூட்டுச் சேர்வார்கள்.   கேட்டால் அரசியல் நிர்ப்பந்தம்என்பார்கள்.  சமீப காலங்களில் இப்படிப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களின் சந்தர்ப்பவாத நிலைபாடுகளை நியாயப்படுத்துவதற்காக அடிக்கடி பயன்படுத்துவது இந்த அரசியல் நிர்ப்பந்தம் என்ற வார்த்தையைத்தான்.  இக்கட்சிகள், ஆளும் கட்சி எதைச் செய்தாலும்  அதை எதிர்ப்பார்கள்.  அவ்வாறு எதிர்ப்பதனால் ஒரு பகுதி மக்களின் வாக்குகள் தங்கள் பக்கம் திரும்புமா என்பதிலேயே அவர்களது கவனம் இருக்கும்.  இது போன்ற கட்சிகள் தமிழக அரசின் இந்த ஆணை குறித்து என்ன நிலை எடுக்கின்றார்கள் என்பதைப் பற்றி நமக்கு அதிக சிரத்தை இல்லை.  ஏனெனில் இக்கட்சிகளைப் பற்றி உணர்வு பெற்ற உழைக்கும் மக்களுக்கு எவ்வித பிரமையும் இல்லை.  இவை  போன்ற கட்சிகளைத் தவிர தங்களுக்கென்று உண்மையான கொள்கைகள் இருப்பதாக காட்டிக் கொள்ளக் கூடியவை கம்யூனி°ட் கட்சிகள் என்ற பெயரில் செயல்பட்டு வரும் கட்சிகளாகும்.  இந்தக் கட்சிகளின் நிலைபாட்டைத் தான் நாம் ஆழ்ந்து பார்க்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.  ஏனெனில் இக்கட்சிகளும் தாங்கள் ஆட்சியதிகாரத்தில் இருந்த - இருக்கின்ற மாநிலங்களில் பெரிய அளவில் முதலாளித்துவ கட்சிகளைப் போல் கொள்கைகளுக்கு எம்மதிப்பும் கொடுக்காமல் செயல்படுவது அம்மாநில மக்கள் மத்தியில் அம்பலமாகியிருந்தாலும் தமிழ் நாட்டைப் போன்ற அக்கட்சிகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திராத மாநிலங்களில் அவை அத்தனை தூரம் அம்பலமாகாதவையாகவே உள்ளன.  மேலும் அக்கட்சிகளின் தலைவர்களில் பலர் விடுதலைப் போராட்ட காலத்தில் செய்த தியாகங்கள் காரணமாக தமிழகம் போன்ற மாநிலங்களில் சாதாரண மக்கள் மத்தியில் அவர்கள் குறித்து சிறிதளவிலான பிரமை இருப்பதையும் காணமுடிகிறது.
                சமூகத்தை ஜனநாயகமயப் படுத்துவதில் ஒரு சிறு முன்னேற்றமாக இருக்கக்கூடிய தமிழக அரசின் இந்நடவடிக்கை ஜெயலலிதா போன்ற தவறான நபர்களால் தங்களுக்கும் சமூக சீர்திருத்தவாதி என்ற இமேஜ் வேண்டும் என்ற தவறான நோக்கத்திற்காக எடுக்கப்படும்போது சமூகம் ஜனநாயகமய மாக்கப்பட வேண்டும் என்ற கருத்தையுடைய கம்யூனி°ட் கட்சிகளின் நிலைபாடு, அந்த நடவடிக்கைகள் எந்தத்தவறான  நோக்கோடு கொண்டு வரப்படுகின்றன  என்பதை அம்பலப்படுத்துவதாக இருக்க முடியுமேயொழிய அந்த நடவடிக்கையையே அடியோடு எதிர்ப்பதாக இருக்க முடியாது.  ஜெயலலிதா போன்ற பல்வேறு  மதவாத மூடநம்பிக்கைகளில் இருந்து உண்மையில் விடுபட்டிராதவர்களை அம்பலப்படுத்த நாம் முன்வைக்கும் கோரிக்கை, யாகக் குண்டங்களில் பட்டுச் சேலைகளை எரிப்பதையும் குடம் குடமாக நெய்யை ஊற்றுவதையும் தடை செய்யவும் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பதாக  இருக்கலாமே தவிர ஆடு, கோழி பலியிடல் தடை ஆணையையே திரும்பப் பெற வேண்டும் என்பதாக இருக்க முடியாது.  இதைப் போலவே பி.ஜே.பி. கட்சி கொண்டு வர விரும்பும் பொது சிவில் சட்டம் கிறி°தவ இ°லாமிய சட்டங்களில் இருக்கக்கூடிய காலாவதியாகிப் போன அம்சங்களை அகற்றுவதாக மட்டும் இருக்கக் கூடாது, அத்துடன் அது இந்து மதச் சட்டங்களில் சொத்துரிமை போன்றவற்றில் பெண்களுக்கு பாதகமாக இருக்கக் கூடிய பிற்போக்கு அம்சங்களையும் போக்குவதாக இருக்க வேண்டும் என்பதோடு, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட உண்மையான நடுநிலை அமைப்பைக் கொண்டே அத்தகைய பொது சிவில் சட்டம் வரைவு செய்யப்பட வேண்டும் எனக் கோரலாமே தவிர பொது சிவில் சட்டமே கூடாது என்பதாக இருக்க முடியாது.
                இத்தகைய சரியான நிலைபாடு எடுப்பதை விடுத்து தமிழ் நாட்டில் கம்யூனி°டுகள் என்ற பெயரில் செயல்பட்டு வரும் CPI, CPI(M) போன்ற கட்சிகள் இந்த ஆடு, கோழி பலியிடுவதை தடை செய்யும் ஆணையை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை உரத்த குரலில் எழுப்புகின்றனர்.  அவர்களது  கட்சிகளின் சார்பாக, “கருப்பு கேட்கிறான் கிடா எங்கே ?” “விலங்கு உயிர்ப்பலித்தடைச் சட்டத்தின் அரசியல்போன்ற பிரசுரங்களையும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வெளியிட்டுள்ளனர். மேலும் இதனை வலியுறுத்தி கிராமக் கோயில் பூசாரிகளையும் பங்கேற்கச் செய்து கருத்தரங்குகளையும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.  அதிதீவிர கம்யூனிஸ்ட் குழுக்கள்  என அறியப்படும் மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் கலாச்சாரக் கழகம் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களோ இதையும் ஒரு படி தாண்டிச் சென்று கோயிலில் கிடா வெட்டி அதனைத் தங்கள் தோள்களில் சுமந்து ருத்ரதாண்டவமூர்த்தி வடிவத்தில் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.  அவர்களது செயல்கள் அவர்கள் கொண்டு வர விரும்புவது புதிய கலாச்சாரமா அல்லது பழைய காட்டுமிராண்டித்தனமா என்ற ஐயத்தை நம்மிடையே ஏற்படுத்துவதாக உள்ளது.  மார்க்ஸ், எங்கெல்ஸ் காலம் தொட்டு இன்றுவரை மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்டுபாடுகளைச் சிதைக்கும் எத்தனையோ போக்குகள் தங்களை கம்யூனிஸ்ட்டுகள் என்று அழைத்துக் கொள்ளக் கூடியவர்களால் புரட்சிகர மார்க்ஸிஸத்தின்  முன் வைக்கப்பட்டுள்ளன.  உண்மையில் புரட்சிகர மார்க்ஸிஸத்தின் வரலாறு, இத்தகைய போக்குகளை எதிர்த்து அது நடத்திய போராட்ட வரலாறே என்றால் மிகையல்ல.  ஆனால், அந்தப் போக்குகள் அனைத்தையும் தாண்டி இந்த அளவிற்குத் தரம் தாழ்ந்த ஒரு போக்கும் நிலைபாடும் உலகின் எந்த நாட்டிலும் தங்களைக் கம்யூனி°டுகள் என்று அழைத்துக் கொள்ளக் கூடிய எந்த அமைப்பாலும் இதுவரை எடுக்கப் பட்டதில்லை என்றே கூற வேண்டும்.  அந்த வகையில் இந்தக் கம்யூனி°ட் கட்சிகள் ஈடு இணையற்றவைதான்.  இந்த அளவிற்கு மார்க்சிஸத்தை விட்டு வெகுதூரம் விலகிவந்து விட்ட இவர்கள் முன்வைக்கும் வாதங்களை எதிர் கொள்வதற்கு முன் மதங்கள், கடவுள் நம்பிக்கை குறித்த மார்க்சிய நிலை பாட்டை இவர்களுக்கு நினைவூட்டுவது அவசியமாகின்றது.
மார்க்சிய வாதிகளின் மதம் குறித்த பார்வை
                இந்தக் காலகட்டத்தின் மிக உயர்ந்த சித்தாந்தமாகவும் சமூகத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கூற வல்லதாகவும் உள்ள கம்யூனிஸ சித்தாந்தத்தை முன் வைத்த மார்க்ஸ் முதல் மாவோ வரையிலான மாபெரும் சிந்தனையாளர்கள் அனைவரும் கடவுள் நம்பிக்கை குறித்தும் மதங்கள் குறித்தும் எவ்வித குழப்பமுமற்ற மிகத்தெளிவான பார்வையைக் கொண்டிருந்தனர்.  மதம் என்பது மக்களை மயக்கத்தில் ஆழ்த்தும் அபினி ; சமூகத்தில் ஆளும் வர்க்கமாக இருந்து கொண்டு மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூலகாரணமாக இருக்கக் கூடிய முதலாளிவர்க்கத்தை மூடி மறைத்துக் காக்கும் பணியினையே அது செய்கிறது ; ‘இந்த உலகத்தில் மக்கள் துன்பப்பட்டால் மேல் உலகில் ஒரு மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அவர்களுக்காக காத்திருக்கிறது ; ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் பணக்காரன் மோட்ச ராஜ்ஜியத்தை அடைய முடியாது’  என்பன போன்ற கருத்துக்களை முன்வைப்பதன் மூலம் அது மக்களின் நிதர்சனமான எதிரியாகிய சுரண்டல் முதலாளி வர்க்கத்தைக் காக்கும் பணியினை  செவ்வனே ஆற்றுகின்றதுஎன்பன போன்ற தீர்க்கமான கருத்துகளை முன்வைத்த கம்யூனிஸ சித்தாந்தத்தின் மாபெரும் தலைவர்கள் கடவுள் மற்றும் மத எதிர்ப்புப் பிரசாரத்தை  கம்யூனிசத்தின் பிரிக்க முடியாத பகுதியாகவே வைத்திருந்தனர்.  இந்தப் பிரபஞ்சமும் அதிலுள்ள அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களும் கடவுளால் படைக்கப்பட்டவைஎன்ற கருத்தை முற்றாக மறுதலித்து, “இவை அனைத்தும் யாராலும் படைக்கப்படவில்லை; இவை பொருளால் (material) ஆனவை; திட, திரவ மற்றும் வாயு வடிவங்களில் இருக்கும் இந்தப் பொருள் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறும் தன்மை கொண்டது, பொருள் எப்போதும் இருந்து வந்துள்ளது.  உயிரற்ற பொருளில் இருந்தே உயிர்ப்பொருள் பல லட்சக் கணக்கான ஆண்டுகளின் வளர்ச்சிப் போக்கில் உருவானது ; உயிர்ப் பொருட்களில் ஒரு செல் உயிர்கள் முதற்கொண்டு மனிதன் வரை பல லட்சக் கணக்கான ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியே.  கடவுள் இந்தப் பிரபஞ்சத்தையும் உலகத்தையும் மனிதனையும் படைக்கவில்லை; மாறாக மனிதனின் மூளை எனும் சிந்திக்கும் திறன் கொண்ட பொருள்தான் கடவுள் என்ற எண்ணத்தை - இயற்கை சக்திகளை வெற்றி கொள்ளும் அளவிற்கு விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின்றி மனிதன் இருந்த காலத்தில் - படைத்தது என்பன போன்ற கருத்துக்களை உள்ளடக்கிய பொருள் முதல்வாத தத்துவத்தை மதவாதிகள் முன் வைத்த கருத்து முதல் வாதத்திற்கு எதிராக வைத்தது.  அக்கருத்துக்களை கம்யூனிஸத்தின் மாபெரும் தலைவர்களான எங்கெல்ஸும் லெனினும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் துணை கொண்டு ஆணித்தரமாக நிரூபித்துக் காட்டவும் செய்தனர்.   கடவுளின்றி ஒரு அணுவும் அசையாது ; அனைத்துமே விதிப்பயன் ; மனிதன் கடவுளின் கரங்களில் உள்ள விளையாட்டு பொம்மைஎன்பன போன்ற துடிப்பும் ஜுவனுமற்ற சோர்வு வாதச் சிந்தனையை மதவாத சிந்தனையாளர்கள் முன் வைத்த வேளையில், “மனிதனால் அறிய முடியாதது என்று எதுவுமில்லை; இருப்பினும் அவன் பலவற்றை அறிந்து கொண்டு செல்லச் செல்ல அறிய வேண்டியவையும் அனேகம் இருந்து கொண்டே இருக்கும்; ஏனெனில் இந்தப் பிரபஞ்சமும் அதில் உட்பொதிந்துள்ள விதிகளும் அளவற்றவை ; ஒன்றைத் தெரிந்து கொள்ளும்போது இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொன்று தெரிய வரும்என்ற உயிரோட்டமான ஆக்கபூர்வமான துடிப்புமிக்க சிந்தனையை முன் வைத்தது மார்க்சிஸம்.
ஜாதீய வாதத்தை கையிலெடுப்பதற்காக முன் வைக்கப்படும் சொத்தை வாதங்கள்
                இந்த வலுவான தத்துவார்த்தப் பின்னணியில் நின்று மதம் மற்றும் கடவுள் சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றையும் ஆராய்பவர்களே மார்க்சியவாதிகள்.  இதனை விடுத்து இந்தக் கட்சிகள் இந்த ஆணையினால் சிறு தெய்வ வழிபாடு அழிந்து போகும் ; சிறு தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டிருப்போர் தமது அடையாளத்தை இழந்து விடுவர் ; பெருந்தெய்வ பார்ப்பனீய வழிபாடு முறை எங்கும் பரவி விடும் ; தொன்று தொட்டு இருந்து வரும் பழக்க வழக்கத்தை ஆணையிட்டுத் தடுக்கக் கூடாது என்று சிறு தெய்வ வழிபாட்டிற்கு துதிபாடுபவர்களாக தங்களை அடையாளப் படுத்திக் கொண்டுள்ளனர்.  இதனைக் காட்டிலும் ஓர்படி மேலே சென்று சிறு தெய்வ வழிபாட்டு முறைகள் ஜனநாயகப் பூர்வமானவை என்றும்  கூறத் தொடங்கியுள்ளனர்.  முதற்கண் இவர்கள் கூற முன்வருவது எந்த வகை ஜனநாயகம் முதலாளித்துவம் முற்போக்கானதொரு பாத்திரத்தை வகித்த காலத்தில் தோன்றிய ஜனநாயகமா? அல்லது இன்று முதலாளித்துவ அமைப்பு தனது முற்போக்குத் தன்மையை முற்றிலும் இழந்து சமூகத்திற்கு ஆக்கப்பூர்வமாக வழங்குவதற்கென  தன் கைவசம் எதையும் கொண்டிராததாகி, வெறிவாதத்தையும் பாசிசத்தையும் முன் வைக்கும் நிலையில் ஜார்ஜ் புஷும், டோனி பிளேரும் பேசும் வாய்ச்சவாடல் ஜனநாயகமா? என்பது தெளிவு படுத்தப்பட வேண்டும்.  ஏனெனில், இங்கு முதலில் குறிப்பிட்ட முற்போக்கு ஜனநாயக மதிப்புகள் விஞ்ஞானமும் மதச்சார்பற்ற கருத்துக்களும் பகுத்தறிவு சிந்தனைகளும் தோன்றி வளர்ந்த காலத்தில் தோன்றியவையாகும்.  மனிதனை முதன்மைப் படுத்தி அவனுக்கு அப்பாற்பட்ட அவனால் கட்டுப்படுத்த முடியாத சக்திகள் என எதுவும் இல்லை என்ற அடிப்படையில் எழுந்ததே அந்த ஜனநாயக மதிப்புகளாகும். அம்மதிப்புகள் குருட்டுத் தனத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள மதவாதத்தினால் நிச்சயமாக கடைபிடிக்கப்பட முடியாது.
பாசிசத்தைக் கொண்டு வர பயன்படும் சாதனமே மதவாதம்
                பௌத்தம், சமணம், கிறிஸ்தவம் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதாக இருந்த மதங்களே இன்று வறட்டுச் சடங்குகளையும் வெறித்தனங்களையும் பரப்புபவையாக ஆகிவருவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.  ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதாக இருந்த கிறிஸ்தவ மதம் காலாவதியாகி நிலப்பிரபுத்துவ ஆட்சிக்காலத்தில் அரசாங்க மதமாக அங்கீகரிக்கப்பட்டு மன்னராட்சிக்கு சேவை புரிந்தது.  அதன்பின் ஏற்பட்ட முதலாளித்துவ சமூக அமைப்பில் தன்னகத்தே தேவையான மாறுதல்களைச் செய்து கொண்டு இன்று அடிப்படையில் சுரண்டல் முதலாளித்துவ அமைப்பிற்கு சேவை செய்யும் ஒரு நிறுவனமாக அது ஆகியுள்ளது.  அதைப்போலவே பௌத்த, சமண மதங்களும் அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளை கைவிட்டுச் சடங்குகளை பிடித்துத் தொங்கும் அமைப்புகளாக நடைமுறையில் ஆகி இந்தச் சுரண்டல் அமைப்பின் பங்கும் பகுதியுமாக இருப்பதைப் பார்க்கிறோம்.  ஒரு  காலத்தில் உன்னதமான உயரத்தில் இருந்த பௌத்தமதம் இன்று இலங்கையில் சிங்களப் பேரின வாத பாசிசத்தின் பாதுகாவலனாக இருப்பதைப் பார்க்கிறோம்.  இவை அனைத்தும்இன்று அனைத்து மதங்களும் தங்களது வரலாற்றுப் பாத்திரத்தை உள்ளடக்கத்தில் அறவே இழந்து விட்டன; அந்த மதங்களை உருவாக்கியவர்கள் அவர்களது கால சமூகத் தேவைகளையும் முரண்பாடு களையும் கணக்கிலெடுத்துக் கொண்டு வகுத்தெடுத்த கருத்துக்களும் கண்ணோட்டங்களும், அன்றைய காலகட்டத்தில் முற்போக்கானவையாக இருந்தது போல் இல்லாது இன்று அவை முழுக்க முழுக்க பிற்போக்கானவையாக ஆகி விட்டன என்பதையே உணர்த்துகின்றன.  ஒரு கருத்தோ அல்லது கண்ணோட்டமோ பிற்போக்கானதாக ஆகி விட்டதென்றால் அது சமூகப் பாத்திரம் எதையும் வகிக்காமல் ஒதுங்கி இருந்து விடுவதில்லை.   குருட்டுத்தனமான மக்கள் ஆதரவையும் பின்பற்றலையும் கொண்டிருப்பதாக அது இருக்கும் போது நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இன்றைய ஆட்சியாளர்களுக்கு பாசிசத்தைக் கொண்டு வர உதவும் ஒரு சாதனமாகவே அது பயன்படுகின்றது.  இலங்கையில் புத்தமதம் போன்றதொரு மதம் கூட இந்த ரீதியில் செயல்படுவதை நாம் பார்க்காதிருக்கக் முடியாது.  உலக அளவில் இன்று உருவாகி வரும் முரண்பாடு நாகரீகங்களுக்கிடையிலான முரண்பாடு என்ற கருத்தை முன்வைத்து மேற்கத்திய ஏகாதிபத்திய சிந்தனையாளர்கள்   கிறி°தவ மதம் சார்ந்த முன்னேறியமேற்கத்திய நாகரீகத்திற்கும்  அவர்களால் பின்தங்கிய தெனக் கருதப்படும் இ°லாமிய மதம் சார்ந்த நாகரீத்திற்கும் இடையில் ஒரு செயற்கைப் பிரிவை தங்களது பாசிச நோக்கங்களுக்காக கொண்டு வர முயற்சிக்கின்றனர்.  இவ்வாறு கிறி°தவ மதமும் பாசிசத்தைக் கொண்டுவர ஒரு சாதனமாக பயன்படுத்தப்படுவதை இங்கு நாம் பார்க்கிறோம்.
                இந்நிலையில் கிறிஸ்தவம் பௌத்தம், சமணம் போன்ற மதங்களைப் போல் அல்லாமல் இந்து மதமும் அதற்கு முன்னோடியான வேதகால மதமும் எப்பொழுதுமே ஒரு மேட்டுக் குடி மக்களின்  மதமாகவே இருந்து வந்ததாகும்.  புத்த, சமண மதங்களின் அச்சுறுத்தல் அதற்கு ஒரு பெரும் சவாலாக வந்த போது, சாதாரண மக்களையும் தன் வட்டத்துக்குள் கொண்டுவரும் பொருட்டு அவர்களின் வழிபாட்டுத் தெய்வங்களையும் இந்து மதக் கடவுள்களாக ஆக்கியது. அதற்கு ஏதுவாக அவதாரக் கண்ணோட்டத்தையும் புராண, இதிகாச புனை கதைகளையும் கொண்டு வந்தது.  இவற்றின் மூலமாகத் தான் பல சிறு தெய்வங்கள் இந்துக் கடவுள்களாக இந்து மதம் எனும் பொது நீரோட்டத்தில் ஐக்கியமாயின.  வேதகால மதத்திலோ அதற்கு சற்று பிந்திய காலத்திலோ கோயில்கள் என வழிபாட்டுத் தலங்கள் இருந்ததாக சான்றுகள் இல்லை.  பௌத்தத்தின் தோற்றம் பிராமணவாத இந்து மதத்திற்கு பிந்தியது எனினும் பௌத்தர்களே முதன் முதலில் விஹாரங்கள் எனப்படும் ஒரு வகையான கோவில்களை ஏற்படுத்தியவர்கள்.  அந்நிலையில் சாதாரண மக்களையும் தனது ஒருங்கிணைப்பிற்குள் கொண்டுவரும் பொருட்டுத்தான் பௌத்தர்களின் வழியினை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இந்துமதக் கோயில்கள் கட்டப்பட்டன.
                இவ்வாறு ஆரம்பம் முதற்கொண்டே ஒடுக்கப்பட்ட மக்களின் மதமாக இல்லாமல் மேட்டுக் குடி மக்களின் மதமாக இருந்த இந்து மதம் எந்த நிலையிலும் சமூக வளர்ச்சிக்கு எந்தவொரு முற்போக்கான பங்களிப்பையுமே வழங்காததாக இருந்ததோடு ஆரம்பம் முதற்கொண்டே ஆளும் வர்க்கமான மேட்டுக் குடிமக்களின் மதமாகவே இருந்து வந்துள்ளது.
சிறு தெய்வ வழிபாடு - இந்து மதத்தின் பங்கும் பகுதியுமே

                இந்து மதம் எனப் பொதுவில் நாம் கூறுகையில் சிறுதெய்வ வழிபாடு இந்து மதத்திற்கு எதிரானது அல்லது அதிலிருந்து வேறுபட்டது என்ற வாதத்தை முன் வைக்கின்றார்கள்.  ஆனால் சிறு தெய்வ வழிபாடு செய்பவர்கள் தங்களை இந்துக்கள்என்றுதான் அடையாளப்படுத்திக் கொள்கிறார்களே தவிர தங்களது வேறுபட்ட வழிபாட்டு முறையின் காரணமாக தாங்கள் இந்துக்கள் அல்ல என்று எண்ணுவதுமில்லை செயல்படுவதுமில்லை.  ஆதிக்க சக்திகளை ஒரு காலகட்டத்தில் எதிர்த்தவர்களை அவர்கள் தெய்வமாக வழிபட்டாலும், அந்த வழிபாட்டு முறையில் ஆதிக்க எதிர்ப்பு  என்ற மனநிலை பிரதானமான பங்கினை வகிப்பதில்லை.    அப்படி ஒரு பங்கினை வகிக்க வேண்டுமென்றால் அது ஒரு சமூக இயக்கமாக இருக்க வேண்டும்.  ஆனால் சிறு தெய்வ வழிபாடு ஓர் சமூக இயக்கமாக உருவாகவில்லை.  இன்றைய கால கட்டத்தில்  மதம் என்பதே  ஆக்கபூர்வமான சமூகப் பாத்திரம் எதையும் வகிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சூழ்நிலையில் இனிமேல் அது சமூக இயக்கமாக உருவாகவும் முடியாது.  பௌத்த, சமண, கிறிஸ்தவ மதங்களைப் போல் ஒரு ஒருங்கிணைந்த சக்தியாக எந்தக் காலகட்டத்திலும் ஆதிக்க சக்திகளை இந்த சிறு தெய்வ வழிபாட்டுப் போக்கு எதிர்த்ததில்லை.  ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து வந்து தங்களது  தனிப்பட்ட வீர பராக்கிரமங்களினால் பிரபலமடைந்தவர்கள் ஆதிக்க சக்திகளால் கொல்லப்பட்டபோது அவர்களை கடவுள்களாக்கி வழிபட்டனரே தவிர, அவர்கள் வழி நின்று ஆதிக்க சக்திகளை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தை ஊட்டக்கூடியவையாக சிறு தெய்வ வழிபாட்டு முறை இருந்ததில்லை மாறாக இந்து மதம்  என்ற பொது நீரோட்டத்தில் அது போன்ற தெய்வங்களாக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த வீரர்களுக்கு (சிறு தெய்வங்களுக்கு) அங்கீகாரம் கிடைத்த போது அவர்களை வழிபடுபவர்கள் அகமகிழ்ந்தார்களே தவிர, அப்போக்கினை விமர்சன ரீதியாகப் பார்க்கவில்லை.  அதனால் தான் தலித்துகளை ஸ்தாபனமயமாக்கி சாதீயக் கொடுமைகளை எதிர்க்க வேண்டும் என விரும்பிய அம்பேத்கர் போன்றவர்கள் கூட அம்மக்களை சிறு தெய்வ வழிபாட்டைத் தொடரவோ, ஆடு கோழிகளை தங்கு தடையின்றி பலி கொடுத்து மூடநம்பிக்கைகளில் மூழ்கித் திளைக்கவோ கூறவில்லை.  மாறாக அவர் அம்மக்களை புத்த மதத்தில் சேருமாறு கூறினார்.  அவர் அவ்வாறு கூறியதற்குக் காரணம் மதங்களைத் தவிர நீதி நெறி ஒழுக்க முறைகளை நிறுவக் கூடிய ஜனநாயகப் பூர்வ அமைப்புகள் அவருக்குத் தென்படாதது தான்.  மார்க்சிஸம் போன்ற வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் தழுவிய, விஞ்ஞானப் பூர்வ, பகுத்தறிவுக்குகந்த ஒரு புதிய நீதி நெறி ஒழுக்க முறைகளை நிறுவ வல்ல ஒரு சித்தாந்தத்தால் அவர் வழிநடத்தப்படாததும் அதற்கான காரணமாகும்.  
மூடநம்பிக்கைகளுக்கும் ஜாதீய அமைப்புக்கும் நிலைக்கலனாக சிறு தெய்வ வழிபாடு
                நடைமுறையில் பெருந்தெய்வ வழிபாடு என இவர்கள் கூறக் கூடிய வழிபாட்டு முறைகளைக் காட்டிலும் மிக மோசமான மூடநம்பிக்கைகள் சிறு தெய்வ  வழிபாட்டில் நிலவுகின்றன.  எனவே அத்தகைய வழிபாட்டில் ஈடுபடும் மக்களுடைய கலாச்சார மேம்பாட்டின் தடைக்கற்களாகவும், அவ்வழிபாட்டுமுறை உள்ளது.  ஜாதி விட்டு ஜாதி செய்யப்படும் திருமணங்கள் தெய்வத்துக்கே அடுக்காதவை என்பன போன்ற மூடக் கருத்துகளை சிறு தெய்வ வழிபாடு ஆதிக்கத்தில் இருக்கும் கிராமப்புறங்களில் இன்றும் காணலாம்.  இது தான் சிறு தெய்வ வழிபாட்டில் நிலவும் இவர்கள் கூறும் ஜனநாயகத்தின்லட்சணம்.  நூற்றுக்கணக்கான ஆடு மாடுகளின்  இரத்தத்தை பூசாரி கடவுள் அருளால் அப்படியே குடித்துவிடுகிறார் என்பது போன்ற ஏமாற்றுத் தனமான செயல்களும் இந்த சிறு தெய்வ வழிபாட்டில் தான் அதிகம் வழக்கில் உள்ளன.  மாமிசத்துடன் கலந்த உணவு உருண்டைகளை வானை நோக்கி வீசியெறிந்தால் அதில் ஒரு பருக்கை கூட கீழே விழாத அளவிற்கு பேய்கள் அதனை உண்டு விடுகின்றன எனக்கூறும் புவி ஈர்ப்பு விசையின் செயல்பாட்டையே மறுதலிக்கும் விஞ்ஞானத்திற்குப் புறம்பான பகுத்தறிவுக்கு ஒவ்வாத பைத்தியக்காரத் தனங்களையும் கிராமக் கோவில் உற்சவங்களில்தான் காணமுடியும்.  அடிப்படையில் பெருந்தெய்வ வழிபாடு பெரிய அளவில் மக்களை ஏமாற்றுவதாக உள்ளது என்றால் சிறு தெய்வ வழிபாடு அதற்குரிய அளவிற்கு மக்களை ஏமாற்றுவதாகத்தான் உள்ளது.
                கிராமப்புற பெருந்தனக்காரர்கள் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்ள சிறு தெய்வங்களுக்கான உற்சவங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர்.  கிராமப்புறங்களில் சிறு தெய்வங்களுக்கான கோவில்களில் குறிப்பிட்ட ஜாதியினர் மட்டும் வழிபடக்கூடிய ஜாதிக்கோயில்களும் எல்லா ஜாதியினரும் வழிபடக்கூடிய ஆனால் அந்தந்த ஜாதிக்குரிய சமூகப்படி நிலைகளுக்கேற்ப தனித்தனியான உரிமைகளைக் கொண்ட பொதுக் கோவில்களும் உள்ளன.  இந்தக் கோவில்களில்நடைபெறும் திருவிழாக்களின் போது யாருக்கு என்ன மரியாதை என்ற பெயரில் ஜாதிய அமைப்பையும் தக்கவைப்பனவாகவே இவை உள்ளன.  கோவில் திருவிழாக்களில் தேர் வடம்பிடிப்பதில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்காத காரணத்தால் பெரும் கலவரங்களும் சிறு தெய்வ வழிபாட்டுத் தலங்களில் நடைபெறுவது வாடிக்கையான ஒன்றாகும்.  சுருங்கக் கூறின், கிராமப் புறங்களில் ஜாதீய அமைப்பின் நிலைக்களனாக இச்சிறு தெய்வ வழிபாடே இருக்கின்றது.  எனவே இன்று மதங்கள் பொதுவாகவும் இந்து மதம் குறிப்பாகவும் அவை பெருந்தெய்வ வழிபாட்டைவலியுறுத்துவனவாக இருந்தாலும் சரி, அல்லது சிறு தெய்வ வழிபாட்டை வலியுறுத்துவனவாக இருந்தாலும் சரி அவற்றுக்கு இன்று சமூக ரீதியாக வகிக்க எந்தவொரு ஆக்க பூர்வமான பாத்திரமும் இல்லை.  அதனால் தான் மதங்களின் மதிப்புகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு அவற்றின் சடங்குகள் மட்டுமே பெரிதும் முன்னிலைப் படுத்தப் படுகின்றன.  அதைக் காட்டிலும் அபாயகரமாக அவை பாசிசத்தைக் கொண்டு வர ஏதுவான சாதனங்களாக ஆளும்  வர்க்கத்திற்கு பயன்படும் தன்மையையும் கொண்டிருக்கின்றன.  இந்நிலையில் சிறுதெய்வ வழிபாட்டை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் அதனை நியாயப்படுத்தவோ அதன் பத்தாம் பசலித்தனமான பழக்க வழக்கங்களுக்கு வக்காலத்து வாங்கவோ ஜனநாயக முலாம் பூசவோ முயன்றால் எந்த அளவிற்கு அச்செயல்களில் ஒரு அமைப்பு ஈடுபடுகின்றதோ அந்த அளவிற்கு அது பாசிசம் வளர உதவி செய்ததாகவே இருக்கும்.
                இத்தனை அபாயகரமான நடவடிக்கையில் ஈடுபடும் இந்த கம்யூனிஸ்டுகள்’  நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைகளில் இது போன்ற அரசு ஆணைகள் மூலம் தலையிட்டால் அம்மக்கள் தங்களது அடையாளத்தை இழந்து விடுவர் என்று வேறு கூறுகிறார்கள்.       ஆடு, கோழி பலியிடுவதை தடைசெய்து பிறப்பிக்கப் பட்டுள்ள இந்த ஆணை பிராமணரல்லாத பிற ஜாதி மக்களிடம் தொன்று தொட்டுஇருந்து வந்த அடையாளத்தை அழித்துவிடும் என்றால் பெருந்தெய்வ வழிபாடு நடக்கும் ஆலயங்களுக்குள் அதுவரை அங்கு அனுமதிக்கப்படாத தாழ்த்தப்பட்ட மக்களை பெருந்திரளாக அங்கு பல சமூகசீர்த்திருத்த வாதிகள் அழைத்துச் சென்றார்களே அதுவும்  இவர்களது பார்வையில் பிராமணீயத்தின் இந்த அடையாள அழிப்புச் சூழ்ச்சியின் பங்கும் பகுதியும் தானோ?
மாறும் என்பதே மாறாத விதி
                ஆனால் எந்தப் பகுதி மக்களுக்கும் எல்லாக் காலத்திலும் சாஸ்வதமாக நிலவக்கூடிய அடையாளம் என்று ஒன்று இருக்கவே முடியாது.  சமூக வாழ்க்கையில் மக்கள் இரண்டறக்கலந்து வாழும் போது எந்த சமூகமும் அல்லது குழுவும் இது தனக்கென உரிய தனித்தன்மை, இதை விட்டுக் கொடுக்கவே மாட்டோம் என இருக்கவே முடியாது.  உதாரணமாகபௌத்த, சமண மதங்களின் பரவலால் பெரும்பாதிப்புக்கு ஆளாகியிருந்த பிராமணீய இந்துமதத்தில் பிராமணர்கள் ஒரு கட்டத்தில் பௌத்த, சமண மதங்களின் புலால் உண்ணாமையை தங்களதாக்கிக் கொண்டு சைவத்தை தங்களது உணவுப் பழக்கவழக்கமாக மேற்கொள்ளத் தொடங்கினர்.  இன்று அந்த சைவ உணவுப் பழக்கம் அவர்களாலேயே அத்தனை கட்டுப்பாட்டுடன் கடைபிடிக்கப் படுவதில்லை என்பதையும் நாம் பார்க்கிறோம்.  பல பிராமணர்கள் பிறருக்குத் தெரியாமல் அசைவ உணவு உண்ணும்போக்கும், மருத்துவ ஆலோசனை என்ற பெயரில் தங்களது குழந்தைகளுக்கு முட்டை போன்ற அசைவ உணவுகளைக் கொடுக்கும் போக்கும் தோன்றியுள்ளது.  அதேபோல் பிராமண தர்மங்களின் படியும் ஆகம விதிகளின் படியும் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்படும் பெருந்தெய்வ வழிபாட்டுக் கோவில்களில் நிரம்பி வழியும் கூட்டம் பெரும்பாலும் சிறு தெய்வ வழிபாட்டில்  ஈடுபடும் மற்ற ஜாதிகளைச் சேர்ந்தவர்களே ஆவர்.  ஆனால் வழிபாட்டு விஷயத்தில் பிராமண வழிபாட்டு முறையுடன் ஒத்துப் போகும் இம்மக்கள் அவர்களது புலால் உண்ணாமையை மட்டும் ஏற்றுக் கொள்வதில்லை.  மேலும், பஞ்சகச்சமும் குடுமியுமே பிராமணர்களின் அடையாளம் எனவும், இடுப்பில் வேட்டியும் தலையில் துண்டும் மட்டுமே மற்றோரின் அடையாளம் எனவும் இருந்தவை மாறி இன்று மேற்சட்டை போடும் மேற்கத்தியக் கலாச்சார அடையாளம் பாரபட்சமின்றி அனைவரையும் ஒட்டிக் கொண்டுள்ளதையாரும் மறுக்க முடியாது.
                இந்த உலகில் மாறும் என்பதே மாறாத உண்மைஎன்பதையே மார்க்சிஸம் நமக்குப் போதிக்கின்றது.  இவ்வாறு மாறிக் கொண்டே இருக்கக்கூடிய மக்களின் அடையாளத்தை மாற்றவே கூடாது என்று அடம் பிடிக்கும் இவர்கள் மார்க்சீயவாதிகளே அல்ல என்பதற்கு இது இன்னுமொரு கூடுதல் ஆதாரமாகும்.
உழைக்கும்  வர்க்கத்தின் உண்மை அடையாளம் சர்வதேச வாதமே
                இன்று உழைக்கும் வர்க்கத்தின் உண்மையான அடையாளம் சர்வதேச அளவில் அவர்கள் அனைவரும் சமூகத்திற்கு தேவையானதை உற்பத்தி செய்து கொடுத்துவிட்டு வறுமையையும் நிராதரவான நிலைமையையும் பகிர்ந்து கொள்ளக் கூடியவர்கள் என்ற பொது அடையாளம் தான்.  உழைக்கும் வர்க்கத்தின் கலாச்சாரம் உண்மையில் சர்வதேச வாதத்தை அடிப்படையாகக் கொண்டது.  அது தேசிய வாதத்திற்கும்  கூட அப்பாற்பட்டது.  பகுத்தறிவிற்கும் விஞ்ஞானத்திற்கும் உகந்தது.  அனைத்து வகை பாரபட்ச மனநிலைகளுக்கும் குறுகிய வாதங்களுக்கும் அப்பாற்பட்டது.  அந்த அடையாளத்தை உழைக்கும் வர்க்கத்திற்கு உணர்த்துவதை விடுத்து சிறு தெய்வ வழிபாட்டு முறை மூலமான அடையாளத்தை நிலைநாட்ட முயல்வதின் மூலம் இவர்கள் கம்யூனி°டுகள்என்ற தங்களின் அடையாளத்தைத்தான் உண்மையில் இழக்கின்றனர். இதன் மூலமாக இவர்கள் சிறுதெய்வ வழிபாட்டிற்கு வேதமியற்றும்  சிவசுப்பிரமணியஆச்சாரியர்களாகவும் வெங்கடேசதீட்சிதர்களாகவும் ஆக முடியுமே தவிர வேறெந்த முற்போக்குசிந்தனையையும் இது போன்ற எழுத்துக்கள்  மூலம் கொண்டுவர முடியாது.
மார்க்சீய வாதிகளின் ஜாதீய வாதம்
                இந்த ஆணை குறித்த விஷயத்தில் இவர்களின் பிரதானமான வாதமே இது பார்ப்பனீய வழிபாட்டு முறையினை எங்கும் பரவ வழிசெய்து விடும்என்பதாகும்.  அதாவது, பிராமண வழிபாட்டு முறையின் பரவலைத் தடுக்க சிறுதெய்வ வழிபாட்டுக்காக குரல் கொடுக்கிறோம் என்ற பெயரில் பிராமணரல்லாத பிற ஜாதிகளைச் சேர்ந்தவர்களை வர்க்க வேறுபாடின்றி தங்கள் பக்கம் இழுக்க மேற்கொள்ளப்படும் ஒரு தந்திரமான முயற்சியே இதுவாகும்.  ஆங்காங்கு சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு தங்களுக்குச் சாதகமாக இலைமறை காயாக இதுவரை ஜாதீய வாதத்தை பயன்படுத்தி வந்த CPI, CPI(M) போன்ற கட்சிகள் இப்போது வெளிப்படையாக அதனைக் கையிலெடுக்கத் தொடங்கியுள்ளதையே இப்போக்கு காட்டுகின்றது.  ஏற்கனவே தேர்தல் சமயங்களில் தங்களது வேட்பாளரை தேர்வு செய்வதில் அவர்கள் போட்டியிடும் தொகுதியில் எந்த ஜாதியினரின் ஓட்டு அதிகமோ அந்த ஜாதியைச் சேர்ந்த தோழரையேவேட்பாளராக தெரிவு செய்வது போன்ற வகைகளில் ஜாதீய வாதத்தை இக்கட்சிகள் பயன்படுத்தி வந்தது ஒன்றும் ஒளிவுமறைவான விஷயமல்ல.  தேர்தல்களில் பங்கேற்காத அதிதீவிரமான கம்யூனஸ்ட் குழுக்கள் என்று அறிவித்துக் கொள்பவர்கள் வேறொரு வகையில் ஜாதீய வாதத்தைக் கையிலெடுத்துள்ளனர்.  அதாவது வர்க்க வேறுபாடின்றி ஒட்டுமொத்தமாக தலித்துகள் அனைவருமே புரட்சிகர சக்திகள் என்ற கருத்தின் அடிப்படையில் அவர்களது ஜாதீய வாதம் தொடங்குகிறது.  தேர்தலில் போட்டியிட்டு முழுக்க முழுக்க நாடாளுமன்றப் பாதையில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆவலைக் கொண்டுள்ள CPI(M) கட்சியும் அதற்கு பக்கவாத்தியம் வாசிக்கும் நிலைக்கு சோவியத் யூனியனின் பின்பலத்தை இழந்த பின்னர் தள்ளப்பட்டுள்ள CPI கட்சியும் தலித் ஜாதீயத்தை மட்டும் எடுத்தால் தங்களது ஆவலை நிறைவேற்றிக் கொள்ள முடியாது  என்பதால் பார்ப்பனீயத்தை எதிர்த்த பார்ப்பனரல்லாத அனைத்து ஜாதிகளின் ஆதரவினைப் பெற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நாட்டார் தெய்வ வழிபாட்டுப் பிரச்சனையில் இத்தகைய நிலைபாட்டினை எடுத்துள்ளனர்.   
                நாட்டை ஆளும் பி.ஜே.பி. கட்சியினர் இந்துத்வா என்ற பெயரில் பிராமண வாக்கு வங்கியை அப்படியே தக்க வைத்துக் கொண்டு பிற ஜாதிகளைச் சேர்ந்தவர்களை மதரீதியான அறைகூவல் மூலமாக இழுக்க முனையும் வேளையில் சிறு தெய்வ வழிபாடு என்ற பெயரில் பிராமணரல்லாத அனைத்து ஜாதிகளைச் சேர்ந்தவர்களையும் தங்கள் பக்கம் இழுக்க இந்தக் கம்யூனிஸ்டுகள் முயற்சிக்கின்றனர். இந்த மார்க்சியவாதிகள்பார்ப்பனீயத்திற்கு எதிரான போராட்டமே இன்று பிரதானமான போராட்டம் என்ற நிலையனை எடுத்துள்ளதற்கான அடிப்படைக் காரணமே இதுதான்.
                   எனவே இன்று இந்தியாவில் பிரதானமாக இருக்கும் போராட்டம் பார்ப்பனீயத்திற்கு எதிராகவும் ஜாதீய அமைப்பிற்கு எதிராகவும் நடத்த வேண்டிய ஜாதீய விடுதலைப் போராட்டமா ? அல்லது முதலாளித்துவத்திற்கு எதிராகவும் வர்க்க அமைப்பிற்கு எதிராகவும் நடத்த வேண்டிய தொழிலாளி வர்க்க விடுதலைக்கான போராட்டமா ? பார்ப்பனீயம் என்பது தான் என்ன? நாட்டில் நிலவும் பல்வேறு ஜாதீயப் போக்குகளின் உண்மையான தன்மை என்னஅவை முற்போக்கான பாத்திரம் எதையும் வகிக்கின்றனவா என்பனவற்றை அலசி ஆராய வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.
பொருளாதார அடித்தளமும் கலாச்சார மேல் கட்டுமானமும்
                மிகக் கொடூர வடிவமெடுத்து வளர்ந்து வரும் பேரபாய சக்தியாக இவர்களால் சித்தரிக்கப்படும் பார்ப்பனீயம் என்பது சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் உருவான ஒரு சிந்தனைப் போக்கும் அதனை அடிப்படையாகக் கொண்டு அது முன் வைத்த வாழ்க்கை முறையுமாகும்.  அது ஒரு குறிப்பிட்ட பொருளாதார அடித்தளத்தை வலிமைப்படுத்துவதற்காக ஏற்பட்டதாகும். அந்த அடிப்படையில் அது ஒரு கலாச்சார மேற்கட்டுமான மேயாகும்.   சமூகத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு அதில் நிலவக்கூடிய உற்பத்தி உறவுகள் தடையாக இல்லாதவரை பொருளாதார அடித்தளம் பெரிய நெருக்கடிகள் ஏதுமின்றி வலுவுடன் திகழ்கிறது.  உற்பத்தி சக்திகள் தொடர்ச்சியாக வளரும் தன்மை கொண்டவையாக இருப்பதால் நிச்சயமாக அது உற்பத்தி உறவுகளுடன் முரண்பட்டு  நிற்கும் நிலை தவிர்க்க இயலாமல் தோன்றி ஒரு கட்டத்தில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு உகந்த வகையில் உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பதில்  சென்று முடிகின்றது.  அம்மாற்றத்தைத் தான் சமூக மாற்றத்திற்கான புரட்சி என்று நாம் கூறுகின்றோம்.  இந்த மாற்றம் பல சமயங்களில் பலாத்காரமாகவே நடைபெறுகிறது.  உடைமை வர்க்கங்கள் அவை எத்தனை காலாவதியானவையாக ஆனாலும் தங்கள்  அதிகாரத்தை தக்க வைக்கவே விரும்புகின்றன.  மக்கள் ஆதரவுடன் அதனைச் செய்ய இயலாத போது அடக்குமுறை மூலம் அதனைச் செய்ய விழைகின்றன.  அச்சூழ்நிலையில் பலாத்காரம்  தவிர்க்க வியலாமல் முற்போக்கு வர்க்கங்களின் மீதும் அதற்குத் தலைமையேற்கும் சக்திகள் மீதும் திணிக்கப்படுகின்றது.  எனவே தான் புரட்சிகளில் பலாத்காரம் பெரும்பாலும் ஏதேனும் ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டதாக உள்ளது.   அப்புரட்சிக்குப் பிந்தைய கால கட்டத்தில் பொருளாதார அடித்தளம் பழைய உற்பத்தி உறவுகள் உருவாக்கும் தளைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு குணாம்ச ரீதியாக மாறுகின்றது.  அத்தகைய குணாம்ச ரீதியான மாற்றத்தை அடைந்த பிறகு பழைய பொருளாதார அடித்தளத்தை வலுப்படுத்து வதற்காகத் தோன்றிய கலாச்சார மேற்கட்டுமானம் காலாவதியான ஒன்றாக ஆகிவிடுகின்றது.  அது மாற்றப் படுவதற்கான புறச்சூழலும் அவசியமும் உருவாகின்றது.  இருந்தாலும் பல சமயங்களில் அது தானாகவே மாறிவிடுவதில்லை.  பழைய உற்பத்தி முறையின் மேற்கட்டுமான மிச்ச சொச்சமாக இருந்து கொண்டு அது சமூகத்தின் வளர்ச்சியை தடை செய்கிறது.  எனவே தான் மார்க்சிய ஆசானான மாவோ மக்கள் சீனத்தில் கலாச்சாரப் புரட்சிக்கான அறை கூவலை விடுத்தார்.  துரதிர்ஷ்டவசமாக அது முற்றுப் பெறுவதற்கு முன்பே அவர் மறைந்து விட்டார்.  அத்தகைய புரட்சி சோவியத் யூனியனில் நடைபெறாததும்.  சோசலிஸம் அங்கு அடைந்த பின்னடைவிற்கான ஒரு முக்கிய காரணமாகும்.   ( இன்று சோஷலிஸ அமைப்பு எங்கும் இல்லையேஇச்சூழ்நிலையில் இது குறித்துப் பேசி என்ன பயன் எனச் சிலர் கூறலாம்.  சோஷலிஸம் பல நாடுகளில் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் போனது சோஷலிஸ சித்தாந்தத்தின் செல்லுபடியாகாத தன்மையினால் அல்லமாறாக அந்நாடுகளில் எதிரி வர்க்க மனநிலை கொண்டவர்கள்  சோஷலிச கோட்பாடுகளை அமல் செய்யும்  இடத்திற்கு உழைக்கும் வர்க்க விழிப்புணர்வுக் குறைவின் காரணமாக வந்து விட்டதால் அவை உரியமுறையில் அமல் செய்யப்படாததால் தானே தவிர வேறெதனாலும் அல்ல.   தனது கடந்த காலத் தவறுகளிலிருந்து உரிய படிப்பினையை எடுத்துக் கொண்டு சோஷலிஸக் கருத்துக்கள் மீண்டும் வரவே செய்யும்.  அதற்கான அறிகுறிகள் ஏற்கனவே மேலை நாடுகளில் தோன்ற ஆரம்பித்து விட்டன ; ஏனெனில்  சமூகம் முதலாளித்துவத்திலிருந்து சோஷலிஸ கட்டத்திற்கும் அதன்பின் சோஷலிஸத்திலிருந்து கம்யூனிஸ கட்டத்திற்கும் மாறிச் செல்வது யாராலும் தடுக்க முடியாத - தவிர்க்க முடியாத வரலாற்று விதியாகும்).  
பிராமணீயம் - நிலப்பிரபுத்துவ அமைப்பின் மேல் கட்டுமானமே
                பிராமணீயம் முன் வைத்த வர்ணாசிரம தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட  ஜாதீய அமைப்பு நமது நாட்டின் நிலவுடைமை சமூக அமைப்பை வலிமைப் படுத்துவதற்காக ஏற்பட்ட கலாச்சார மேற்கட்டுமானமாகும்.  நிலவுடைமை சமூக அமைப்பின் அடித்தளம் அடிப்படையில் தகர்ந்தவுடன் அந்த ஜாதீயக் கலாச்சார மேற்கட்டுமானமும் அகல்வதற்கான புறச்சூழ்நிலை உருவாகி விட்டது.  இருப்பினும் தொழில்புரட்சி போன்ற ஒன்று நடைபெற்று அதன்மூலம் நமது நாட்டில் முதலாளித்துவ ஆட்சி வராததன் காரணமாகவும்உலகம் முழுவதும் முதலாளி வர்க்கம் இரண்டு மிகப்பெரிய உலகப் பொது நெருக்கடிகளைச் சந்தித்த பின் அவற்றைக் காட்டிலும் கூர்மையான மூன்றாவது பொது நெருக்கடிச் சூழ்நிலையில் வளர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அது ஆளானதாலும் இந்திய முதலாளி வர்க்கம் விடுதலை பெற்ற காலத்திலேயே பல சமரசங்களை இந்தியாவில் நிலவிய நிலப்பிரபுத்துவ கலாச்சார மேல்கட்டுமான அம்சங்களோடு  செய்து கொண்டது.  
                ஆனாலும் பிராமணீயம் முன் வைத்த ஜாதீய அமைப்பு முறை முதலாளித்துவ உற்பத்தி முறை தோன்றி வளர்ந்த காலத்திலும் ஒரு மாற்றத்திற்கும் ஆளாகவில்லை என்று யாரேனும் கூறமுனைந்தால் அது அப்பட்டமான குருட்டுத்தனமாகவே இருக்கும்.  இந்து மதம் ஆரம்ப காலத்தில் முன்வைத்த வர்ணாசிரம தர்மத்தின் படியிலான ஜாதிகள் நான்கு.  இன்று நாட்டில் நிலவி வரும் ஜாதிகளை கணக்கிலெடுத்தால் அவை நூற்றுக்கணக்கில் வரும்.  எளிமையானதாக இருந்த வேலைப்பங்கீட்டுமுறை சமூக வளர்ச்சிப் போக்கில் சிக்கல் மிகுந்ததாக ஆக ஆக வேலைப்பங்கீட்டை ஒட்டி ஜாதிகள் பல உபஜாதிகளாகவும் பிரிந்தன.  நிலவுடைமை சமூக அமைப்பு இருந்த காலத்தில் இந்த அத்தனை ஜாதிகளுக்கும் உரியவை என தனித்தனி தொழில்கள் இருந்தன.  முதலாளித்துவ பொருளாதார அமைப்பு ஏற்பட்ட பின்னர் இந்த வேலைப்பிரிவினை நீடிக்க முடியவில்லை.  முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கின் விளைவாக நகர்மயமாதல் எங்கும் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் யார், எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்பதனை அவர் செய்யும் தொழிலை வைத்து கண்டுபிடிக்கவே முடியாது.  நகர்ப்புறங்களில் சிகையலங்காரம், துணி துவைப்பது போன்ற தொழில்களை நடத்துபவர்களும் பாரம்பரியமாக அந்த தொழில்களை செய்து வந்த ஜாதியினர் தான் என்று அறுதியிட்டுக் கூறமுடியாத நிலை தோன்றியுள்ளது.  இன்றைய முதலாளித்துவ உற்பத்தி முறை ஒட்டு மொத்த சமூகத்தையும் முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என இரண்டு முரண்பட்ட வர்க்கங்களாக செங்குத்தாக பிரித்துள்ளது.  எனவே வேலைப் பங்கீட்டை மையமாகக் கொண்ட ஜாதிகள் இருப்பதற்கு அவசியம் இல்லாதவையாக அடிப்படையில் ஆகிவிட்டன.  
                இந்நிலையில் இன்று உள்ளபடியே திருமண உறவுகளை ஏற்பாடு செய்வதற்கு மட்டுமே பயன்படுபவையாகத்தான்   அடிப்படையில் இன்றும் ஒழிக்கப்படாத மேல்கட்டுமான மிகச்சொச்சங்களாக ஜாதிகள் உள்ளன.  இருப்பினும் சமரசமற்ற விதத்தில் முதலாளி வர்க்கம் இந்த நிலபிரபுத்துவ மிச்சசொச்சமான ஜாதீய மேல்கட்டுமானத்தை எதிர்த்து போராடியிருக்குமே யானால் இன்றுள்ள அளவில் கூட ஜாதீய வாதம் இருந்திருக்க முடியாது.  இந்திய முதலாளி வர்க்கம் மட்டுமல்ல வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் முதலாளி வர்க்கம் கூட அப்படிப்பட்ட சமரசமற்ற போராட்டங்களை நிலபிரபுத்துவ கலாச்சார மிச்ச சொச்சங்களுக்கு எதிராக நடத்த இன்றல்ல கடந்த நூற்றாண்டின்  ஆரம்பத்திலேயே கூட தயாராக இல்லை.  எடுத்துக்காட்டாக, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மதவாதத்திற்கு எதிராக மிகப்பெரிய தாக்குதலை நடத்திய ஐரோப்பிய நாடுகளின் முதலாளிகளும் தாங்கள் ஆட்சியதி காரத்திற்கு வந்த பின்னர் - குறிப்பாக அவர்களது ஆட்சி முறைக்கு எதிரான பாரிகம்யூன்அனுபவத்திற்குப் பின்பு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குப் பயந்து மதவாதத்துடன் பல சமரசங்களை செய்து கொண்டதை கூற முடியும்.  ஐரோப்பிய முதலாளிகளே இத்தகைய சமரசத்தில் ஈடுபட்டார்களென்றால் இந்திய முதலாளிகள் - குறிப்பாக நமது அண்டை நாடான மக்கள் சீனத்தில் பாட்டாளி வர்க்க ஆட்சி ஒரு மகத்தான புரட்சியின் மூலம் ஏற்பட்டதை தொடர்ந்து ஜாதீய வாதம் போன்ற பின் தங்கிய அம்சங்களுடன் சமரசத்தில் மட்டும் ஈடுபட விரும்பவில்லை; மாறாக அதனைப் பயன்படுத்தி உழைக்கும் மக்களை ஒன்று சேர விடாமல் தங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் பிரித்து  வைக்கும் நாசகாரச் செயல்களிலும் ஈடுபடத் தொடங்கினர்.  முதலாளித்துவத்தின் நெருக்கடி முற்ற முற்ற ஜாதீய வாதத்தை திட்டமிட்டு தீவிரமாக வளர்த்துவிடும் வேலையினைச் செய்தனர் ; இன்றும் அதனை செய்து கொண்டும் உள்ளனர்.  இன்று நிலவிவரும் ஜாதீய வாதம் அதன் விளைவே தவிர இவர்கள் காட்ட விரும்புவது போல பார்ப்பனீயம் இன்றும் ஜீவனுள்ள தத்துவமாக விளங்கி  அதனால்  உருவாக்கப்பட்டு வளர்ந்து வரக்கூடியதல்ல.     
காலாவதியாகிப்போன பார்ப்பனீயத்தை மீண்டும் நிலைநாட்ட முடியுமா?
                இன்றைய நிலையில் இந்த ஆணை குறித்து மிகவும் முனைப்பான பிராமண எதிர்ப்பு நிலையினை இக்கட்சிகள்   எடுப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறப்பால் ஒரு பிராமணராக இருப்பதும் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி முன் வைத்துள்ள ஹிந்துத்வா கண்ணோட்டமும் மிகவும் சாதகமாகப் பயன்படுகிறது.  இச்சூழ்நிலையில் பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு ஜாதீய வாத அமைப்பை மீண்டும் கொண்டுவர மத்திய பி.ஜே.பி அரசும் இது போன்ற ஆணைகள் மூலமாக தமிழக முதல்வரும் விரும்புகின்றனர் என்று  இவர்கள் கூற வருகின்றனர்.  காலாவதியாகிவிட்ட நிலப்பிரபுத்துவப் பொருளாதார அமைப்பின் மேல்கட்டுமானமான பார்ப்பனீய  மேலாதிக்க ஜாதீய அமைப்பு மீண்டும் எச்சூழ்நிலையிலும் நிலைநாட்டப்படவே முடியாது.  ஏனெனில் இன்று நிலவக் கூடிய முதலாளித்துவ அமைப்பு எச்சூழ்நிலையிலும் அதைக் காட்டிலும் பின் தங்கிய குணாம்ச ரீதியில் மாறுபட்ட நிலப்பிரபுத்துவ அமைப்பிற்குத் திரும்பிப் போகவே முடியாது.  இங்ஙனம் நாம் கூறுகையில் ஒரு முன்னேறிய அமைப்பு அதைக்காட்டிலும் பின் தங்கிய அமைப்புக்கு திரும்பிப் போக முடியாதெனில் எவ்வாறு சோவியத் யூனியனும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சோசலிஷம் என்ற முன்னேறிய அமைப்பிலிருந்து முதலாளித்துவம் என்ற பின்தங்கிய அமைப்பிற்குச் சென்றன என்ற கேள்வி எழலாம். சோஷலிஸ அமைப்பு அது முதலாளித்துவத்தைக் காட்டிலும் மேலானதாக இருந்த போதும் மீண்டும் முதலாளித்துவ அமைப்பிற்கு திரும்ப முடியும். ஏனெனில் அது முதலாளித்துவத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடைப்பட்ட மாறுதல் கட்டமாகும் அதில் முதலாளித்துவஅம்சங்களான வர்த்தகம், கடன்அரசு போன்றவை இருக்கவே செய்யும். ஆனால் முதலாளித்துவ அமைப்பிலிருந்து குணாம்ச ரீதியில் வேறுபட்ட கம்யூனிஸ அமைப்பு முதலாளித்துவத்திற்கு மீண்டும் திரும்பவே முடியாது.  
ஆட்சியாளரைப் பொறுத்தவரை வர்க்க நலனுக்குப்பிந்தியதே ஜாதி, மத நலன்கள்
                ஒரு வர்க்க அமைப்பில்  ஆளும் வர்க்கத்திற்காக சேவை செய்பவர்கள் தங்களது ஜாதீய வாதத்தை தங்களின் அரசியல் ஆதாயங்களுக்காக அவ்வப்போது பயன்படுத்திக் கொள்வார்களே  தவிர தங்களது ஜாதீய நலன்களையே எப்போதும் பேணிக் கொண்டிருப்பவர்களாக  அவர்கள் இருக்க மாட்டார்கள்.  அவ்வாறு ஜெயலலிதா தனது ஜாதீய நலனை மட்டும் பேணுபவராக இருந்திருந்தால் பிராமண சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்புகளை வெகுவாக பாதிக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை இன்றும் வலியுறுத்துபவராக இருக்க மாட்டார்.  மத்தியில் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் பி.ஜே.பி கட்சியும் தனது தேர்தல் வெற்றிக்கு தேவைப்படும் மதவெறிவாத மனநிலையை மக்களுக்கிடையே தேர்தல் சமயங்களில் வளர்த்தாலும் ஆட்சியதிகாரத்திற்கு வந்தபின் ஆளும் வர்க்கத்தின் நலனுக்குகந்த வகையிலான கோஷங்களை வைப்பவர்களாக இருப்பதையே நாம் பாக்கிறோம்.  ஹிந்துத்வா என்பது ஹிந்து மதவாதமல்ல; அது ஒரு கலாச்சார தேசியம்என்பன போன்ற இவர்களது விளக்கங்கள்  மதவெறிவாதம் இவர்களுக்கு தேர்தல் வெற்றியை தேடித்தரும் ஒரு சாதனமாக மட்டும் தான் பயன்படுகிறது என்பதையே புலப்படுத்துகிறது.  தேர்தல் வெற்றிக்காகக் கூட அனைத்து சமயங்களிலும் மதவெறிவாதத்தை அவர்கள் பயன்படுத்துவதில்லை.  குஜராத் தேர்தலில் அவர்கள் கையிலெடுத்த மதவெறி வாதம் தற்போது நடந்து முடிந்த நான்கு மாநில தேர்தல்களின் போது அவர்களால் கையிலெடுக்கப்படவில்லை.  காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி இல்லை, சாலை இல்லை, மின்சாரம் இல்லை அதனால் காங்கிரஸுக்கு ஓட்டும் இல்லைஎன்ற முழக்கமே பிரதானமாக முன்வைக்கப்பட்டது.  ஆனால் மதசார்பின்மையின் காவலனாக தன்னைக் காட்டிக் கொள்ளக் கூடியதும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சோனியா காந்தியை தனது தலைவராக கொண்டிருக்கக் கூடியதுமான காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேசத்தில் தேர்தல் வெற்றிக்காக எந்த வகையிலெல்லாம் மதவாதத்தை கையிலெடுக்க முடியுமோ அந்த வகையிலெல்லாம் கையிலெடுத்து மென்மையான ஹிந்துத்வாவை கடைபிடித்ததை யாரும் கண்டு கொள்ளாமல் இருந்திருக்க முடியாது.  முதலாளித்துவ நெருக்கடி முற்றியுள்ள இக்காலகட்டத்தில் முதலாளித்துவ அமைப்பை பாதுகாக்க முன்வருபவர், அவர்கள் மக்களை குழப்புவதற்காக எத்தனை ஜனநாயக முகமூடிகளை அணிந்தாலும்அதனை தங்கள் கொள்கைகளாகப் பிரகடனம் செய்பவர்களாக இருந்தாலும் அடிப்படையில் ஜனநாயக விரோத பாசிசச் செயல்களில் ஈடுபடுபவர்களாகவே இருப்பர்.   அப்படிப்பட்ட பாசிச நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடியவர்கள் முதலாளித்துவத்தின் சேவைக்காக தருணத்திற்குத் தகுந்தவாறு கையில் கிடைக்கும் அனைத்து முழக்கங்களையும் பயன்படுத்தவே செய்வர்.  அவர்களுக்கு முதலாளித்துவ சேவை தான் முக்கியமே தவிர முன் வைக்கும் முழக்கங்களோ தான் சார்ந்திருக்கும் ஜாதியும் மதமுமோ அல்ல.
பொய் எதிரிகளும் - நிழல் யுத்தங்களும்
                மார்க்சிஸத்தின் சமூக மாற்றக் கண்ணோட்டத்தின் அடிப்படையே சமூகத்தின் பொருளாதார அடித்தளத்தை மாற்றும் வகையில் போராட்டத் திட்டங்களை வகுத்தெடுப்பது குறித்ததுதான். இன்று இந்திய சமூகத்தின் அடித்தளமாக நிலவுகின்ற பொருளாதாரம் முதலாளித்துவ பொருளாதாரமாகும்.  இவ்வாறு நாம் குறிப்பிடுகையில் CPI, CPI(M), CPI(ML) போன்ற கட்சிகள் இந்தியாவில் நிலவுவது முதலாளித்துவப் பொருளாதாரம் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை; நாட்டின் பல இடங்களில் நிலபிரபுத்துவ உற்பத்தி முறையே நிலவுகிறது என்பதே தங்களது அரசியல் கணிப்பாகும் எனக்கூறலாம்.  அக்கணிப்பினை தவறானதென்று நிரூபிக்க எத்தனையோ ஆதாரங்களை  முன் வைக்க முடியுமென்றாலும் தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையில் இவர்கள் ஒரு கேள்விக்கு விடை கூற வேண்டி வரும்.  குறிப்பாக தமிழக அரசு இலவச மின்சாரத்திட்டத்தை ரத்து செய்து சிறு விவசாயிகளுக்கு மட்டும் மின் கட்டணத் தொகை அரசால் மணியார்டர் மூலம் அனுப்பிவைக்கப்படும் என்று ஒரு அறிவிப்பு வெளியிட்ட வேளையில் இவர்கள் எழுப்பிய கோரிக்கை, “அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரத்தை வழங்க வேண்டும்என்பதாகும்.  இப்படி இவர்கள் அனைத்து விவசாயிகளும்என்று கூறும் வேளையில் அந்தப்பட்டியலில் நிலப்பிரபுக்களும் உள்ளடங்குவார்களா என்ற கேள்விக்கும், அவர்களும் உள்ளடங்குவார்கள் என்றால் அவர்களுக்கு இலவச மின்சாரத்தைக் கொடுப்பது நிலபிரபுத்துவத்தை ஒழிப்பதற்கு பதில் வளர்ப்பதாகாதா? என்ற கேள்விக்கும் விடை கூறவேண்டிய சிக்கலான சூழ்நிலை ஏற்படும்.  இல்லையெனில் பம்பு செட்டுகள் வைத்து விவசாயம் செய்பவர்கள் அனைவருமே பணக்கார விவசாயிகள், அதாவது முதலாளித்துவச் சந்தைக்காக விவசாய உற்பத்தியில் ஈடுபடக்கூடியவர்கள், நிலப்பிரப்புக்களல்ல என்ற அடிப்படையில் தான் இந்தக் கோரிக்கையை இவர்கள் எழுப்புகிறார்கள் என்றால் இவர்கள் கூறும் நிலப்பிரபுத்துவத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தக் கூடிய நிலப்பிரபுக்கள் வேறு எங்கு எந்த எலிப் பொந்துகளுக்குள் ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள்? என்ற இன்னும்  சிக்கலான கேள்விக்கு இவர்கள் விடை கூற வேண்டி வரும்.
                சுதந்திரம் அடையும் தருவாயில் உள்நாட்டுச் சந்தையில் 72 முதல்
73 சதவீதத்தையும் நிறுவனமாக்கப்பட்ட வங்கி மூலதனத்தில்
80 சதவீதத்திற்கும் மேலாகவும் கொண்டு சுயேச்சையான மூலதன அடித்தளத்தை பெற்றிருந்த இந்திய தேசிய முதலாளிகள், தங்களுடைய வளர்ச்சிக்கு மிகவும் சாதகமான ஒரு சுதேசி அரசை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தேச விடுதலைப் போராட்டத்திலும் பெரும்பங்கினை ஆற்றி, அதன் விளைவாக கிடைக்கப் பெற்ற சுதந்திரத்திற்குப்பின் அமைந்த தங்களது ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தக் காலகட்டத்தில் தொழில்மயமாக்கலை எத்தனை தூரம் செய்ய முடியுமோ அத்தனை தூரம் செய்து, ஏகபோகங்களாக வளர்ந்து இன்று  தங்களைச் சுற்றியுள்ள சிறு நாடுகளை அச்சுறுத்தும் ஏகாதிபத்திய சக்தியாகவும் தங்களது மூலதனத்தை தங்களைச்  சுற்றியுள்ள சிறு நாடுகளுக்கு மட்டுமல்ல தாங்கள் எந்த நாட்டுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தோமோ அந்த நாட்டுக்கே கூட ஏற்றுமதி செய்யக்கூடிய  வேளையில்  (இந்திய தேசிய முதலாளியான கிரிலோஸ்கரின் நிறுவனம், இங்கிலாந்தில் நேரடி மூலதனத்தைக் கொண்டுள்ள இங்கிலாந்து நாட்டு நிறுவனமான SPP பம்ப்ஸ் லிமிடெட் நிறுவத்தை முழுவதுமாக விலைக்கு வாங்கியுள்ளது (ஆதாரம்:  9.11.2003  தேதிய இந்து நாளிதழ்  செய்தி பக்கம் - 13)  இது தவிர ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில்  தமிழ் நாட்டு முதலாளிகள் உள்ளடங்கிய இந்திய முதலாளிகளின் மூலதன ஏற்றுமதியை பட்டியலிட ஆரம்பித்தால் அது இன்னும் நீண்டு கொண்டே போகும்.  மிக சமீபத்தில் இந்தியாவின் மென்பொருள் நிறுவனமான இன்போஸிஸ் நிறுவனம் ஆஸ் திரேலியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனம் ஒன்றை முழுமையாக விலைக்கு வாங்கியுள்ளதையும் நினைவுகூர்தல் இங்கு அவசியமாகும்).   சார்க் நாடுகள் அனைத்தும் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளின் பாணியில் ஒரே நாணயத்தை தங்களுக்கிடையிலான வர்த்தக பரிவர்த்தனைகளுக்காக வைத்துக் கொள்ளலாம் என இந்தியப் பிரதமர் முழங்குகையில் இந்தியாவில் இருப்பது முதலாளித்துவப் பொருளாதார அமைப்புதானா என்ற கேள்வியை யாரேனும் எழுப்பினால், ஒன்று அவர்கள் மார்க்சியப் பொருளாதாரத்தை அடிப்படையில் அறியாதவர்களாக இருப்பார்கள் அல்லது தங்களது சந்தர்ப்பவாத அரசியலுக்கு மிகவும் சாதகமாகப் பயன்படுவதும் பொய் எதிரிகளை முன்னிறுத்தி அவர்களுக்கு எதிரான நிழல்யுத்தத்தை மட்டுமே சாத்தியமாக்கவல்லதுமான ஒரு அடிப்படை அரசியல்வழியினை வேண்டி விரும்பி முன் வைத்துக் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள். இவர்களைத் தவிர உழைக்கும் மக்களின் எதிரி ஆயுதம் தரித்து நிற்கும் ஒடுக்கு முறைக் கருவியான அரசு அல்ல; ஐ.எம்.எப். , உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களே என்ற கூற்றை மீண்டும் மீண்டும் கிளிப்பிள்ளை போல் முன் வைப்பவர்களுக்கு தர்க்க ரீதியான வாதங்களைக் காட்டிலும் நமது மௌனமே  பொருத்தமான பதிலாக இருக்கும்.
உழைக்கும் வர்க்க விடுதலை வேண்டுவது
வர்க்கப் போராட்டங்களே தவிர ஜாதீயப் போராட்டங்களல்ல
                இத்தகைய முதலாளித்துவ அடித்தளத்தை தூக்கியெறிவதற்காக இன்று நடத்தப்பட வேண்டியவை முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிஷப் புரட்சிப் பாதையிலான வர்க்கப் போராட்டங்களே தவிர எந்த வகையிலும் பிராமண எதிர்ப்பை மையமாக வைத்த ஜாதீயப் போராட்டங்களல்ல.
                ஆட்சியிலுள்ள முதலாளி வர்க்கத்தை எதிர்த்தும் அது உழைக்கும் வர்க்கத்தின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள தாக்குதல்களை எதிர்த்தும் இன்று அதன் ஜனநாயக முகத்திரை முற்றாகக் கிழிந்து மனிதாபிமான மதிப்புகளுக்கும், மனிதகுல நாகரீகத்திற்கும் எதிராக எடுத்துக் கொண்டுள்ள பாசிஸ நடவடிக்கைகளை அம்பலப் படுத்தியும் வீறு கொண்ட வர்க்கப் போராட்டங்களைக் கட்டுவதே இன்றைய கால கட்டத்தில் உழைக்கும் வர்க்கத்தின் தேவையும், கடமையுமாகும்.  ஆட்குறைப்பு, வேலை பறிப்பு, சம்பளக் குறைப்பு  போன்றவற்றை அன்றாட நியதியாக்கி விட்ட முதலாளிவர்க்கத்தையும் அதன் ஆட்சியினையும் எதிர்த்து உழைக்கும் வர்க்கத்தை அணி திரட்டுவது என்பது அத்தனை சிரமமான காரியமல்ல.  தொழில்துறையின் லாபத்தை அதிகரிக்கவும், பராமரிக்கவும் விவசாய இடு பொருட்களின் விலையை அதிகரித்து, விவசாய விளை பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்காமல் செய்து, விவசாயத் துறைக்கான மானியத்தை வெகுவாகக் குறைத்து அதனை கடுமையாக பாதிப்பில் கொண்டு வந்து நிறுத்தி கோடிக்கணக்கான விவசாயத் தொழிலாளர் வயிற்றிலடிப்பதும் சிறு மற்றும் குறுநில விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்று விட்டு விவசாயத் தொழிலாளர் பட்டியலில் சேரக் காரணமாக இருப்பதுமான இந்த முதலாளித்துவ உற்பத்தி முறையை கிராமப்புற பாட்டாளி மக்களிடம் அம்பலப்படுத்துவதும் அத்தனை சிரமமான காரியமல்ல.  இந்த அடிப்படையில் ஜாதி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து உழைக்கும் மக்களையும் ஒன்றிணைத்து நடத்தப்படும் வர்க்கப் போராட்டங்களே இன்று சமூகத்தில் நிலப்பிரபுத்துவ அமைப்பின் கலாச்சார மேல்கட்டுமான மிச்ச சொச்சங்களாக நிலவக்கூடியதும், நெருக்கடி சூழ்ந்த முதலாளித்துவத்தின் திட்டமிட்ட சதியினால் வளர்க்கப்படுவதுமான  பிராமணீய, பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மற்றும் தலித் ஜாதீய வாதங்களை முடிவுக்குக் கொண்டு வரும். 
                அத்தகைய வர்க்கப் போராட்டப் பாதையிலிருந்து இக்கட்சிகள் விலகி வெகுதூரம் வந்து விட்டதோடு இன்றைய தேவை வர்க்கப் போராட்டமல்ல ; பிராமண எதிர்ப்பு ஜாதீயப் போராட்டமே என்ற யதார்த்தத்திற்குப் புறம்பான மார்க்சிய விரோத வாதத்தை முன் வைத்து மக்களின் கவனத்தை திசை திருப்பி முதலாளி வர்க்கத்தை மூடி மறைத்துக் காக்கும் வேலையிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளன.  இதையே இவர்களின் இந்த அரசாணை குறித்த நிலைபாடு கோடிட்டுக் காட்டுகிறது.  
பொருளாதார வாத தொழிற்சங்க இயக்கங்கள் வர்க்கப் போராட்டங்களாக ஆகமுடியாது
                இந்தக் கட்சிகள் வர்க்க போராட்டப் பாதையினைக் கைவிட்டு விட்டனர் என நாம் கூறுகையில்  எத்தனை பெரிய பெரிய தொழிற்சங்கங்களை நாங்கள் வைத்திருக்கிறோம்அவற்றைக் கொண்டு எத்தனை எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்கிறோம் என்பதை பட்டியலிட்டு அவையெல்லாம் வர்க்கப் போராட்டமின்றி வேறென்னவாம்எனக் கேட்க இவர்கள் முற்படலாம்.  இவர்கள் நடத்துவதாக கூறும் தொழிற்சங்க போராட்டங்கள் எல்லாம் வர்க்கப் போராட்டங்கள்  அல்ல.  சரியான அரசியல் பார்வையின்றி முழுக்க முழுக்க பொருளாதார நோக்கங்களுக்காக அவர்கள் நடத்தும் தொழிற்சங்கங்களையும் அவற்றின் தலைமையில் நடத்தப்படும் போராட்டங்களையும் வர்க்கப் போராட்டங்கள் என்று எந்த லெனினிஸ வாதியும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.  ஏனெனில் வர்க்கப் போராட்டங்கள் என்பவை முதலாளித்துவ ஆட்சியை தூக்கியெறிந்து விட்டு அந்த இடத்தில் தொழிலாளி வர்க்க ஆட்சியை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டவை.  அப்படிப்பட்ட போராட்டங்களை நடத்த வேண்டுமென்றால் அத்தொழிற்சங்கங்கள் மார்க்ஸ் கூறியவாறு கம்யூனிச பாடசாலையாகநடத்தப்பட வேண்டும்.  உண்மைக்கு சிறிதேனும் மதிப்புக் கொடுப்பவர்களாகவும் தன்னடக்கத்தை மருந்திற்காக வேனும் கொண்டிருப்பவர் களாகவும் இருந்தால் இக்கட்சிகள் தாங்கள் நடத்தும் தொழிற்சங்கங்களை கம்யூனிசப் பாடசாலைகள் என்று கூறத் துணிய மாட்டார்கள்.  சம்பள வெட்டு ஒப்பந்தங்கள் செய்வதில் இருந்து இந்திய முதலாளிகளை உலக மயமாக்கலின் அப்பாவிப் பலிகிடாய்களாக பாதிக்கப் பட்டுள்ளவர்கள் என்று அவர்களுக்காக கண்ணீர் வடிப்பதுவரை எண்ணிறந்த தொழிலாளி வர்க்க மனநிலைக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் இவர்கள் நடத்தும்  தொழிற்சங்கங்கள் கனவிலும் கூட கம்யூனிசப் பாடசாலைகளாக ஆக முடியாது.  இந்தத் தொழிற்சங்கங்களும் கூட ஸ்தாபன ரீதியாக ஒருங்கு திரட்டப்பட்ட சிறிய அளவிலான தொழிலாளரையே மையம் கொண்டிருக்கின்றன.  இன்று இந்திய முதலாளித்துவம் அதனை சூழ்ந்துள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக உலகமயமாக்கலை ஏற்றுக்கொண்டுள்ள சூழ்நிலையில் தொழிலாளரின் பணிப்பாதுகாப்பு, ஊதியம் போன்ற அடிப்படையான அம்சங்களின் மீதே கொடுந்தாக்குதலைத் தொடுத்துக்கொண்டுள்ளது. இதனை எதிர்த்து முறியடிக்கத் தேவையான நீண்ட நெடிய போராட்டத்திற்கான  தத்துவார்த்த - அரசியல் ரீதியான கருத்துகளை - அன்றாட பொருளாதாரத் தேவைகளுக்காகவே என்ற அடிப்படையில் நடத்தப்படும்  -இத்தொழிற்சங்கங்கள் தொழிலாளருக்கு வழங்கவுமில்லை ; வழங்கவும் முடியாது.  மேலும் மிகப்பரந்த அளவில் உள்ள ஒட்ட ஒட்டச் சுரண்டப்படும் ஸ்தாபன ரீதியாக ஒருங்குதிரட்டப்படாத - இழப்பதற்கென்று ஏதுமில்லாத, வர்க்கப் போராட்ட உள்ளடக்கத்தினை பெரிய அளவில் கொண்ட - தொழிலாளர்களை  - அவர்களைத் திரட்டுவதால் பொருளாதார ரீதியாக கட்சிக்கு ஒரு பலனும் இல்லை என்ற அடிப்படையில்  - தொழிற்சங்கமயமாகக் கூட இக்கட்சிகள் ஆக்கவில்லை. பெரிய அளவில் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்து அவர்களின் ஊதியத்தையும் லாபமாக ஈட்ட நினைக்கும் இன்றைய முதலாளிகளின் சதியினையும் அரசாங்க மானியங்கள் பெறவும் தொழிலாளர் சட்டங்களில் இருந்து விதிவிலக்கு பெறவும் உதவும் சிறு முதலாளிகள் பட்டியலில் இடம் பிடிப்பதற்காக பல பகாசுர பஞ்சாலை முதலாளிகள் தங்களது பெரிய பஞ்சாலைகளை மூடிவிட்டு பல்லாயிரக்கணக்கான விசைத்தறி ஆலைகளைத் திறந்து தொழிலாளரை தினக்கூலி கொடுத்து ஒட்ட ஒட்டச் சுரண்டி வருகிறார்களே, அந்தச்சதியினையும் அம்பலப்படுத்தி முறியடிக்கும் பாதையை விட்டு விட்டு இக்கட்சிகள் அம்முதலாளிகளை உலகமயமாக்களினால் பாதிக்கப்பட்டுள்ள  நமது அனுதாபத்திற்குரிய அப்பாவி பலிகிடாய்கள் என சித்தரிக்கின்றன.  இவர்கள் எங்கே சரியான அரசியல் வழியை தொழிலாளரிடம் கொண்டு சென்று அவர்களை வர்க்கப் போராட்ட முன்னணிப் படையினராக மாற்றப் போகின்றனர். 
                நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையே இங்கு நிலவுகிறது என உரத்த குரலில் கூறினாலும் யதார்த்தத்தின் நிர்ப்பந்தங்களுக்கு கட்டுப்பட்டு கிராமப்புறங்களில் இவர்கள் விவசாயத் தொழிலாளர் அமைப்புகளையே வைத்துள்ளனர்.  அவ்வமைப்புகளும் பெயர்ப்பலகை அமைப்புகளாக உள்ளனவே தவிர நில முதலாளிகளை எதிர்த்து போராடும் அமைப்புகளாக அறவே இல்லை.  விவசாயத் தொழிலாளர் பதாகையில் நடத்தப்படும் போராட்டங்களும், மாநிலங்களுக்கிடையே நதிநீர் பங்கீடு, ஏழை, பணக்கார விவசாயிகள் என்ற பாகுபாடற்ற இலவச மின்சாரம், மானியங்கள் போன்ற நிலமுதலாளிகளின் நலன்களை உள்ளடக்கிய கோரிக்கை களுக்காகவே  பெரிதும் நடத்தப்படுகின்றன.  இந்தப் போராட்டங்களில் பலன் ஏதும் கிட்டினாலும் அது சென்றடையப் போவது நில முதலாளிகளைத் தான்.  நில முதலாளிகள் அவ்வாறு கிட்டும் பலன்களை விவசாயத் தொழிலாளருக்கும் பங்கிட்டுத் தரும் பரோபகாரிகளாக ஒரு காலத்திலும் மாறப்போவதில்லை.  
கொடிகள் மாறவில்லை - ஆனால் கொள்கைகள் மாறிவிட்டன
                இவ்வாறு வர்க்கப் போராட்டப்பாதையை கைவிட்ட பிறகு இவர்களுக்கென மிஞ்சியிருப்பது அப்பட்டமான நாடாளுமன்ற பாதை தான்.  அதுவே இன்றுள்ள ஒரே பாதை என ஆகி விட்ட இந்தக் கம்யூனி°டுகள் இவ்வாறு அவர்கள் ஆவதற்கான சுவடுகள் அவர்கள் இயக்கத்தை ஆரம்பித்த காலத்திலேயே இருந்த போதிலும் கூட ஆரம்ப காலத்தில் யதார்த்தத்தின் நிர்ப்பந்தங்களுக்கு கட்டுப்பட்டு வர்க்க ரீதியான வாதங்களையேனும் ஓரளவு முன்வைத்துக் கொண்டிருந்தனர்.  60 கள் வரை திராவிடக் கட்சிகள் என்று இன்று பலவாகப் பிரிந்திருப்பவையும் அன்று ஒன்றாக இருந்ததுமான தி.மு.க. ஜாதீய ஒடுக்குமுறைதான் சமூகத்தின் பிரதான ஒடுக்குமுறை என்ற கருத்தை முன் வைத்த காலத்தில், இவர்கள் சமூகத்தின் பிரதான முரண்பாடு வர்க்க முரண்பாடுதான் என்பதை முன்வைக்கவே செய்தனர்.  ஆனால் அன்று பார்ப்பன எதிர்ப்பு வாதமும் பகுத்தறிவும் பேசிய தி.மு.கழகம் போன்ற கட்சிகள் இன்று பார்ப்பனீயம், பகுத்தறிவுக்கு ஒவ்வாத மதவாதம் ஆகியவற்றை முன் வைக்கும் பி.ஜே.பி. கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அங்கம் வகிக்கின்றன.*  அதே சமயம் அவர்களது கோஷங்களான ஜாதீய, அதாவது சமூக நீதிப் போராட்டம் தான் பிரதானமானது என்ற கருத்தை இந்த கம்யூனிஸ்ட்டுகள்தூக்கிப் பிடித்து பார்ப்பனீயத்திற்கெதிரான சிலுவைப் போர்களில் தங்களை ஈடுபடுத்தத் தொடங்கியுள்ளனர்.  அதனால் தான் தந்தை பெரியார் இன்று இவர்களுக்கு தோழர். பெரியாராக ஆகியுள்ளார்.  எனவே தான் 1950 ம் ஆண்டில் ஆலயங்களில் பலியிடுவதை தடை செய்யும் சட்டம் வந்த போது வலுவான நிலையில் இருந்தும் அதனை எதிர்க்காது ஆதரித்த இவர்கள் படிப்படியாக மிகவும் சீரழிந்து வர்க்கப் போராட்டத்தையே கைவிட்ட நிலையில் அனைத்து நாடாளுமன்றக் கட்சிகளின் பாதையில் வாக்குகளை மட்டும் எளிதாகப் பெற வழிவகுக்கும் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, தாழ்த்தப்பட்டோர் ஜாதீய வாதத்தைக் கையிலெடுத்து அச்சட்டத்தை அமல் செய்வதற்கான அரசு ஆணையை எதிர்க்கும் நிலைக்கு வந்துள்ளனர்.  
சமூகநீதி என்ற பெயரில் ஜாதீய வாதம்
                நிலைபெற்ற அரசியல் கட்சிகள் ஜாதீய வாதத்தை தங்களது அரசியல் ஆதாயத்திற்காக நடைமுறையில் பயன்படுத்தும் வேளையில், முழுக்க முழுக்க  ஜாதி வெறியை ஊட்டவும்  அதனை மையமாக வைத்து பலர் பிழைப்பு நடத்தவும் ஜாதிக் கட்சிகளாகவே பலகட்சிகள் தோன்றியுள்ளன. யதார்த்தத்தில் இவை அனைத்தும் சமூக நீதிக்காகப் போராடுபவை என்றே கூறிக் கொள்கின்றன.  உற்பத்தி பலன்களை அனைவருக்கும் அவரவர் உழைப்புக்குத்  தகுந்த படி பகிர்ந்தளிக்கும் பொருளாதார நீதி ஏற்பட்டால் இவர்கள் கூறும் சமூக நீதியை வலியுறுத்த வேண்டிய அவசியம் வராது என்ற கருத்தின் படி செயல்பட வேண்டிய கம்யூனிஸ்டுகளும் இந்த ஜாதீயப் போக்குகளை சமூக நீதிப் போக்குகள் என அங்கீகரிக்கின்றனர்.  இவர்களால் சமூக நீதி இயக்கங்கள் என்று அழைக்கப்படுபவற்றில் உள்ளடங்கியுள்ள ஜாதிக் கட்சிகளின் செயல்பாடுகளை உற்று நோக்கினால் இவற்றின் நிதிரீதியான புரவலர்களாக அந்தந்த ஜாதிகளின் உடைமை வர்க்கத்தினரும் வியாபாரிகளுமே இருப்பர்.  அத்தகைய உடைமை வர்க்க வியாபாரப் பிரமுகர்களுக்கோ அல்லது அரசு அதிகார வர்க்கத்தில் உயர் பதவி வகிப்பவர்களுக்கோ அவர்கள் வியாபாரப் போட்டி காரணமாகவும், ஊழல்ஒழுக்கக்கேடு போன்ற ஏதாவது ஒரு சிக்கலில் சிக்கும் போதும் அவர்களைக் காப்பதற்காக இந்த ஜாதீய அமைப்புகள் தங்களின் அனைத்து சக்திகளையும் ஒருங்கு திரட்டிப் போராடுபவையாக உள்ளன. இந்த வகையில் தான் பல சமயங்களில் இவர்களின் சமூக நீதி வெளிப்படுகிறது.  தாழ்த்தப்பட்டவர் என்று கூறப்படுபவர்களைத் தவிர யதார்த்தத்தில் வேறு எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்கள் அந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனை என்று தனியாக எதுவுமே இல்லை.  தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆங்காங்கே நடந்தாலும் கூட அவை பெரிதும் முரட்டுத் தன்மை வாய்ந்த பிற்பட்ட சமூகத்தினர் அல்லது மிகவும் பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிலரால் பிரநிதித்துவப் படுத்தப்படும் கிராமப்புற புதுப்பணக்காரர்களால் நடைபெறுகிறது என்பதே கண்கூடான யதார்த்தமாக உள்ளது. 
                வர்க்க ரீதியாக அல்லாமல் ஜாதீய ரீதியாக கிராமப்புற சூழ்நிலைகளை ஆராய்வது விஞ்ஞானபூர்வமாக சரியானதல்ல.  எனினும் பாரபட்சமின்றி இன்று கிராமப் புறங்களில் முரண்பாடு எந்த சமூகங்களுக்கிடையில் பிரதானமாக நிலவுகிறதென்று பார்த்தோமானால் முரட்டுத் தனமானதாகக் காட்டிக் கொள்ளக்கூடிய பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் என அரசால் வரையறுக்கப்பட்ட வகுப்பினருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் இடையில் தான் என்பதை தெளிவாக அறிய முடியும்.  அதன் காரணம் தாழ்த்தப்பட்ட மக்கள் பெரிதும் இன்றும் விவசாயத் தொழிலாளராகவும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பவர்கள் விகிதாச்சாரத்தில் தாழ்த்தப் பட்டோரைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் லேவாதேவி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் ஈடுபடுபவர்களாக  இருப்பதோடு நிலவுடைமையாளர்களாகவும் முதலாளித்துவ அரசியலில் பெரிய அளவில் ஈடுபாடு உடையவர்களாகவும் இருப்பது தான்.  மாறாக இவர்கள் எதிரிகளாகக் காட்டும் பிராமண சமூகத்தைச் சார்ந்தவர்கள் பலர் கிராமங்களை விட்டு வெளியேறி நகர்ப்புறங்களுக்கு வேலைவாய்ப்புத் தேடி சென்று விடுவதால் பல கிராமங்களில் அக்ரஹாரங்கள் என்று அழைக்கப்பட்ட பகுதிகளே அனைத்து ஜாதியினரைச் சேர்ந்தவர்களும் குடியிருக்கும் பகுதியாக மாறியுள்ளதை பார்க்க முடிகிறது.  உள்ளபடியே இவர்கள் அஞ்சுவது போல் கிராமக் கோவில்களுக்கு பிராமணப் பூசாரிகளை நியமிக்க இவர்கள் கூறும் பிராமணவாத ஜெயலலிதா அரசாங்கம் முடிவு செய்தால் கிராமங்களில் இருக்கக்கூடிய முப்பத்து முக்கோடி தேவர்களுக்கான கோவில்களுக்கும் பூசாரிகளாக நியமிப்பதற்கு தேவையான எண்ணிக்கையில் பிராமணர்களே கிடைக்காத அல்லது முன்வராத நிலையே ஏற்படும். 
                இன்றைய நிலையில் சமூக நீதி என்ற முழக்கத்திற்கு வலுசேர்க்கும் வகையில் நடைமுறையில் உள்ள ஒரே திட்டம் இடஒதுக்கீட்டுத் திட்டமே. அதுவும் உலகமயமாக்கல் பின்னணியில் பொதுத்துறை என்பது அழிக்கப்பட்டு தனியார்மயம் அதிகரித்து வரும் நிலையில் நடைமுறையில் ஏட்டுச் சுரைக்காய் ஆகி விட்டது.  கல்வித்துறையில் மட்டுமே சிறிது பொருத்தமுடையதாக இருக்கும்  இந்த இட ஒதுக்கீடு, இந்த தனியார்மயமாக்கல் சூழலில் உயர்கல்வி என்பது பணம் படைத்தோருக்கு மட்டுமே என்று ஆகியுள்ளதால் இதுவும் கூட ஜாதீய வாதத்தை மென்மேலும் விசிறிவிடும் ஒரு வெற்றுக் கோஷமாகவே நடைமுறையில் ஆகியுள்ளது.  விஞ்ஞான பூர்வமாகப் பார்த்தால் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுத் திட்டமே சரியான தொன்றாக இருக்கும்.  தாழ்த்தப்பட்டவர்களும் கூட உண்மையில் இன்றும் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதற்குக் காரணம் அவர்களது பொருளாதார நிலை தான்.  பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள் என்ற அடிப்படையில் பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டிலும் அவர்கள் பயன்பெறவே செய்வர்.
                இந்த முதலாளித்துவ அமைப்பில் பார்ப்பனீயம் மட்டுமல்ல  அனைத்து வகை ஜாதீயப் போக்குகளும் மிகவும் பிற்போக்கான ஒரு பாத்திரத்தையே வகிக்கின்றன.  தீவிரக் கம்யூனி°டுகள் என அழைக்கப்படும்  CPM (ML) குழுக்களால் முழு புரட்சிகர சக்திகள் எனக் கருதப்படும் தலித் ஜாதீயப் போக்கும் இதற்கு விலக்கல்ல.  கூலிப் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததே கீழத் தஞ்சை விவசாயிகளின் போராட்டமாகும்.  அதன் பங்கும் பகுதியுமாக கீழ வெண்மணியில் நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்க நிலவுடைமையாளர்களால் அவ்வூரில் 40 - க்கும் மேற்பட்டோர் தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர்.  அன்று நடந்த கோரசம்பவத்திற்கு ஜாதீய முத்திரை குத்தி கடந்த சில ஆண்டுகளாக அந்தப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் தோன்றியே இராத தலித் அமைப்புகள் என தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்புகள் வெண்மணியில் சென்று ஜாதீய விதையை ஊன்ற முயன்று வருகின்றன.  இதுதான் ஜாதீய வாதத்தின் உண்மையான போக்கு.  இப்படிப்பட்ட இவர்களின் தலித் ஒருங்கிணைப்பு அந்த ஜாதியில் உள்ள உடைமை வர்க்கம் மற்றும் அதிகார வர்க்கத்தில் இட ஒதுக்கீடு மூலமாக உயர் பதவி பெற்றவர்களின் நலன்களைப் பராமரிக்கவே பெரிதும் பயன்படும்.  
                இன்று அனைத்து ஜாதிகளிலும் ஏழை-பணக்காரர் என்ற வேறுபாடு தோன்றியுள்ளது.  சமூக நீதி, தலித்தியம் என்ற படாடோபமான கோஷங்களை முழக்கிக் கொண்டு வரும் அனைத்து பிற்பட்டோர் மற்றும் தலித் அமைப்புகளும், அந்தந்த ஜாதிகளின் உள்ள வசதி படைத்த உடைமை வர்க்கங்களுக்கே சாதகமாக செயல்பட்டு உழைக்கும் மக்களை ஜாதீய ரீதியாக பிளவுபடுத்தி கலவரங்களையும் பிரிவினைப் போக்குகளையும் உடைமை வர்க்கங்களின் தொழில் ஆதிக்கப் போட்டிக்காக உருவாக்கி வருகின்றன.  இப்படிப்பட்ட ஜாதிச் சண்டைகளில் உடைமை வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உயிரிழப்பு போன்ற பாதிப்புகளுக்கு ஆளாவதே இல்லை.  உழைக்கும் மக்கள் தான் இப்படிப்பட்ட கலவரங்களில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.  இந்த அம்சத்தை அம்பலப்படுத்தி நடத்தப்படும் வர்க்கப் போராட்டங்கள் மூலமே ஜாதீய வாதத்துக்கு சாவுமணி அடிக்க முடியும்.  இந்தச் சூழ்நிலையில் ஏதாவது ஒரு கலாச்சாரத்துக்கு எதிராக போராடி வேறு ஒரு சரியான கலாச்சாரத்தை கொண்டு வர வேண்டுமென்றால், அது இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் முதலாளித்துவம் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு பயந்து அரசியல் ரீதியாகவும் இட ஒதுக்கீட்டுத் திட்டத்தின் மூலமும் திட்டமிட்டு வளர்த்து வரும் ஜாதீயக் கலாச்சாரத்திற்கு எதிராகப் போராடி பாட்டாளி வர்க்கக் கலாச்சாரத்தை கொண்டு வருவது தானே தவிர, பிராமணீயத்திற்கு எதிராக போராடுகிறோம் என்ற பெயரில் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஜாதீயக் கலாச்சாரத்திற்குப் புத்துயிர் கொடுப்பதல்ல.  அப்படிப்பட்ட ஜாதீயக் கலாச்சாரத்தை அனைத்து ஜாதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களை வர்க்க ரீதியாக ஒருங்கு திரட்டி வர்க்கப் போராட்டங்கள் நடத்துவதன் மூலமாகவே நிதர்சனமாக முடிவுக்குக் கொண்டு வர முடியும்.  அத்தகைய வர்க்கப் போராட்டப் பாதையை கைவிட்டு இன்று உழைக்கும் மக்களை குழப்பி, இந்த முதலாளித்துவ ஆட்சியின் ஆயுளை நீடிக்கச் செய்வதற்காக கிளப்பப் படுவதே பிராமனீய எதிர்ப்பு, தலித்தியம், சமூக நீதி என்ற பெயரிலான பிற்பட்டோர் ஜாதீய வாதம் போன்றவையாகும்.  
வர்க்க அரசியலை கைவிட்டுவிட்டு அரசியல் வர்க்கமாகி விட்ட கம்யூனிஸ்டுகள்
                இந்நிலையில் வர்க்கப்போராட்டப் பாதையையும் அடிப்படையான சமூக மாற்றம் என்ற குறிக்கோளையும் கைவிட்டுவிட்டு இந்த அமைப்பிற்குள்ளேயே தீர்வுஎன்ற அடிப்படையில் நாடாளுமன்ற வாத கட்சிகளாகிவிட்ட இந்தக்  கட்சிகளை  கம்யூனிஸ்டுகள்என்று மனப்பூர்வமாக அழைப்பதில் மற்ற முதலாளித்துவக்கட்சிகளுக்கு எந்தத் தயக்கமும் இருப்பதில்லை.  ஏனெனில் ஜாதீய ரீதியாக மக்களைப் பிரித்து முதலாளித்துவத்தை காப்பதற்காக செயல்பட்டுவரும்  முதலாளித்துவ, பிராந்திய முதலாளித்துவ கட்சிகளை அம்பலப்படுத்தி அவர்கள் பின்னால் தங்களது அறியாமையினால் திரண்டிருக்கும் உழைக்கும் மக்களை வென்றெடுப்பதை இவர்கள் கைவிட்டு வெகு காலமாகி விட்டது.  இவர்கள் மக்களைப் பிளவுபடுத்தும் அந்த அமைப்புகளுக்கு சமூக நீதிக்காக போராடுபவர்கள் என்ற சான்றிதழ்களையும் வழங்கிக் கொண்டுள்ளனர். இந்த சமூக சூழ்நிலையில் வர்க்கப் பார்வையிழந்த இந்தக் கம்யூனி°டுகளும் மற்ற முதலாளித்துவக் கட்சிகளும் சேர்ந்து ஒரு அரசியல் வர்க்கமாகஉருவாகி விட்டனர் என்பதே இன்று கண்கூடான உண்மையாகி வருகிறது.  அந்த அரசியல் வர்க்கத்தின் ஒரு அங்கம் என்ற ரீதியில் தான்  தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் தங்களது சொத்து விபரத்தை அறிவிக்க வேண்டும் என்ற ஷரத்துக்களை உள்ளடக்கிய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விதிமுறையைக் கூட பி.ஜே.பி. காங்கிர° போன்ற கட்சிகளோடு இணைந்து எதிர்த்து தாங்கள் அனைவரும் ஏறக்குறைய ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்பதை நிரூபித்துள்ளனர்.
வர்க்க சமரசப் போக்கிற்கெதிரான போராட்டத்தை உக்கிரப்படுத்துவோம் உன்னதமான கம்யூனிஸ சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிப்போம் 
                உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளும் அவர்களது கைவசமுள்ள பிரச்சார சாதனங்களும் கம்யூனிச சித்தாந்தத்திற்கு எதிராக கடுமையான தாக்குதலை தொடுத்துவரும் காலகட்டமாகும் இது.  அவை கம்யூனிசம் காலாவதியாகிவிட்ட தத்துவம், எனவும், மனிதகுலத்தின் வரலாறு முதலாளித்துவத்துடன் முற்றுப் பெற்று விட்டது எனவும் ஒரு மித்த குரலில் கூறி வருகின்றன.  சோவியத் யூனியனிலும் பல முன்னாள் சோஷலிச நாடுகளிலும் சோஷலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு அவர்களுடைய பிரச்சாரத்திற்கு பெரிதும் வலு சேர்க்கிறது. கம்யூனிச இயக்கத்திற்கு வழிகாட்ட சர்வதேச அளவிலான தலைமை ஒன்று இல்லாததும், இன்றைய காலகட்டத்தின் விஞ்ஞான கண்டுபிடிப்பு களுக்கும் வளர்ச்சிகளுக்கும் உகந்த வகையில் மார்க்சிஸத்தை பொருத்திக் காட்டும் போக்கு இல்லாமல் போனதும் பொதுவாக மார்க்ஸிச தத்துவார்த்த - சித்தாந்தக் கல்வியும் விவாதங்களும் குறைந்து போனதும் இந்நிலைக்கு முக்கியக் காரணங்களாகும்.  உலகம் முழுவதுமே முதலாளித்துவ அமைப்பை எதிர்த்த இயக்கங்கள் எத்தனையோ நடந்து கொண்டிருந்த போதும் அவை சமூக மாற்றங்களுக்கு இட்டுச் செல்லும் மிகப் பெரிய எழுச்சிகளாக உருப்பெறாமல் போவதற்கும் இந்த சர்வதேச தலைமையின்மையும் தத்துவார்த்த தெளிவின்மையுமே காரணங்களாகும்.
                இந்த நிலையினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ற பெயரில் செயல்பட்டு வரக்கூடிய கட்சிகள் மூலதனத்திற்கும் தொழிலாளி வர்க்கத்துக்குமிடையே சமரச வாதத்தை கடைபிடிக்கும் சமூக ஜனநாயக அமைப்புகளாக தரம்தாழ்ந்துவிட்டன.  அவை, “மாறிவிட்ட சூழ்நிலைகளுக்குத் தகுந்த விதத்தில் மார்க்சிசத்தைக் கடைபிடிக்கிறோம்என்ற பெயரில் மார்க்சிஸத்தின் அடிப்படைக் கோடு பாடுகளை திரித்தும் திருத்தியும் மார்க்சிஸத்தின் புரட்சிகர உட்கருவினை சீரழித்து சின்னா பின்னப்படுத்தி வருகின்றன.  நடைமுறையில் அப்பட்டமான நாடாளுமன்ற, சந்தர்ப்பவாதப் போக்குகளை கடைபிடிப்பதற்கு ஏதுவான பல்வேறு வாதங்களை காலத்திற்கு தகுந்த விதத்தில் மார்க்சிஸத்தை மாற்றுகிறோம் என்ற பெயரில் அவை திருத்தி தருகின்றன.  லெனின் கூறியவாறு நாடாளுமன்றங்களை தொழிலாளி வர்க்கப் போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் விதத்தில் பயன்படுத்துவது என்பதற்கும் நாடாளுமன்ற வெற்றியே இலக்கு என்று செயல்படும் நாடாளுமன்ற வாதத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உண்டு.  அப்பட்டமான நாடாளுமன்ற வாதத்தில் மூழ்கிக்கிடக்கும் இக்கட்சிகள் நாடாளுமன்ற வெற்றியினை உறுதி செய்வதற்காக யுத்த தந்திர உபாயங்கள் என்ற பெயரில் பல்வேறு கோட்பாடற்ற, மார்க்சிஸ கோட்பாடுகளுக்கு முற்றிலும் விரோதமான செயல்களிலும் ஈடுபடுகின்றன.  கடந்த காலங்களில் இந்த இயக்கங்களின் வளர்ச்சிக்காக பல தோழர்கள் சிந்திய இரத்தத்தாலும் தியாகங்களாலும் வளர்ந்த இக்கட்சிகள், இன்று அவர்கள் எந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து மறைந்தார்களோ அந்த லட்சியப் பாதையை கைவிட்டு அனைத்து முதலாளித்துவக் கட்சிகளையும் போல் கோட்பாடற்ற அரசியலில் கூச்ச நாச்சமின்றி ஈடுபட்டுக் கொண்டுள்ளன.
                இத்தகைய உலகளாவிய போக்கின் பங்கும் பகுதியுமாக இந்திய மண்ணில் செயல்பட்டு வருபவையே CPI, CPI(M), மற்றும்  CPI (ML) போன்ற அமைப்புகளாகும்.  முதலாளித்துவ பொருளாதார அடித்தளத்தை மாற்றுவதற்கான சோஷலிச சமூக அமைப்பை நிறுவுவதை இலக்காகக் கொண்ட வர்க்கப் போராட்டப் பாதையினை கைவிட்டு விட்ட இவர்கள் தங்களது நிலையினை நியாயப் படுத்த வல்ல தேசிய ஜனநாயக, மக்கள் ஜனநாயகப் புரட்சிகள்  என்ற அடிப்படை அரசியல் வழிகளை முன் வைத்து தாங்கள் நேரடியான போராட்டங்களின் மூலம் எதிர்க்க இயலாத எங்கோ உள்ள ஏகாதிபத்தியங்களையும், உள் நாட்டில் எங்கும் இல்லாத நிலப்பிரபுத்துவ சக்திகளையும் எதிரிகளாகக் காண்பித்து, யதார்த்தத்தில் கண்கூடாக நம் முன் உள்ள மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமான இந்திய முதலாளித்துவத்தை மூடி மறைத்து அதற்கு சேவை செய்யும் கட்சிகளின் வரிசையில் இடம்பிடித்து முதலாளித்துவ மாற்றுக் கட்சிகளாக  நடைமுறையில் செயல்பட்டு வருகின்றன. அத்தகைய செயல்பாடுகளின் ஒரு பகுதி தான் மற்ற அனைத்து முதலாளித்துவக் கட்சிகளையும் போல் இவர்கள் கையில் எடுத்துள்ள இந்த ஜாதீய வாதமாகும்.  ஆலயங்களில் ஆடு, கோழி பலியிடுவதை தடைசெய்துள்ள தமிழக அரசின் ஆணை குறித்த இவர்களின் நிலைபாடு நடைமுறையில் கிராமப்புறங்களில் வர்க்கப் போராட்டத்தை அறவே இல்லாமல் ஆக்கிவிடும் தன்மையைக் கொண்டதாகும்.  ஏனெனில் இன்று கிராமப் புறங்களில் உடைமை வர்க்க சக்திகளாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரிய அளவில் இல்லை.  முரட்டுத்தன்மை வாய்ந்த பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த சிலரே கந்துவட்டிக்காரர்களாகவும் ஒப்பந்தக்காரர்களாகவும் புதுப் பணக்கார நிலவுடைமையாளர் களாகவும் இருந்து கொண்டு விவசாயத் தொழிலாளர்களையும் உதிரித் தொழிலாளர்களையும் கசக்கிப் பிழியும் சுரண்டல் சக்திகளாக இருக்கின்றனர்.  பிராமணீயத்திற்கு எதிராக ஓரணியில் நிற்க வேண்டியவர்கள் என கிராமப்புற உழைப்பாளிகளை இந்த உடைமை வர்க்கங்களோடு சமரசம் செய்து வைப்பதற்குத்தான் இக்கட்சிகளின் இந்நிலைபாடு நடைமுறையில் பயன்படும். அவர்கள் இப்போதும் எப்போதும் உதட்டளவில் பேசிவரும் மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்  அவர்களது இந்த வர்க்க சமரசவாத, சந்தர்ப்பவாத அரசியல் பலிபீடத்தில் பலி கொடுக்கப்படும் ஆடுகளாகவும், கோழிகளாகவும்  ஆகி விட்டன.  இத்தகைய சக்திகளை அம்பலப்படுத்தி இக்காலகட்டத்தின் மிக உயர்ந்த சித்தாந்தமாகவும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணவல்லதாகவும் உள்ள மார்க்சிஸத்தின் உன்னதமான கோட்பாடுகளை உயர்த்திப் பிடிப்போம்.  அதனை, நம் வாழ்க்கைத்தத்துவமாகக் கடைப்பிடித்து அக்கோட்பாடுகளின் அடிப்படையில் வர்க்கப் போராட்டங்களை வடிவமைத்து ஒரு அடிப்படையான சமூக மாற்றத்திற்கு வழி வகுப்போம்.
கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் ப்ளாட்ஃபார்ம் (CWP), தமிழ்நாடு

1 comment:

  1. இந்த அமைப்பில் சேர வேண்டும்

    ReplyDelete