Saturday, June 2, 2012

கருத்து சுதந்திரத்தின் குரல் வளையை நெரிக்கும் பாசிசப்போக்குகளைக் கண்டித்து கருத்தரங்கம்




ஆட்சியாளர்கள் நமது சமூக அமைப்பை வெகு வேகமாக பாசிசத்தை நோக்கி கொண்டு சென்று கொண்டுருக்கிறார்கள். வரலாற்றில் ஹிட்லர், முசோலினி ஆகியோர் தங்கள் நாடுகளில் நிலைநாட்டிய பாசிசத்தின் ஐந்து முக்கிய கூறுகள் இருந்தன. ஒன்று மிதமிஞ்சிய தேசிய வெறிவாதம், இரண்டு நாடாளுமன்றங்கள் அரட்டை அரங்கங்களாக குறைக்கப்படுவது; மூன்று அரசின் தாளத்திற்கு ஏற்ற வகையில் ராகம் போடும் நீதி அமைப்பை உருவாக்குவது; நான்கு, தொழிற்சங்கங்கள் போன்ற உழைப்பாளரின் நலன்களுக்காகப் பாடுபடும் ஜனநாயக அமைப்புகள் ஒடுக்கப்படுவது; ஐந்து கருத்து சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்படுவது.
பாசிசத்தின் இந்த ஐந்து அம்சங்களும் சிறிய, பெரிய அளவுகளில் நமது நாட்டில் தலைதூக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது. பாராளுமன்றத்தின் மாண்பும், மரபும் எவ்வாறு சீரழிந்து கொண்டுள்ளது என்பதை நிறைய வார்த்தைகளில் விளக்கத் தேவையில்லை. நிறுவனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களது நலனை பாதுகாக்கும் அல்லது பேணும் விதத்தில் கேள்விகள் எழுப்புவது, மக்கள் நலனைப் புறக்கணித்து சுயலாபம் பேணுவதற்காக தங்களது பதவியைப் பயன்படுத்துவது போன்ற போக்குகள் மலிந்துள்ள சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம். மக்களுடைய நலன்களுக்காக பாடுபடுவதற்குப் பதிலாக தங்களது நலன்களை, லோக்பால் போன்ற மசோதாக்கள் சட்டமாகி தண்டித்து விடக் கூடாது என்ற அடிப்படையில் செயல்படும் கேவலமான போக்கு தலைவிரித்தாடுகிறது.

நீதி அமைப்பில் நிலவும் ஊழல் மறைக்க முடியாத அளவிற்கு வெட்ட வெளிச்சமாகி அதனை கட்டுப்படுத்துவதற்காக லோக் பால் வரம்பிற்குள் அதைக் கொண்டுவருவதா, அல்லது அதற்காக ஜுடிசியல் கமிசன் ஒன்று தனியாக அமைப்பதா என்ற இரு கேள்விகளுக்கும் எதைச் செய்வது என்ப‌தில் நமது ஆட்சியாளர்கள் தலையை பிய்த்துக் கொண்டுள்ளனர். உலகமயம் என்ற சூழல் ஏற்பட்ட நாளில் இருந்து நெருக்கடி சூழ்ந்த நிலையில் இருக்கும் உற்பத்தியாளருக்கு உதவுகிறோம் என்ற பெயரில் நீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு விரோதமாக மட்டுமின்றி அவர்களது நலன் கருதி முன்பு வழங்கப்பட்ட முத்திரைத் தீர்ப்புகள் கூட மாற்றி எழுதப்படும் போக்கு நிலவுகிறது.

தொழிலாளர்களின் ஜனநாயக அமைப்பான தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையைக் கோரியதற்காக ஹூண்டாய், மாருதி, ஏனாம் ரெகன்சி தொழிலாளர்கள் அடித்து நொறுக்கப்படுகிறார்கள். வேலைக்கு அமர்த்தி, அட்டையென உழைப்பை உறிஞ்சி, சக்கையென உழைப்பாளரைத் தூக்கி எறி என்ற காட்டுமிராண்டித்தனம் எழுதப்படாத நீதியாக அமலாகிக் கொண்டுள்ளது.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனக் கருதப்படும் பத்திரிகை, எழுத்து சுதந்திரங்களை உள்ளடக்கிய கருத்து சுதந்திரத்தின் குரல்வளை கடுமையாக நெறிக்கப்படுகிறது. அரசு விளம்பரங்கள் எனும் தூண்டில் புழுக்களால் பத்திரிக்கைகள் அரசின் கைப்பாவையாக்கப்பட்ட பழைய போக்குகளையும் கடந்து புதிய ரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேற்கு வங்கத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் இன்றைய முதல்வர் மம்தா பானர்ஜி தனது ஆட்சியின் குறைகளை விமர்சித்த குற்றத்திற்காக ஆனந்த பஜார் பத்திரிக்கா, அமிர்த பஜார் பத்திரிக்கா, டெலிகிராப் போன்ற பத்திரிக்கைகளுக்கு மேற்கு வங்கத்தின் நூலகத்தில் இடமில்லை என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சங்கப் பரிவாரங்களின் அடிச்சுவட்டில் பயணித்து மார்க்சிசத்தை வங்க மண்ணில் துடைத்தெறிவேன் என்று கொக்கரித்து இனிமேல் மேற்கு வங்க கல்விச் சாலைகளில் மார்க்ஸ், எங்கல்ஸ் போன்றவர்களின் கருத்துகள் வரலாற்று பாடப்புத்தகங்களில் இராது என்று அறிவித்துள்ளார்.  மார்க்சியத்தை இருட்டடிப்பு செய்யும் இந்த முயற்சிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய மார்க்சிஸ்ட் கட்சியினரோ தங்களுக்கும் மார்க்சியத்திற்கும் பெயரில்தவிர வேறுசம்பந்தமில்லை என்றுகாட்டினால்தான் நாடாளுமன்ற அரசியலில் முதலாளிகளின் ஆதரவைப் பெறமுடியும் என்பதால் கண்டும் காணாததுபோல் இருக்கின்றனர்.

இதே வழியில் சங்பரிவாரத்தினரின் மாணவர் அமைப்பு போராடியதைக் காரணமாக காட்டி “ஆயிரம் இராமயணங்கள்” என்ற பேராசிரியர் முனைவர். ஏ.கே. ராமானுஜரின் நூல் டெல்லி பல்கலைகழகத்தில் வரலாற்றுப் பாடத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதையொத்த காரணங்களுக்காவே பம்பாய் பல்கலைகழகம், இலக்கியத்திற்காக புக்கர் பரிசு வென்ற பின்ட் அவர்களின் நாவலை இலக்கியப் பாடத்தில் இருந்து எடுத்தெறிந்தது.

இந்தப் பின்னணியில் தான் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பும் புக்கர் பரிசு வென்ற சல்மான் ருஷ்டிக்கும் மறுக்கப்பட்டது. மத அடிப்படைவாதிகளின் ஆதரவை இழ‌க்கக் கூடாது என்பதற்காக இடது முன்னணி ஆட்சியின் போது பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ருதின் மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தற்போது அரசியலமைப்பின் வரலாற்றைச் சொல்லும் சிபிஎஸ்இ பாடத்தில் இருந்த அரசியலைமைப்பை உருவாக்கும் பணியை விரைந்து முடிக்க நேருவும் அம்பேத்காரும் எவ்வளவோ முயன்றும் அது நத்தை வேகத்திலேயே நகருகிறது என்ற விமர்சனத்தைச் சொல்லும் 1949ம் ஆண்டு கார்டூனுக்கு எதிராக தலித் ஜாதிய அரசியல் நடத்தும் கட்சிகள் நாடாளுமன்றத்தில் போர்க் கொடி உயர்த்தின. எங்கும் தனியார் மயமாகி வரும் சூழலில் இருக்கும் கொஞ்ச நஞ்ச அரசு வேலைகளையும் பணக்காரத் தலித்துகளின் பிள்ளைகள் தட்டிப் பறித்துக் கொண்டுபோகும் சூழலில் ஏழைத்தலித்களை ஏமாற்றுவதற்காக அம்பேத்கார் பெயரில் வெறிவாதத்தை தூண்டி விடும் நோக்கில் அம்பேத்காரே எதிர்ப்புத் தெரிவிக்காத கார்டூனுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன தலித் அமைப்புகள். எங்கே நமக்கு தலித் ஓட்டுக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் கம்யூனிஸ்டுகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒட்டு மொத்தமாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.  கல்வியில் பாசிசத்தைக் கொண்டுவரத் துடித்துக் கொண்டிருக்கும் கபில்சிபலும் இதுதான் சாக்கென்று பாடத்திட்டம் எழுதிய கல்வியாளர்களிடம் எந்த விளக்கமும் பெறாமல் உடனடியாக அந்தப் புத்தகத்தையே தடை செய்ததோடு இதுபோன்ற ஆட்சேபகரமான பிற பகுதிகளை நீக்கவும் ஒரு கமிட்டி அமைத்து விட்டார். விளைவு பாடப்புத்தக வரலாறு எழுதும் பணி கல்வியாளர்கள், வரலாற்று ஆசிரியர்களிடம் இருந்து பாசிச ஆட்சியாளர்கள் கைக்கு மாறிவிட்டது.

இவையனைத்தையும் செய்யும் ஆட்சியாளர்கள் கூரைகளில் மேலேறி உரத்த குரல்களில் இந்தியாவை வல்லரசாக்குவோம் என்ற தேசிய வெறிவாத பிரச்சாரத்தை கட்சி வேறுபாடுகளின்றி செய்து கொண்டுள்ளனர். கம்யூனிச இயக்கம் ஈன்றெடுத்த மகத்தான பெண் தலைவர் கிளார ஜெட்கின் ஐரோப்பிய நாடுகளில் பாசிசம் தலைதூக்கிய போது வேதனையுடன் கூறினார், "ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் தனது வரலாற்றுக் கடமையினை ஆற்றத் தவறிய குற்றத்திற்காக பாசிசம் எனும் கொடூரமான தண்டனையை அனுபவித்துக் கொண்டுள்ளது" என்று. அதே வழியில் தான் இந்திய பாட்டாளி வர்க்கத்தின் முழு முதற் பிரதிநிதிகள் என்று தங்களை கூறிக் கொள்ளக்கூடிய அமைப்புகளும் அவர்களது முற்போக்கு எழுத்தாளர் சங்கங்களும் இந்தத் தாக்குதல்களை அடையாளம் கண்டு கொள்ளாமல் அம்பலப்படுத்த முயற்சிக்காமல் தங்களது தாய் அமைப்புகளான கட்சிகளின் நாடாளுமன்றவாத நலன் கருதி முடங்கிக் கிடக்கின்றன.

இச் சூழ்நிலையில் கொடுமையான பாசிசத்தின் கோரப்பற்கள் கருத்து சுதந்திரத்தின் குரல் வளையைக் கடித்து குதறுவதற்கு முன் குறைந்தபட்சம் முற்போக்கு எழுத்துலகம் - அறிவுலக‌மாவது அணிதிரண்டு அதனை முறியடிக்க முயற்சிப்போம்!

கருத்து சுதந்திரத்தின் குரல் வளையை நெரிக்கும் பாசிசப்போக்குகளைக் கண்டித்து கருத்தரங்கம்

இடம் : மணியம்மை மழலையர் & தொடக்கப்பள்ளி, (வடக்குமாசி வீதி கிருஷ்ணன் கோவில் எதிரில்), மதுரை
நாள் : 20 ௦.05 .2012 (ஞாயிறு) நேரம் : காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரை

சிறப்புரை : பேராசிரியர். கோவிந்தன்

                         தோழர்.அ. ஆனந்தன்

                                    தென் இந்திய பொதுசெயலாளர் CWP

ஏற்பாடு : கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP) தமிழ்நாடு
தொடர்பிற்கு: 94430 80634

No comments:

Post a Comment