Saturday, June 2, 2012

இருள் சூழ்ந்த தொழிலாளர் வாழ்வில் மின்னல் கீற்றாக அமைந்தது திருத்தங்கலில் நடைபெற்ற CWP யின் மே தினப் பொதுக்கூட்டம்




கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ),உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி , சென்ட்ரல் ஆர்கனிஷேசன் ஆப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU ) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய  மே தினப்பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் , எஸ்.ஆர். மேல்நிலைப் பள்ளி எதிரில்  27 . 05 . 2012 அன்று நடைபெற்றது. உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி தலைவர் தோழர். வரதராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் தலைமையுரையில் தோழர்.வரதராஜ் பேசும்போது பட்டாசு விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதற்கு காரணம் ஊழலில் திளைக்கும் அதிகாரிகளின் மேத்தனப்போக்கே ஆகும், மே தின தியாகிகள் எந்த காரணத்திற்காக தங்கள் இன்னுயிரை துறந்தார்களோ அந்த நோக்கத்தை இன்னும் அடையமுடியாத நிலையிலையே இன்றும் உழைக்கும் வர்க்கம் இருக்கிறது , இதை அம்பலப்படுத்தி தொழிலாளர்களை அமைப்பாக்கி வருகிறது CWP  என்று குறிப்பிட்டார். 

மேதின உறுதியேற்போம்


உழைக்கும் வர்க்கம் ஒருநாளில் 18 மணி நேரம் வரை வேலை செய்ய நேர்ந்த சூழ்நிலை அதனைப் போராட்டப் பாதைக்குத் தள்ளியது. அதன் விளைவாகத் தோன்றிய போராட்டப் பேரலைகள் 8 மணி நேர வேலை நாளை உறுதி செய்தன. எதிர்ப்பேதுமின்றி உழைக்கும் வர்க்கம் அதனைச் சாதித்துவிட வில்லை. கடுமையான அடக்கு முறைகளை எதிர்கொண்டு எண்ணிறந்த தொழிலாளரின் உயிர்த் தியாகத்தின் விளைவாகவே அது சாதிக்கப்பட்டது.  அதன்மூலம் அடக்குமுறைகளால் உழைக்கும் வர்க்கத்தை நிரந்தரமாக ஒடுக்கிவிட முடியாது என்பது வரலாற்றின் படிப்பினையாகியது.

பாசிச ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தியது கருத்துரிமை குறித்த மதுரை கருத்தரங்கம்



கருத்துரிமை காக்க கருத்தரங்கம் ஓன்று மதுரை மணியம்மையார் மழலையர் பள்ளி வளாகத்தில் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) சார்பில் 20 . 05 . 2012 முற்பகல் 11 மணியளவில் நடைபெற்றது. சுமார் 100  பேர் கலந்து கொண்ட அக்கருத்தரங்கத்திற்கு மாற்றுக்கருத்து இருமாத இதழ் ஆசிரியர் திரு.த. சிவகுமார் தலைமை தாங்கினார். அக்கருத்தரங்கில் கலந்து கொண்டு சென்னையை சேர்ந்த திரு.சுவாமிநாதன் , பேராசிரியர்கள் திரு.சேவுகப்பெருமாள் , திரு. க. கோவிந்தன் ஆகியோரும் CWP யின் தென் மாநிலங்களுக்கான பொதுச் செயலாளர் திரு.அ. ஆனந்தன் அவர்களும் உரையாற்றினர். அவர்கள் தங்கள் உரையில் சமீப காலங்களில் பல மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் எவ்வாறு கருத்து சுதந்திரத்தை பறிப்பவையாக அமைந்துள்ளன என்பதை தெளிவுபடுத்தினர். 

கருத்து சுதந்திரத்தின் குரல் வளையை நெரிக்கும் பாசிசப்போக்குகளைக் கண்டித்து கருத்தரங்கம்




ஆட்சியாளர்கள் நமது சமூக அமைப்பை வெகு வேகமாக பாசிசத்தை நோக்கி கொண்டு சென்று கொண்டுருக்கிறார்கள். வரலாற்றில் ஹிட்லர், முசோலினி ஆகியோர் தங்கள் நாடுகளில் நிலைநாட்டிய பாசிசத்தின் ஐந்து முக்கிய கூறுகள் இருந்தன. ஒன்று மிதமிஞ்சிய தேசிய வெறிவாதம், இரண்டு நாடாளுமன்றங்கள் அரட்டை அரங்கங்களாக குறைக்கப்படுவது; மூன்று அரசின் தாளத்திற்கு ஏற்ற வகையில் ராகம் போடும் நீதி அமைப்பை உருவாக்குவது; நான்கு, தொழிற்சங்கங்கள் போன்ற உழைப்பாளரின் நலன்களுக்காகப் பாடுபடும் ஜனநாயக அமைப்புகள் ஒடுக்கப்படுவது; ஐந்து கருத்து சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்படுவது.

Wednesday, March 28, 2012

லட்சிய தீயை பற்றவைத்தது : பகத்சிங் நினைவுதினப் பொதுக்கூட்டம்


மதுரை சமயநல்லூரில் தியாகி  பகத்சிங்கின் 81 வது  நினைவு தினத்தை முன்னிட்டு கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம்( CWP ) மற்றும் மாணவர் ஜனநாயக இயக்கம் (SDM )  சார்பாக 23.03 .2012 அன்று  நினைவு ஸ்தூபி எழுப்பட்டு CWP  தோழர்கள் மற்றும் அந்த பகுதி வாழும் மக்களால் வீர வணக்கம் செலுத்தப்பட்டது . 25 .03 .2012 அன்று பொது கூட்டமும் நடடத்தப்பட்டது.  மாணவர் ஜனநாயக இயக்கத்தின் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் தோழர். டேவிட் வினோத் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுகூட்டத்தில் CWP,சமயநல்லூர் கிளை பொறுப்பாளர் தோழர்.ராமநாதன் வரவேற்புரை வழங்கினார். மாற்றுக்கருத்து ஆசிரியர் தோழர்.த.சிவகுமார் , உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி மாநில அமைப்பாளர் தோழர் .வரதராஜ் , சமயநல்லூர் மகாதேவன் ,விருதுநகர் மாவட்ட பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர் ஜெகநாதன் , சிவகாசி பட்டாசு தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் தோழர்.தங்கராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

Tuesday, March 20, 2012

தியாகி பகத்சிங் 81 வது நினைவு தினம் பொதுக்கூட்டம்



"புரட்சி உங்களிடமிருந்து உணர்ச்சி வேகத்தையோ மரணத்தையோ வேண்டவில்லை. மாறாக உறுதியான போராட்டம் , துன்பங்கள் மற்றும் தியாகங்களையே அது வேண்டுகிறது". - பகத்சிங்


மார்ச் 23 தியாகி பகத்சிங் 81 வது நினைவு தினம் பொதுக்கூட்டம்

25 .03 .2012 ( ஞாயிறு ) , மாலை 6 மணியளவில்
சமயநல்லூர், தொலைபேசி நிலையம் அருகில்

தலைமை : தோழர்.வினோத் குமார், 
மாநில அமைப்பாளர் , மாணவர் ஜனநாயக இயக்கம் (SDM ) , தமிழ்நாடு

வரவேற்புரை : தோழர்.ராமனாதன்
                                  CWP,சமயநல்லூர் கிளை பொறுப்பாளர்

கருத்துரை : தோழர்.த.சிவகுமார் ,
                          ஆசிரியர் மாற்றுக்கருத்து

                         தோழர்.வி.வரதராஜ்
                         மாநில அமைப்பாளர் , உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி

சிறப்புரை : தோழர். அ.ஆனந்தன் 
                        தென் இந்தியாவிற்கான பொது செயலாளர் , CWP

மார்ச் 23 அன்று சமயநல்லூரில் 
தியாகி பகத்சிங் நினைவு ஸ்தூபி எழுப்பப் பட்டு
வீரவணக்கம் செலுத்தப்படும் 
----------------------------------------------------------------------------------------------------
கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) 
மாணவர் ஜனநாயக இயக்கம் (SDM )

தொடர்பிற்கு : தோழர். ராமனாதன் 9788167871 , தோழர்.வினோத்குமார் 9003828065

Friday, March 2, 2012

சிறப்புடன் நடைபெற்ற மதுரை கருத்தரங்கம்



சென்ட்ரல் ஆர்கனிசே­ன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU), அமைப்பு ,26 .02 .2012  ( ஞாயிறு ) அன்று . மாலை 6 மணி முதல் 9.30  மணி வரை  மதுரை, மணியம்மை  மழலையர் & தொடக்கப்பள்ளியில் , "உழைக்கும் வர்க்கத்தின் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையினைத் தடுக்கும் போக்கை முறியடிப்போம்" என்ற தலைப்பில் கருத்தரங்கத்தை சிறப்புடன் நடத்தியது , சி.ஓ.ஐ.டி.யு. யின் பொறுப்பாளர்  தோழர் கதிரேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கம் சர்வதேச கீதத்தோடு துவங்கியது .  உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி மாநில  அமைப்பாளர் தோழர் வரதராஜ் , 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் தோழர் சுந்தர் , ஏ .ஐ.டி.யு.சி யை சேர்ந்த தோழர் கருப்பன் சித்தார்த்தன் , அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த தோழர் சம்பத் , மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கத்தின் அமைப்பு செயலாளர் தோழர் பாலமுருகன் , பி.எஸ்.என்.எல்.இ.யு. தொழிற் சங்கத்தை சேர்ந்த தோழர் ஆனந்த் ஜெயகுமார் , அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த தோழர் பாரதி, மாற்றுக்கருத்து ஆசிரியரும், கேளாத செவிகள் கேட்கட்டும்- பகத்சிங் புத்தகத்தின் ஆசிரியருமான தோழர் த.சிவகுமார் , ஆகியோர் தொழிற் சங்கங்களின் இன்றைய நிலையினை விரிவாக எடுத்துரைத்தனர். 

உழைக்கும் வர்க்கத்தின் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையினைத் தடுக்கும் போக்கை முறியடிப்போம்




தோற்றதில்லை தோற்றதில்லை தொழிற்சங்கம் தோற்றதில்லை. கேட்டதில்லை கேட்டதில்லை தோற்ற சரித்திரம் கேட்டதில்லை என்ற முழக்கம் எங்கும் ஒலித்த காலம் ஒன்று இருந்தது. தொழிலாளர் அலுவலகங்களில் தொழில் தாவாக்கள் அப்போதெல்லாம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. வேலை நிறுத்தங்கள், தர்ணாக்கள், உண்ணா விரதங்கள், பொதுக் கூட்டங்கள் என தொழிலாளர் பிரச்னைகளை மக்கள் முன் நிறுத்திய பல்வேறு நிகழ்வுகள் தொழிலாளர் அதிகம் குடியிருக்கும் பகுதிகளில் அப்போது நிரம்பி வழிந்தன. ஒரு வகையான போர்க்குணமிக்க அரசியல் சூழல் அப்பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது அப்படிப்பட்ட ஒரு சூழல் இல்லை. அதற்குக் காரணம் அப்போதிருந்த தொழிற்சாலைகள் எல்லாம் இப்போது இல்லாமல் போய்விட்டதனாலில்லை. மாறாக ஒரு காலத்தில் விவசாயம் மட்டுமே ஓரே தொழிலாக நிலவிய நமது கிராமப்புறப் பகுதிகளில் தற்போது பல தொழிற்சாலைகள் புதிது புதிதாக முளைத்துள்ளன. இருந்தும் அப்படிப்பட்ட போர்க்குணமிக்க தொழிலாளி வர்க்க அரசியல் மட்டும் இல்லாமல் போய்விட்டது. முன்பிருந்ததைப் போல் தொழிற்சாலைகளுக்கு முன்பு பல்வேறு தொழிற்சங்கக் கொடிகள் பறக்கும் காட்சி அறவே இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. சில காலங்களுக்கு முன்பு பத்திரிக்கைகளும் இதை அங்கீகரித்து எழுதின: தொழிற்சங்கங்களுக்கு தொழில் வளாகங்களிலிருந்து பிரியாவிடை கொடுக்கப்பட்டுவிட்டது என்று. 

ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் வரலாற்றுப் பூர்வ முயற்சியை வரவேற்போம் - ஆதரிப்போம்


நம் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் மிக அதிகம். அப்பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக இருக்கின்றன என்று கருதப்படக்கூடிய கட்சிகளின் எண்ணிக்கையும் மிக அதிகமே. இன்னும் குறிப்பாகப் பார்த்தால் இருக்கும் அனைத்துக் கட்சிகளிலும் பொறுப்புடன் பிரச்னைகளின் தீர்வுக்காகப் பாடுபடக் கூடியவை என்று அரசியல்  அறிவு கொண்டவர்களால் கருதப்படக் கூடிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கூட நமது நாட்டில் பஞ்சமில்லை. அவ்வாறிருக்கையில் மற்றொரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு உருக்கொடுக்கப் போகிறோம் என்றால் அதற்கான தேவை என்ன என்ற கேள்வி மக்கள் மனதில் யதார்த்தமாக எழவே செய்யும். 

Wednesday, February 1, 2012

SUCI- கட்சியின் தற்போதைய தலைமையுடனான நமது கருத்து வேறுபாடுகள் (Our Differences)


              கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ்  பிளாட்பாரம் ,
தமிழ்நாடு 

முன்னுரை 

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு மாபெரும் தியாக வரலாற்றுடன் பங்கேற்றதும் பரந்த அளவில் மக்கள் ஆதரவினைப் பெற்றிருந்ததும் இந்தியப் பாட்டாளி வர்க்க விடுதலையை சாதித்துத் தரும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டதுமான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திரத்திற்கு முன்பும் , சுதந்திரமடைந்த பின்னரும் பல அடிப்படைத் தன்மை வாய்த்த தவறுகளைச் செய்தது. சுதந்திரமடைந்திற்கு முன்பு இந்திய விடுதலைப் போரில் சமரசமற்ற போக்கினைப் பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்புகளோடு ஒருங்கிணைந்து இந்திய விடுதலைப் போரையே ஒரு மக்கள் ஜனநாயகப் புரட்சியாக மாற்றுவதற்கு அக்கட்சி தவறியது. சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த இந்திய முதலாளி வர்க்கத்தை புரட்சியின் நேச சக்தியாகச் சித்தரிக்கும்  ' தேசிய ஜனநாயகப் புரட்சி ' திட்டத்தை அது தனது அடிப்படை அரசியல் வழியாக முன் வைத்தது. அக்கட்சியும் அதிலிருந்து பிரிந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) உட்பட பல கட்சிகளும் இன்று வரை எந்த முதலாளி வர்க்கம் மக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் மூல காரணமாக உள்ளதோ அந்த முதலாளி வர்க்கத்தை நேச சக்தியாகச் சித்தரிக்கும் ஏதாவதொரு அடிப்படை அரசியல் வழியையே இன்றும் பின்பற்றி வருகின்றன. இதனால் பொங்கிப் பிரவாகித்த மக்கள் எழுச்சி பல தருணங்களில் திசை திருப்பப்பட்டு முடங்கிப் போனதோடு இக்கட்சிகள் அனைத்தும் அப்பட்டமான வர்க்க சமரசப் பாதையைப் பின்பற்றி நாடளுமன்ற மற்றும் தேசியவாதச் சேற்றிலும் சகதியிலும் புரளும் இழி நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதையும் இன்றும் நாம் வேதனையுடன் கண்ணுறுகிறோம்.  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இத்தகைய இமாலயத் தவறுகளிலிருந்து உரிய படிப்பினை எடுத்துக் கொண்டதோடு சர்வதேச சூழ்நிலைகளையும் துல்லியமாக ஆய்ந்து இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான அடிப்படை அரசியல் வழியாக முதலாளித்துவ எதிர்ப்பு சோஷலிஸப் புரட்சிப் பாதையினை முன் வைக்கும் SUCI கட்சியினை பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான தோழர் சிப்தாஷ் கோஷ் அவர்கள் 1948 ம் ஆண்டு ஸ்தாபித்தார். தோழர்.சிப்தாஷ் கோஷின் தலைமையில் செயல்பட்டு பல அறிய வழங்கல்களை உலகக் கம்யூனிச இயக்கத்திற்கும் மார்க்சிஸ - லெனினிஸக் கருவூலத்திற்கும் நல்கும் அளவிற்கு இருந்த அக்கட்சி அவரது மறைவிற்குப் பின் போர்க்குணமிக்க இயக்கம் கட்டும் பாதையினைக் கைவிட்டு சம்பிரதாய ரீதியிலான செயல்பாட்டை மட்டும் நடத்த வல்லதாக ஆகியது. அதன் விளைவாக கட்சி வாழ்க்கையில் உயிரூட்டமிக்க போராட்டத்தை தக்க வைக்கத் தவறியதோடு மார்க்சிஸம் - லெனினிஸத்தையும் தோழர் சிப்தாஸ் கோஷ் சிந்தனைகளையும் வரட்டுச் சூத்திர வாதங்கள் போல் ஆக்கி செயல்படத் தொடங்கியது. இத்தகைய செயல்பாடுகளின் தவிர்க்க முடியாத விளைவாக கட்சியின்  அடிப்படை அரசியல் வழியிலையே தடம் புரளல் ஏற்பட்டு இந்தியாவில்  கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ற பெயரில் செயல்படும் மற்ற கட்சிகளைப் போல் அக்கட்சியும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற கோஷத்தை  பிரதானப்படுத்தி உள்நாட்டு முதலாளித்துவத்தை மூடி மறைத்துக் காக்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்தது. அக்கட்சி இத்திசை வழியில் நடத்திய 'ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாடு' அதன் இத்தகைய போக்கிற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டாகும்.

Thursday, January 26, 2012

முல்லை-பெரியாறு அணை பிரச்னை: கேரள மற்றும் தமிழக உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் அரசியல் வர்க்கத்தின் சந்தர்ப்பவாதத்தை முறியடிப்போம்



தமிழக மற்றும் கேரள மக்களின் ஒற்றுமையைக் குலைத்து அவர்களுக்கிடையில் கடுமையான வெறுப்பையும் பூசலையும் உருவாக்கும் வகையில் பல்வேறு வளர்ச்சிப் போக்குகள் முல்லை பெரியாறு அணையினை மையமாக வைத்துத் தற்போது இரண்டு மாநிலத்தையும் சேர்ந்த அரசியல் வர்க்கத்தினரால் கிளப்பிவிடப் படுகிறது. 

தங்களது தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் அரசியல் கட்சிகளின் பட்டியலில் தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளக் கூடிய கட்சிகளும் இணைந்துள்ளன. 

மேலும் படிக்க

Sunday, January 15, 2012

94-வது நவம்பர் தினம்: தேனி நகரில் பொதுக்கூட்டம்



இந்த ஆண்டு நவம்பர் தினம் நவம்பர் 20-ம் நாளன்று தேனி நகரில் ஒரு பொதுக்கூட்டம் மூலம் சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டது. தேனியில் சி.டபிள்யு.பியின் செயல்பாடுகள் தொடங்கி ஒருசில ஆண்டுகளே ஆன நிலையில் தேனித் தோழர்கள் இப்பொதுக்கூட்ட ஏற்பாட்டினை பெருமகிழ்ச்சியுடனும் பெரும் முயற்சியுடனும் மேற்கொண்டனர். தேனி வட்டாரப் பொதுமக்களும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்குத் தேவையான நிதி உதவியினைத் தந்து பேருதவி புரிந்தனர். 

தேனி பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பகவதி அம்மன் கோவில் திடலில் அழகுற அமைக்கப்பட்டிருந்த மேடையில் மார்க்சிய ஆசான்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் படங்கள் அலங்கரிக்க அக்கூட்டம் நடைபெற்றது.