Wednesday, April 6, 2011

கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) , தமிழ்நாடு - தேர்தல் அறிக்கை

அரசியல் வாதிகள் அதிகாரிகள் போல் ஏழை எளியவர்களையும் ஊழல் மயமாக்கி மக்கள் இயக்கங்களை முடக்கும் வகையில் செயல்படுவோரை முதல் எதிர்களாகப் பாவிப்போம் : முறியடிப்போம்

5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன; அம்மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அதனையொட்டி ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளின் கூட்டணிகள் உருவாகி கூட்டணிக் கட்சிகளிடையே பல்வேறு இழுபறி நிலைகளுக்குப் பின்பு இட ஒதுக்கீடுகளும் முடிவு செய்யப்பட்டுள்ளன. ஆளும் கட்சியான தி.மு.கழகமும் பிரதான எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க.வும் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இரு தேர்தல் அறிக்கைகளிலுமே பல இலவசத் திட்ட அறிவிப்புகள் உள்ளன. இன்னும் தேர்தல் தேதி நெருங்க நெருங்க இரு கட்சிகளிடமிருந்தும் கூடுதல் இலவசத் திட்ட அறிவிப்புகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

அன்றும் இன்றும்


முன்பெல்லாம் தேர்தல்கள் திருவிழாக்கள் போல் பொதுக் கூட்டங்கள் கலை நிகழ்ச்சிகள் என்று பலவகைப் பொது நிகழ்ச்சிகள் மூலம் நடைபெற்றன. அவற்றின் மூலம் மக்களிடம் ஒருவகை பிரமிப்மை உருவாக்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி யார் அத்தகைய பிரமிப்பைக் கூடுதலாக உருவாக்குகிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவர் என்ற கருத்து மக்கள் மனதில் பதிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்படுவையாக இருந்தன. ஆனால் தற்போது அவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டன. இப்போது இலவசத் திட்டங்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு விட்டன. தேர்தல் முறைகேடுகளைப் பொறுத்தவரை முன்பெல்லாம் வாக்குச் சாவடிகளுக்கு வாக்களர்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வது, வாக்குப் பதிவு தினத்தன்று அனைவருக்கும் சாப்பாடு போடுவது போன்றவையே பரவலாக நடைபெறும் முறைகேடுகளாக இருந்தன. ஆனால் இப்போது அத்தகையவை முறைகேடுகள் என்று கருதவேபட முடியாத அளவிற்கு மிகமிகச் சிறியவையாகி விட்டன. அடுத்து கள்ள ஓட்டுப் போடுவதும் அதற்காகப் பிற பகுதிகளிலிருந்து வாகனங்களில் பலரை அழைத்து வருவதும் தேர்தல் ஆணையத்தின் கண்களை உறுத்திய முறைகேடுகளாக இருந்தன. வாகனச் சோதனைகள் அதைத் தடுப்பதற்காக ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டன. இப்போது வாக்குச் சாவடிகளில் அரசு அதிகாரிகளின் உதவியோடு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி வாக்குச்சாவடி ஏஜெண்டுகளின் சாதுர்யத்தையும் பலத்தையும் பொறுத்து முடிந்த அளவு பதிவாகாத வாக்குகளைப் பதிவு செய்வது என்ற அளவோடு அந்தக் கள்ளஓட்டுப் பிரச்னை நின்றுவிட்டது.


பணத்தின் பங்கு


இப்போது மிகப்பெரிய தேர்தல் முறைகேடாக உருவெடுத்துப் பூதாகரமாக வளர்ந்துள்ளது வாக்காளர்களுக்குத் தங்களுக்கு வாக்களிப்பதற்காக வேட்பாளர்கள் பணம் கொடுக்கும் முறையாகும். முன்பும் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் பணம் ஒரு குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றியது. குறிப்பாக கிராமப் புறங்களில் ஒட்டுமொத்த கிராம மக்களின் ஓட்டுகளை வாங்குவதற்காக கோவில் பணிகளுக்குப் பணம் தருவது, ஜாதிகளின் பிரமுகர்களுக்குப் பணம் வழங்கி அவர்களின் ஜாதி ஓட்டுகளைத் தங்கள் பக்கம் திருப்புவது போன்ற அடிப்படைகளில் பணம் வழங்குதல் நடைபெற்றது. அதுதவிர வாக்காளர்களுக்குத் தனித்தனியாக பணம் வழங்குதல் ஆங்காங்கே நடை பெற்றதும் உள்ளாட்சித் தேர்தல்களில் தானே தவிர பொதுத் தேர்தல்களிலல்ல. ஆனால் வாக்குகளுக்குப் பணம் வழங்கும் போக்கு தற்போது தமிழக ஆளும் கட்சியினால் ஒரு கலையாக வளர்க்கப்பட்டு அந்தக் கலையைத் திறம்பட வளர்த்தமைக்காக அதனைத் திறம்படச் செய்தவர்களுக்கு அக்கட்சியின் தென் மாவட்டங்களின் செயலர் போன்ற பொறுப்புகள் வழங்கப்படுவது வரை தற்போது அது வந்துவிட்டது. இந்தப் போக்கை மிகத் திறமையுடன் வளர்த்து இதையே தங்களது தேர்தல் அரசியலின் ஒரு முக்கிய ஆயுதமாக ஆளும் கட்சி தற்போது கொண்டிருக்கிறது. பொதுவாகப் பணம் வாங்கியோர் வாக்களிப்பர் என்ற உறுதியில்லாத நிலை பணம் செலவழித்து வெற்றி பெற்று விடலாம் என்று கருதியவர்களை ஆட்டிப் படைப்பதாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் அந்தத் திட்டத்திலிருந்த ஓட்டைகள் எல்லாம் அடைக்கப்பட்டுத் தற்போது பணம் வாங்கியோர் பணம் கொடுத்தவருக்கு வாக்களிக்காமல் பெரும்பாலும் தப்பிக்க முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு விஞ்ஞானபூர்வ விதத்தில் அது ஏற்பாடு செய்யப்படுகிறது.

மலைக்க வைக்கும் பெரும் தோகைகள்


முன்பெல்லாம் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதென்றால் அந்தப் பணம் அத்தனை பெரிய தொகையாக இல்லை. ஆனால் இப்போது இடைத் தேர்தல்கள் என்றால் ஒரு வாக்கிற்கு 5,000 என்ற அளவிற்கும் பொதுத் தேர்தல்கள் என்றால் 1,000 குக் குறையாத தொகை என்ற அளவிற்கும் அது வழங்கப்படுகிறது. தற்போதெல்லாம் 2 லட்சத்திற்குக் குறைவான வாக்காளர்களைக் கொண்டவையாக சட்டமன்றத் தொகுதிகள் இருப்பதில்லை. நாடாளுமன்றத் தொகுதிகளைப் பொறுத்தவரையில் ஏறக்குறைய ஒரு தொகுதியில் வாக்களர் எண்ணிக்கை 10 லட்சம் என்ற அளவிலானதாக உள்ளது. இத்தனை லட்சக் கணக்கில் இருக்கும் வாக்காளர்களுக்கும் ஆயிரக் கணக்கில் கொடுப்பதற்கு எவ்வளவு பணம் தேவை என்று எண்ணிப் பார்த்தால் பலருக்கு தலை சுற்றலே வந்துவிடும். சில காலங்களுக்கு முன்பு இவ்வளவு பெரும் தொகைகளை ஒருகட்சி ஏற்பாடு செய்து வாக்காளர்களுக்கு வழங்கப் போகிறது என்று யாராவது கூறினால் அதை யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் அது செய்யப்பட முடியும் என்பது வெளிப்படையாகவே பல்வேறு தேர்தல்களில் தற்போது நிரூபிக்கப் பட்டுள்ளது. அது ஒரு வகையான மலைப்பைத் தேர்தல்கள் முறையாக நடக்க வேண்டும் என்று கருதும் ஜனநாயக சக்திகளிடம் ஏற்படுத்தியுள்ளது. இத்தனை பெரிய அளவில் தேர்தல் முறைகேடுகள் செய்வதற்குத் தேவையான பணத்தை எப்படி ஆளும் கட்சி ஏற்பாடு செய்தது என்பது ஒரு மிகப்பெரும் கேள்வியாக மக்கள் மனதில் எழுந்து நிற்கிறது. வழக்கமாக ஆண்டு கொண்டிருக்கும், ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பிருக்கும் அரசியல் கட்சிகள் அவற்றின் செயல்பாட்டிற்குப் பெரிய பெரிய முதலாளித்துவ நிறுவனங்களிடமிருந்து வரும் நன்கொடைத் தொகைகளையே நம்பியிருக்கின்றன. இது யாரும் மறுக்க முடியாத வெளிப்படையான ரகசியம். அடிப்படை சமூக மாற்றத்தை வலியுறுத்தாத அனைத்துக் கட்சிகளுக்கும் ஏதாவதொரு விதத்தில் முதலாளித்துவ நிறுவனங்கள் கட்சிகளின் செல்வாக்கைப் பொறுத்து நிதி வழங்குவது எப்போதும் நடைபெற்றுக் கொண்டுள்ளது. அத்தகைய நிதியினைக் கொண்டே அக்கட்சிகள் செயல்படுகின்றன.

நன்கொடைகள்

தமிழகத்தைப் பொறுத்தவரை இத்தகைய நிதி வழங்கல் ஆளும் கட்சி பெரும் அளவிற்கு எதிர்கட்சியினருக்கும் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.ஒரு வகையில் எதிர்க்கட்சியினருக்கு இத்தைகைய முதலாளித்துவ நிறுவனங்களிலிருந்து வரும் நன்கொடைகள் மூலமான வரவுகள் கூடுதலாக இருந்தாலும் அதில் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனெனில் தற்போதைய தமிழகத்தின் எதிர்க்கட்சியைப் பொறுத்தவரை அதன் தலைமை தமிழக தனியார் தொழில் மற்றும் வர்த்தக தனி உடமையின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக அமைப்பில் அத்தனை உடமைக்கு அதரவாக அதற்குச் சேவை செய்வதற்காகச் செயல்படும் கட்சிகளோ அல்லது அவற்றின் முதல்தர தலைவர்களோ தாங்களே லாபம் ஈட்டும் தனியார் நிறுவனங்களை நடத்துவதில்லை. அதாவது அக்கட்சிகள் மற்றும் தலைவர்களின் முதன்மையான பனி தனியுடமை சார்ந்த தனியார் தொழில்களுக்கும் வர்த்தகத்திற்கும் உதவி புரிவது என்பதாகவே இருந்தது. அதற்கு பிரதியுபகாரமாகத்தான் அந்நிறுவனங்கள் அக்கட்சிகளின் பராமரிப்பிற்காக நன்கொடைகள் வழங்குகின்றன. தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. இப்போது வரை இத்தகைய தொரு கட்சியாகவே உள்ளது.


கட்சியா முதலாளிகளின் கூடாரமா

ஆனால் தமிழகத்தை ஆளும் தி.மு.கழகமோ இதிலிருந்து பெரிதும் மாறுபட்டதாக உள்ளது. அக்கட்சியின் முதல்தரத் தலைவர்களின் கைவசம் எளிதில் பணம் ஈட்ட வழிவகை செய்யும் பெரும்பாலான தொழில்கள் உள்ளன. காட்சி மற்றும் எழுத்து ஊடகத்துறை தமிழகத்தைப் பொறுத்தவரை ஏறக்குறைய அக்கட்சி தலைமைக் குடும்பத்தின் கட்டுப்பாட்டிலையே உள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி தென் மாநிலங்கள் அனைத்திலும் அக்குடும்பத்திற்குச் சொந்தமான காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் மிகப்பெருமளவு உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய செல்போன் நிறுவனங்களுடன் போட்டியிடும் தன்மை வாய்ந்த செல்போன் நிறுவனம் ஓன்று அதன் கைவசம் உள்ளது. விமானப் போக்குவரத்திலும் அதன் முக்கியத் தலைவர்களின் பிள்ளைகள் தடம் பதித்துள்ளனர். திரைப்படத்துறை முழுக்க முழுக்க ஆளும் கட்சித் தலைமைக் குழுமத்தின் கைவசம் உள்ளது. இதுதவிர காப்பிட்டுத் துறை போன்றவற்றிலும் அவர்களின் ஆதிக்கம் குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது. இதுதவிர மத்திய அரசியலில் தி.மு.கழகம் கூடுதல் பங்காற்றத் தொடங்கிய பின்னர் மத்திய ஆளும் கட்சிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டு தி.மு.க.தலைமைக் குடும்பமும் உறவினர்களும் தொடங்கும் , நடத்தும் தொழில்களுக்கு உகந்த அமைச்சகங்களைக் கோரிப்பெருவதற்கே பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம் குறிப்பாகத் தமிழக ஆளும் கட்சிக் குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தும் ஊடகங்கள் பெரும் வளர்ச்சி கண்டன. தலைமையின் உறவினர் நடத்தும் செல்போன் நிறுவனமும் பெரு வளர்ச்சி கண்டது. அதன் நிலை அகில இந்திய ஏகபோக செல்போன் நிறுவனங்களோடு போட்டியிடும் அளவிற்கு உயர்ந்தது. சில உரிமங்களைக் கொடுத்து அதற்காக ரொக்கமாகப் பணம் பெறுவதைக் காட்டிலும் சில நிறுவனங்களை தாங்களே தொடங்கி அவற்றை அத்தகைய பணம் வருவதற்கான வடிகால்களாகப் பயன்படுத்தும் முறை அக்கட்சித் தலைமையினால் மிகத் திறமையாகப் பயன்படுத்தப் பட்டது. அதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு 2 ஜி அலைக்கற்றை உழலாகும்.

இதுதவிர தி.மு.க.தலைமையின் குடும்ப உறுப்பினர்கள் மாநிலத்தின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளின் கட்சிப் பொறுப்புகளைப் பெற்றோ அல்லது பெறாமலோ செல்வாக்கு செலுத்தும் சூழ்நிலை கொண்டுவரப்பட்டதால் கட்சியின் மாவட்டத் தலைமைகள் அப்பகுதிகளின் வர்த்தக, தொழில் நிறுவனகளிலிருந்து நடத்திய நிதி வசூல்களின் பெரும் பகுதி அந்தக் குடும்ப உறுப்பினர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு விட்டது. இந்த முறைகளின் மூலம் குவிக்கப்படும் பெரும் பணத்தின் ஒரு பகுதி வாக்காளார்களுக்குப் பணமாகக் கொடுக்கப்பட்டு அதன்மூலம் வாக்குகள் பெறுவதை அக்கட்சி தற்போது முழுமையாக நம்பியுள்ளது.

கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறை

இதுபோல் ஆளும் கட்சியின் தலைமைக் குழுமமே முதலாளித்துவ நிறுவனங்கள் பலவற்றை நடத்துவதாக ஆக்கியுள்ளதால் வர்க்கப் போராட்டங்களை தனியார் முதலாளிகள் எத்தகைய அடக்கு முறைகளை கையாண்டு அடக்க விரும்புவார்களோ அத்தகைய அடக்குமுறைகளைக் கூசாமல் கையாளும் ஆட்சியாக இந்த ஆட்சி மாறியுள்ளது.தங்களது தேர்தல் அரசியலுக்குப் பயன்படும் அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு போன்ற பொருளாதரா விஷயங்களில் ஓரளவு தாராளத்துடன் நடந்து கொள்ளும் தி.மு.க. ஆட்சி, மிகமிகக் குறைந்த ஊதியத்தை பெற்றுப் paniபணி புரியும் சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தை வழி நடத்துபவர்களை மாவோயிஸ்டுகளோடு தொடர்புடையவர்கள் என்று மிரட்டுகிறது. அரசு ஊழியர்களின் பொருளாதார விஷயங்களில் காட்டும் தாராளம் அவர்களது உரிமை குறித்த விஷயங்களில் காட்டப்படுவதில்லை. அவர்கள் ஆளும் கட்சியின் தொண்டர்கள் போல் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். அதனை எதிர்த்தால் அடக்கு முறைகளை எதிர்கொள்ள வேண்டியவர் ஆகிறார்கள். மக்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து நடத்தப்படும் அனைத்துப் போராட்டங்களும் கடும் அடக்குமுறைக்கு ஆளாகின்றன.

சமூக மதிப்புகளுக்குக் சாவுமணி

அப்பாவி ஏழை மக்களின் வாயினை அடைக்க இலவசத் திட்டங்கள், வாக்கிற்குப் பணம் , கலைஞர்கள், கவிஞர்கள், இலக்கிய வாதிகளின் வாயை அடைக்கப் பட்டங்கள், பண உதவிகள், ஊழலில் ஈடுபடும் தரம் தாழ்ந்தவர்களை, தாழ்த்தப்பட்டவர் என முத்திரையிட்டுச் சாதிய வாதத்தைக் கிளம்புவது, உழைக்கும் மக்களின் போராட்டங்களைக் கடுமையாக அடக்குவது, அவர்களது உரிமைகளைப் பறிப்பது, அவர்களது இயக்கங்களை முன்னெடுக்க முயல்வோருக்கு மாவோயிஸ்ட் முத்திரை குத்துவது என பாசிசப் போக்கின் அனைத்துக் கூறுகளையும் கொண்டதொரு கட்சியாக இக்கட்சி உருவெடுத்துள்ளது. சமூகத்தின் மதிப்புகள் அனைத்திற்கும் சாவு மணி அடிக்கும் போக்கு அக்கட்சியின் ஆட்சியில் தமிழகத்தில் தலை விரித்தாடுகிறது.

கோட்பாடற்ற எதிர்நிலை

ஆனால் ,இக்கட்சிக்கு எதிரணியினைக் கட்டியிருக்கும் முக்கிய எதிர்க்கட்சி இவை அனைத்தையும் எதிர்க்கும் முனைப்புடன் உள்ளதா என்று பார்த்தால் அவ்வாறில்லை. அதனை வாக்கிற்குப் பணம் கொடுக்கும் ஆளும் கட்சியின் போக்கை அது எதிர்கொள்ளும் விதத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம். ஏழை எளிய மக்களின் தார்மீக முதுகெலும்பினையும், நியாய உணர்வினையும், சுய மரியாதையையும் இல்லாமற் செய்யும் வாக்கிற்குப் பணம் கொடுக்கும் போக்கினை கோட்பாடு ரீதியாக எதிர்க்கும் திராணியின்றி அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அது உங்கள் பணம்; வாங்கிக் கொண்டு வாக்குகளை எங்களுக்கு அளியுங்கள் என்ற நாடாளுமன்ற அரசியலில் லாபம் தேடும் வாதத்தையே அக்கட்சி முன்வைக்கிறது. மக்களை ஏமாற்றுவது, முதலாளித்துவ சேவை, உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பறிப்பது போன்ற அனைத்து விசயங்களிலும் எதிர்க்கட்சி ஆளும் கட்சியிலிருந்து அடிப்படையில் குணாம்ச ரீதியாக வேறுபட்டதாக இல்லை. ஒளிவு மறைவின்றிச் சொல்லப் போனால் முழுக்க முழுக்க நாடாளுமன்ற வாதத்தையும், தேர்தல் அரசியலையும் மட்டுமே அரசியல் என்று கருதும் எந்தக் கட்சியும் இந்த விசயங்களில் அடிப்படையில் மாறுபட்டவையாக இருக்கவும் முடியாது. ஏனெனில் அக்கட்சிகள் எவையும் அடிப்படையான சமூக மாற்றத்தை வலியுறுத்துபவை அல்ல. இந்த அமைப்பை ஒட்டுப் போட்டுப் பராமரிக்க முயல்பவையே. எனவே இந்தக் கேடுகெட்ட பாசிஸப் போக்குகளை எதிர்க்க முடிந்தவை அடிப்படை சமூக மாற்றத்தை வலியுறுத்தும் அமைப்புகளாக மட்டுமே இருக்க முடியும். அடிப்படை சமூக மாற்றத்தைக் கொண்டுவரத் தேர்தலை மட்டும் நம்பியிருப்பதால் பயனில்லை. அடிப்படை மாற்றத்திற்கான பாதையை மக்களின் ஒன்றுபட்ட பல இயக்கங்கள் மூலமே உருவாக்க முடியும். அப்படிப்பட்ட மக்கள் இயக்கங்களுக்கு உதவி புரியும் வகையிலேயே அவ்வமைப்புகளின் தேர்தல் பங்கேற்பு இருக்க வேண்டும். அதாவது அத்தகைய அமைப்புகள், பணத்திற்கு ஆசைப்பட்டு வாக்குரிமையை விற்கத் தயாராகும் மக்களின் வாக்குகள் நமக்குக் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை; அதனை ஜனநாயக சக்திகள் அனைத்தையும் ஒருங்கு திரட்டி கோட்பாடு ரீதியாகவும், பொது வாழ்வில் உயர்ந்த நீதி ஒழுக்க நெறி முறைகளை வலியுறுத்தும் விதத்திலும் எதிர்க்க வேண்டும்; அதன் மூலம் மட்டுமே மக்களிடம் இயக்க மனப்பான்மையை உருவாக்கவும் வளர்க்கவும் அவற்றின் மூலம் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடவும் முடியும் என்று கருதுபவையாக இருக்க வேண்டும். அத்தகைய கோட்பாடு ரீதியான நிலையினை மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி சக்திகளால் மட்டுமே எடுக்க முடியும். ஆனால் அத்தகைய சக்திகளில் பல இயக்க ரீதியான அரசியலுக்கு முன்னுரிமை தராமல் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணைந்து நிற்கின்றன. வர்க்கப் போராட்டப் பாதையைக் கைவிட்டுவிட்ட அக்கட்சிகள் அப்பட்டமான வர்க்க சமரச சக்திகளாகவும் ஆகிவிட்டன. இந்நிலையில் மக்கள் இயக்கங்களை மையமாக வைத்த அரசியலை அனைவரின் கவனத்தையும் திருப்பும் வண்ணம் மக்கள் முன்பு வலிமையுடன் நிறுத்துவது பெரிதும் சாத்தியமானதாக இல்லை. ஆக்கபூர்வ உண்மை இந்நிலையில் இது தேர்தல் அரசியல் தானே அது எக்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும் என்று அது குறித்து நிலை எதுவும் எடுக்காதிருப்பதும் சரியான நிலைபாடாக இராது. ஏனெனில் சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதில் சரியான வழியினைக் காட்ட வல்லதான மார்க்சியத் தத்துவம் உண்மையினை அடிப்படையாகக் கொண்டது. அந்த உண்மையும் வேதாந்திகள் முன்வைப்பது போன்ற நடைமுறை விசயங்களில் செயல் புரியாத மலட்டுத்தனமான உண்மையல்ல. மார்க்சியம் முன்வைக்கும் உண்மை நடைமுறை சாத்தியமானது. எனவே இந்தச் சூழ்நிலையிலும் கூடப் பாடுபடும் மக்களுக்கு அது ஒரு ஆக்கபூர்வ வழியினைக் காட்ட முடிய வேண்டும். எனவே இன்றைய நிலை வேண்டுகின்ற அளவிற்கான மக்கள் இயக்கங்களை வலுவுடன் கட்டியமைக்கும் அளவிற்கு அமைப்பு ரீதியான வலுவினைக் கொண்டிராததாக இருக்கும் நமது அமைப்பு ஒப்பு நோக்குமிடத்து ஒரு சரியான ஆக்கபூர்வ நிலையினை இந்தத் தேர்தல் வேளையில் கட்டாயம் மக்கள் முன் வைக்க வேண்டும். அந்த அடிப்படையினைக் கொண்ட நிலை சமூக மதிப்புகளையும், தார்மீக ஒழுக்க நெறிகளையும், பணம் கொடுத்து வாக்குப் பெறும் முறையை அறிமுகம் செய்து ஏழை மக்களையும் ஊழலின் பங்காளிகளாக்கி தகர்த்துக் கொண்டிருக்கும் சக்திகளுக்கு எதிரானதாக இருக்க வேண்டும். முதலாளித்துவ ஆதரவு என்பதைத் தாண்டி தாங்களே எளிதில் லாபம் ஈட்ட அனைத்துத் தொழில்களிலும் முதலாளிகளாகிக் கொண்டிருக்கும் சக்திகளுக்கு எதிரானதாக இருக்க வேண்டும். ஊழல் அரசியலில் ஈடுபடும் தரம் தாழ்ந்தவர்களின் சாதிய முக விலாசத்தை முன்னிறுத்தி சமூகத்தை சீர்குலைக்க முயலும் பாசிஸ சக்திகளுக்கு எதிரானதாக இருக்க வேண்டும். மக்கள் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்ட அரசியலுக்கு அளவு ரீதியாக முதற்பெரும் எதிரியாக இன்று விளங்கும் மேற்கூறிய அனைத்துக கேடுகெட்ட கூறுகளையும் கொண்டதாக உள்ள ஆளும் தி.மு.கழக, காங்கிரஸ் கூட்டணியை இத்தேர்தலில் தோற்கடிப்பது என்பதாக அது இருக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே பாசிஸப் போக்குகளும், சமூகச் சீரழிவும், சுயமரியாதை உணர்வற்ற தன்மையும் தமிழ்ச் சமூகத்தைப் பாதித்துக் கொண்டிருக்கும் வேகத்தைத் தற்காலிகமாகவாவது கட்டுப்படுத்த முடியும்.


தார்மீக நெறிகளையும் இயக்கப் பாதையையும் பாதுகாப்போம்


ஏனெனில் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பது போன்ற போக்குகள் தங்கு தடையின்றித் தொடர அனுமதிக்கப் பட்டால் அவை பாடுபடும் ஏழை மக்களை இரங்கல் மன நிலைக்குக் கொண்டு வந்துவிடும். அவர்கள் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பதால் வெற்றி பெற்றுச் செல்பவர்கள் எத்தகைய முறை கேடுகளைச் செய்தாலும் அவர்களைக் கேள்வி கேட்கும் தார்மீக உரிமை அற்றவர்களாக ஆகிவிடுவர். தற்போது அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் இருப்பது போல் ஏழை மக்களும் ஊழலின் பங்குதாரர்களாக ஆக்கிச் சீரழிந்து விடுவர். அதனால் அவர்களிடம் உருவாகும் கலாச்சாரப் பின்னடைவைக் களைந்து இயக்கப் பாதையில் கொண்டுவந்து நிறுத்துவது ஒரு இமாலயப் பணியாக ஆகிவிடும். சமூக மாற்ற சக்திகளைப் பொறுத்தவரை எப்போதுமே ஆளும் வர்க்கத்திற்குச் சேவை புரிய ஆட்சியாளர்களாக வருபவரை எதிர்க்க அவற்றின் கைவசம் இருக்கும் ஒரே ஆயுதம் மக்கள் இயக்கமே. ஆளும் தி.மு.கழகம் அமல் படுத்தும் பாசிஸ நடைமுறைகள் அத்தகைய இயக்கங்களுக்கான வாய்ப்பையே நீண்ட காலத்திற்கு நிரந்தரமாக முடக்கிப் போட வல்லவையாக உள்ளன. இவை வெளிப்படையான அடக்கு முறைகளைக் காட்டிலும் கூடக் கொடுமையானவை. அதனை உணர்ந்து உணர்வு பெற்ற உழைக்கும் மக்கள் தி.மு.கழகக் கூட்டணிக்கு எதிராக இத்தேர்தலில் வாக்களித்து மக்கள் இயக்கங்களுக்கான வாய்ப்பை ஓரளவிற்கேனும் காப்பாற்ற முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்பிற்கு :

கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பிளாட்பார்ம்(CWP),தமிழ்நாடு communistworkersparty@gmail.com

No comments:

Post a Comment