Saturday, March 12, 2011

சீருடனும் சிறப்புடனும் நடைபெற்ற சி.டபிள்யு.பி . யின் அமைப்பு மாநாடு



கம்யூனிஸ்ட் வொர்க்கர்ஸ் பிளாட்பார்மின்(CWP) அகில இந்திய அமைப்பு மாநாடு நவம்பர் 19, 20, 21ம் தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. நவம்பர் 19 மற்றும் 20 தேதிகளில் மதுரை கண்ணனேந்தல் ஜி.ஆர். நகர் ஆர்.ஆர். திருமண மண்டபத்தில் அகில இந்திய அளவிலான 49 பங்கேற்பாளர்களைக் கொண்ட உள் அரங்க மாநாடு நடைபெற்றது. நவம்பர் 21 ம் நாள் செல்லூர் கண்ணையா முத்தம்மாள் திருமண மண்டபத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. உள்அரங்கில் நடைபெற்ற மாநாட்டினை தோழர் எஸ்.சங்கர் சிங்கும் தோழர் அ.ஆனந்தனும் தலைமையேற்று நடத்தினர். பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசக் கொடியினைத் தோழர் சங்கர் சிங் ஏற்றினார். அதன்பின் சி.டபிள்யு.பி.யின் அகில இந்திய அமைப்புக் குழுவினால் தயாரிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு அமைப்பு ரீதியான செயல்பாட்டில் ஈடுபட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ள சூழ்நிலையை விளக்கும் அறிக்கை மீதான விவாதம் நவம்பர் 19ம் நாள் நடைபெற்றது.



நவம்பர் 20 அன்று சர்வதேசிய, தேசிய சூழ்நிலைகளை விளக்கும் ஆவணம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அது இரு கூட்டத் தொடர்களில் முழுமையாக விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் கட்சியின் அமைப்புச் சட்டம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப் பட்ட பின்னர் புதிய மத்தியக் குழு ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது.

கட்சியின் சேர்மனாகத் தோழர் சங்கர் சிங்கும் அதன் பொதுச் செயலாளர்களாக இந்தியாவின் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் தோழர் பாட்டிக் கோஷ், தோழர் கியான் சிங் மற்றும் தோழர் ஆனந்தன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். பிற மத்தியக் குழு உறுப்பினர்களாகத் தோழர்கள் கே.டி.சர்மா (மத்திய பிரதேசம்), விபின் மகதோ(பிஹார் மற்றும் ஜார்கண்ட்), மோதிலால்(உத்திரப் பிரதேசம்), லக்வே(மகாராஷ்டிரா), புதேவ் ராய்(மேற்கு வங்கம்), த.சிவக்குமார் மற்றும் பிரேம் குமார்(தமிழ்நாடு) ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த தோழர் கதிரேசன் மத்தியக் கமிட்டிக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நிரந்தர அழைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இரண்டு நாட்களாக நடைபெற்ற உள் அரங்கக் கூட்டத் தொடர்களில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மீது பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. ஆங்கிலம், இந்தி, வங்காளம், தமிழ் ஆகிய மொழிகளில் அனைத்து விவாதங்களும் தோழர்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு மொழி பெயர்க்கப்பட்டன. விவாதங்கள் மிகுந்த உயிரோட்டத்துடன் நடத்தப்பட்டன.
நவம்பர் 21ம் நாள் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்குத் தோழர் த.சிவக்குமார் தலைமை ஏற்றார். தொண்டை வலியால் உரையாற்ற முடியாத நிலையில் இருந்த தோழர் சங்கர் சிங்கின் எழுத்து மூலமான உரை கூட்டத்தில் வாசிக்கப் பட்டது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பினை தோழர் பிரேம் குமார் செய்தார். வங்கத்தைச் சேர்ந்த தோழர் புதேவ் ராயின் ஆங்கில உரையையும் அவரே தமிழ்ப்படுத்தி வழங்கினார். அதைப் போல் ஜார்கண்டைச் சேர்ந்த தோழர் விபின் மகதோவின் எழுச்சி மிகு இந்தி உரையையும் தோழர் பிரேம் குமாரே தமிழாக்கினார். இறுதியில் தோழர் அ.ஆனந்தன் சிறப்புரை வழங்கினார்.
தோழர் த.சிவக்குமார் தனது தலைமை உரையில் இன்று நாடு எதிர் கொண்டுள்ள பல எதிர்மறையான சூழ்நிலைகளில் மக்கள் இயக்கங்களைச் சமூக மாற்றத் திசை வழியில் முன்னெடுத்துச் செல்ல ஒரு சரியான கம்யூனிஸ்ட் கட்சி இல்லை. அதனால் தான் சி.டபிள்யு.பி. அமைப்பு உருவாக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பதை விளக்கினார்.
தோழர் சங்கர் சிங் தனது எழுத்து மூலமான உரையில் தனது பேச இயலாத நிலைக்கான வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு இன்று கட்சிகள் என்ற பெயரில் தன்னல வாதிகளால் பண வலிமையையும் குண்டர் பலத்தையும் கொண்டு பல கட்சிகள் செயல்படும் போக்கை வேதனையுடன் எடுத்துரைத்தார். முதலாளி வர்க்க நலன்களுக்காகச் செயல்படும் அக்கட்சிகளின் தலைவர்கள் சொத்துக் குவிப்பதில் மட்டும் மும்முரமாக ஈடுபடுகின்றனர். அதைக் கண்ணுறும் மக்கள் கட்சிகள் மீதும் அதன் தலைவர்கள் மீதும் ஒரு அருவெறுப்புணர்வினைக் கொண்டவர்களாக ஆகி வருகின்றனர்; கட்சிகள் குறித்த இத்தகைய எதிர்மறை உணர்வு மக்கள் மனதில் ஆதிக்கம் செலுத்துவதால் அரசியல் அரங்கில் சி.டபிள்யு.பி.யின் பிரவேசத்தையும் அவர்கள் வரவேற்பார்கள் என்று கூற முடியாது.

இருந்தாலும் விலையுயர்வு, வேலையின்மை, முறையான கல்வி வசதியின்மை, எங்கும் பரவிவரும் கலாச்சாரச் சீர்கேடுகள் ஆகியவற்றை உருவாக்கி வளர்த்து வரும் முதலாளித்துவத்தை அகற்றுவதற்காகப் பாடுபடவே இன்று இருக்கும் அனைத்துக் கட்சிகளிலிருந்தும் வேறுபட்ட இக்கட்சியை உருவாக்குவது அவசியமாகியுள்ளது; எனவே அந்த முயற்சிக்கு மக்கள் தங்கள் ஆதரவினைத் தர முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு முன்வருவார்கள் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்துக் கொண்டு தனது உரையை அவர் நிறைவு செய்தார்.

தோழர் விபின் மகதோ தனது இந்தி உரையில் எவ்வாறு இன்றைய அரசியல் வாதிகள் மக்களைக் கொள்ளையடிப்பவர்களாகவும் சூறையாடுபவர்களாகவும் ஆகியுள்ளனர் என்பதையும், ஊழல் எவ்வாறு இன்றைய அரசியலின் ஊற்றுக் கண்ணாகி விட்டது என்பதையும் எடுத்துரைத்தார். இந்நிலையில் இப்போக்குகளை எதிர்கொண்டு முறியடிக்க சி.டபிள்யு.பி. போன்ற ஒரு சரியான கம்யூனிஸ்ட் கட்சி அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.
அதன்பின் உரையாற்றிய தோழர் புதேவ் ராய் தனது ஆங்கில உரையில் தற்போதைய சீரழிந்து வரும் உலக மற்றும் இந்தியச் சூழ்நிலைகள் மனிதர்களை மிருகங்களாக்கி வருகின்றன; சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சமூக மதிப்புகள் அழிந்து இருந்த இடம் தெரியாமல் போய்க் கொண்டுள்ளன; கம்யூனிஸ்ட்களின் ஆட்சி நடைபெறுவதாக மக்கள் நம்பும் மேற்கு வங்கமும் ஊழல் அரசியலுக்கு அப்பாற் பட்டதாக இல்லை; அதனைச் சில மாதங்களுக்கு முன்பு உருளைக் கிழங்கு விற்பனையில் நடைபெற்ற ஊழலிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அவ்வூழலில் ஈடுபட்ட சி.பி.ஐ(எம்). கட்சி ஊழலின் உத்தமப் பொதுக் காரணியாக(Highest Common Factor ) ஆகியுள்ளது. சி.டபிள்யு.பி.யின் பல தலைவர்கள் முன்பு இணைந்து செயல்பட்ட கட்சி எஸ்.யு.சி.ஐ.; அதுவும் தடம் புரண்டு புரட்சிப் பாதையை விட்டு விலகிச் சென்றுள்ளது; அக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் சிப்தாஸ் கோ´ன் கருத்துக்களைச் சரியாகச் செயல்படுத்தும் அமைப்பாக சி.டபிள்யு.பி.யே ஆகும் வாய்ப்புள்ளது. இந்த ஆரம்ப நிலையிலேயே ஏழு மாநிலங்களில் தனது அமைப்பினைக் கொண்டதாக வலுவுடன் விளங்கும் சி.டபிள்யு.பி.க்கு மிகச் சிறந்த எதிர்காலம் நிச்சயம் உள்ளது என்ற கருத்துக்களை முன்வைத்தார்.

அடுத்து உரை நிகழ்த்திய தோழர் ஆனந்தன் தனது சிறப்புரையில் முன்வைத்த கருத்துக்களின் சாராம்சம்:


மக்கள் அரசியல் கட்சிகளை அருவெறுப்புடன் தற்போது பார்க்கின்றனர். ஆனால் அது காலங்காலமாக இருந்ததல்ல. அரசியல் வாதிகளை அவர்கள் மரியாதையுடன் பார்த்த ஒரு காலமும் நமது நாட்டில் இருந்தது.


சீர்திருத்த வாதம்
ஒரு காலத்தில் சீர்திருத்தவாதத் தன்மை கொண்டதாக ஆளும் வர்க்க அரசியல் இருந்த போது கூட அதன் தலைவர்கள் மக்கள் மத்தியில் மதிப்புடையவர்களாகவே விளங்கினர். அவர்கள் கடைப்பிடித்த சீர்திருத்த வாதத்தினால் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க முடியவில்லை. சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட நாம் வாழும் முதலாளித்துவ சமூகத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் எதற்கும் அது நிரந்தரத் தீர்வினைத் தரவில்லை; அவ்வாறு அதனால் தரவும் முடியாது. எனவே அந்த அரசியலைப் பயன்படுத்தி முதலாளிகள் வளர்ந்ததைக் கண்ணுற்ற சீர்திருத்தவாத மனநிலையோடு ஊழல் அரசியலில் ஈடுபடாது இருந்த அரசியல் வாதிகள் கூட நாளடைவில் அவ்வாறிருப்பதால் என்ன பலன் என்ற எண்ணத் தொடங்கினர். படிப்படியாக பணம் பண்ணும் ஊழல் அரசியலில் ஈடுபடத் தொடங்கினர். அதனால் இன்றைய அரசியல் முதலீடு செய்து நடத்தும் தொழில் போல் ஆகிவிட்டது. கூச்சநாச்சமின்றிக் கட்சி மாறும் போக்கு கட்சிகளின் உயர் மட்டத் தலைவர்களிடம் கூட வந்துவிட்டது.

தவறான அடிப்படை அரசியல் வழி
ஆளும் வர்க்க அரசியலின் சீரழிவிற்கு அதன் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ நலன் பேணும் போக்கு காரணமாக இருந்ததென்றால் கம்யூனிஸ்ட் என்ற பெயரில் இங்கு நடைபெற்ற அரசியலின் சீரழிவிற்குச் சித்தாந்த அடிப்படையில் செயல்படுவதாகக் கூறிக் கொண்ட அக்கட்சிகளின் தவறான அடிப்படை அரசியல் வழிகள் காரணமாக இருந்தன. வெள்ளையரிடமிருந்து அரசியல் அதிகாரம் தேசிய முதலாளிகளின் கரங்களுக்கு மாறி தேசிய முதலாளிகளின் சுரண்டலுக்கு இந்திய மக்கள் ஆட்பட்ட நிலையிலும், மக்களின் எதிரிகளாக அந்நிய ஏகாதிபத்தியத்தையே இக்கட்சிகள் சித்தரித்தன. விவசாய விளை பொருட்கள் அனைத்தும் முதலாளித்துவச் சந்தையின் சரக்குகளாக ஆகிவிட்ட நிலையிலும் முதலாளித்துவ லாப நோக்குடன் விவசாய உற்பத்தி நடந்த போதிலும் விவசாய முதலாளிகளை எதிர்ப்பதை விடுத்து இல்லாத நிலப்பிரபுத்துவத்தை பூதக் கண்ணாடி போட்டுப் பார்த்து எதிர்ப்பதாக இக்கட்சிகள் கூறிக் கொண்டன. இவ்வாறு இந்திய உழைக்கும் மக்களின் கண்முன் இல்லாதவர்களை அவர்கள் எதிரிகளாகச் சித்தரித்த போக்கு அவர்களை நடைமுறை ரீதியாக ஆளும் வர்க்க ஆதரவு நாடாளுமன்றவாத அரசியலுக்கு இட்டுச் சென்றது.

70 ஆண்டுகாலமாக ஒரே அரசியல்
தற்போது இந்தியாவின் பிரதான கம்யூனிஸ்ட் கட்சியாகக் கருதப்படும் சி.பி.ஐ(எம்) ன் தலைவர் பிரகாஷ் கரத் லண்டனில் பிரபல வரலாற்றாசிரியர் கியர்னான் நினைவுச் சொற்பொழிவுக் கூட்டத்தில் 1940 ம் ஆண்டிலிருந்து தனது கட்சி ஒரே பார்வையைக் கொண்டதாக இருந்துள்ளது என்று கூறுகிறார். இந்தச் சுய விமர்சனத்தின் மூலம் அவரது கட்சி தனது பாதையை இந்திய தேசிய முதலாளித்துவத்தை எதிர்ப்பதாக மாற்றிக் கொண்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் அவர் சாதியத்தை உரிய முறையில் எதிர்க்கத் தவறி விட்டதே தனது கட்சியின் தவறு என்று கூறுகிறார். இன்று நமது மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் அடிப்படைப் பிரச்னைகள் விலையுயர்வு, வேலையின்மை போன்றவை, அவை நிச்சயமாக சாதிய வாதத்தினால் உருவானவையல்ல.

நாடாளுமன்ற வாதம்
மாவோயிஸ்ட்களுக்கும் சி.பி.ஐ(எம்)., சி.பி.ஐ. கட்சியினருக்கும் தொடர்பு உள்ளது என்று தமிழக முதல்வர் கூறியவுடன் அவர் எதற்காக அவ்வாறு கூறுகிறார் என்பதை அம்பலப் படுத்தாமல் ஒரு முதிர்ந்த அரசியல் தலைவர் அவ்வாறு கூறலாமா என்று சி.பி.ஐ(எம்) ன் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் யெச்சூரி கெஞ்சுகிறார். ஒருவேளை அ.இ.அ.தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்டு விட்டால் தாங்கள் தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ள வேண்டி வருமே என்ற எண்ணத்தில் அவர் அவ்வாறு கூறுகிறார். நாடாளுமன்ற வாதம் அவரை இவ்வாறு தமிழக முதல்வர் குறித்துக் கெஞ்சவும், கொஞ்சவும் வைக்கிறது.
வர்க்க அரசியலைக் கைவிட்டு விட்டு நாடாளுமன்ற வாதமே சகலமும் என்று கருதும் கட்சிகளோடு ஒருங்கிணைந்து நிற்கும் அரசியல் வர்க்கமாக இக்கட்சி ஆகிவிட்டது. அதனால் தான் மூத்த அரசியல் தலைவர் என்று ஓரே குட்டையில் ஊறிய மட்டைகளில் முதலில் ஊறத் தொடங்கிய மட்டை என்ற ரீதியில் தமிழக முல்வரை மூத்த அரசியல்வாதி என்று உரிமையுடன் அவர் கூறுகிறார். இத்தகைய அரசியல் கம்யூனிஸ்ட்கள் என்று செயல் பட்டவர்களின் பொது வாழ்க்கைத் தரத்தையும் படிப்படியாகச் சீரழித்து மக்கள் மத்தியில் அவர்கள் கொண்டிருந்த நற்பெயரை இழக்கச் செய்துவிட்டது.

கட்சி அரசியலின் தோற்றம்
கட்சி அரசியல் வரலாற்றில் காலங்காலமாக இருந்த ஒன்றல்ல. வாரிசு ஆட்சிமுறை மன்னராட்சியில் நிலவுடைமை சமூக அமைப்பில் இருந்தது. நிலவுடைமை சமூக அமைப்பிலிருந்து எந்திரத் தொழில் உற்பத்தி முறையை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவம் உருவாகி வளர்ந்த பின் அதன் அரசியல் வடிவம் மாற்றம் கண்டது. நாடாளுமன்ற ஜனநாயகம் தலை தூக்கியது. அன்று நிலவிய முதலாளித்துவம் போட்டியினை அடிப்படையாகக் கொண்டதாக இருந்ததால் அப்போட்டியைப் பிரதிபலிக்கும் வகையில் பலகட்சி ஆட்சிமுறை ஏற்பட்டது. இவ்வாறு முதலாளித்துவ சமூக அமைப்பின் மேல் கட்டுமானமாக வளர்ந்த கட்சி அரசியலில் அவையாகவே உருவான அனைத்துக் கட்சிகளும் முதலாளித்துவ நலம் பேணும் கட்சிகளாகவே இருந்தன.

உழைக்கும் வர்க்கக் கட்சியின் உதயம்
முதலாளித்துவம் அதன் வளர்ச்சியோடு அதன் சவக் குழியினைத் தோண்ட வல்ல உழைக்கும் வர்க்கத்தையும் உருவாக்கியது. மிகப் பெரும்பான்மையானதாக மட்டுமின்றி மென்மேலும் வளரும் தன்மை கொண்டதாகவும் இருந்த அவ்வுழைக்கும் வர்க்கத்திற்கு ஏராளமான பிரச்னைகள் இருந்தன. இருந்த போதிலும் அவ்வர்க்கத்தின் பிரச்னைகளைப் பிரதிபலிக்கும் கட்சி அதாகவே உருவாகவில்லை. அவ்வர்க்கம் தனது பிரச்னைகளின் தீர்வுக்காக அதாகவே உருவாக்கியவை தொழிற்சங்கங்களாகவே இருந்தன.

அவ்வர்க்கத்தின் வரலாற்றுப் பூர்வ முக்கியத்துவத்தை மாமேதை மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் தங்களது ஆய்வுகளின் மூலம் தீர்க்கமாகக் கற்றறிந்தனர். இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலை என்ற மாமேதை எங்கெல்ஸ்ன் கல் நெஞ்சையும் கரைந்துருகச் செய்யும் நூல் எத்தனை ஒன்றுதலுடனும், ஈடுபாட்டுடனும் அவர் உழைக்கும் வர்க்கத்தைப் பார்த்தார் என்பதற்கு ஒரு உன்னத எடுத்துக் காட்டு. அது போன்ற ஆய்வுகளின் விளைவாகத் தொழிற்சங்க இயக்க ரீதியான செயல்பாடு மட்டும் அவ்வர்க்கம் எதிர் கொண்டுள்ள பிரச்னைகளிலிருந்தான அதன் விடுதலைக்குப் போதாது என்பதை அம்மாமேதைகள் உணர்ந்தனர். அதற்கென ஒரு தனிக்கட்சி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதை அறிந்தனர்.


உழைக்கும் வர்க்கக் கட்சியின் வழிகாட்டும் தத்துவம்
மார்க்ஸ் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட வரலாறு குறித்த ஆய்வு சமூக வளர்ச்சியை இயக்கவியல் ரீதியில் பார்த்தது.அது மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்துள்ள அடிப்படைத் தன்மை வாய்ந்த மாற்றங்களைக் கண்டுகொள்ள அவருக்கு உதவியது. அதன் விளைவாக விஞ்ஞானப் பூர்வமான கம்யூனிஸக் கருத்தோட்டத்தை அவர் ஆய்ந்தறிந்தார். முதலாளித்துவ சமூகம் வரலாற்றில் இறுதியானதல்ல. வரலாற்று ரீதியாக மாற்றம் கண்ட பல சமூகங்களைப் போல் முதலாளித்துவ சமூகமும் மாறும். அது கம்யூனிஸ சமூகமாக மாறுவதை யாரும் தடுக்க முடியாது என்பதை இயக்கவியல் விஞ்ஞானப்பூர்வ ஆய்வின் மூலம் அவர் கண்டறிந்தார்.

எனவே கம்யூனிஸத்தைத் தனது குறிக்கோளாகக் கொண்ட கட்சி ஒன்று உருவாக்கப்பட வேண்டும்; தொழிற்சங்க அமைப்புகள் அனைத்தும் கம்யூனிஸத் தத்துவத்தைப் பயிற்றுவிக்கும் பாடாசாலைகளாக ஆகவேண்டும் என்று அவர் விரும்பினார்.

தத்துவம் மற்றும் நடைமுறையின் சங்கமம்
கட்சிக் கண்ணோட்டத்தைப் பிரமிக்கத்தக்க விதத்தில் செறிவு செய்த மாமேதை லெனின் அதனைப் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என வர்ணித்தார். தாங்கள் உருவாக்கிய சுரண்டல் அமைப்பைப் பாதுகாப்பதற்காக முதலாளி வர்க்கம் உருவாக்கியுள்ள போலீஸ், ராணுவம் போன்ற அடக்கு முறைக் கருவிகளையும், அதிகார வர்க்க அரசு நிர்வாகத்தையும், நீதியமைப்பையும் எதிர்கொண்டு போராட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ள கம்யூனிஸ்ட் கட்சி பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக இல்லாமல் வேறெதாகவும் இருக்க முடியாது என்பதை அவர் வலியுறுத்தினார். மேலும் கட்சி என்பதற்கு மாமேதை லெனின் ஒரு அற்புதமான விளக்கத்தையும் அளித்தார். கம்யூனிஸத் தத்துவம் மற்ற தத்துவங்களைப் போல் வெறும் அறிவுபூர்வமானது மட்டுமல்ல; அது நடைமுறை சாத்தியமானது. இவ்வாறு தத்துவமும் நடைமுறையும் ஒன்றிச் செயல்படும் அதாவது சங்கமிக்கும் அமைப்பே பாட்டாளி வர்க்கக் கட்சி என்று அவர் கூறினார்.

அப்படிப்பட்ட கட்சியாக கம்யூனிஸ்ட் என்று கூறிக்கொண்டு இந்திய மண்ணில் செயல்படும் கட்சி எதுவும் இல்லததால் அத்தகைய கட்சியாக சி.டபிள்யு.பி.ஐ வளர்ப்பது நமக்கு அவசியமாகிறது. கம்யூனிஸத் தத்துவம், மனிதனை அவன் வாழும் சமூகத்தை அடிப்படையில் மாற்றியமைப்பதாகும். அதில் தடுமாற்றங்கள் ஏற்படவே செய்யும். பாரி கம்யூன் வீழ்ச்சியின் மூலம் ஏற்பட்ட தடுமாற்றத்திலிருந்து படிப்பினை எடுத்துக் கொண்டு மாமேதை லெனின் ரஷ்யப் புரட்சியை வடிவமைத்தார். அதைப்போல் சோவியத் யூனியனின் வீழ்ச்சியிலிருந்து படிப்பினை எடுத்துக் கொண்டு நாம் நமது நாட்டின் சமூக மாற்றத்திற்கு வழிகோல வேண்டும்.


தத்துவார்த்த அறிவு தொண்டருக்கும் அவசியம்
இதுவரை நமக்கு முன்னுதாரணங்களாக இருந்த பல உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய படிப்பினை தலைவர்கள் மட்டுமல்ல, உணர்வு பெற்ற உழைக்கும் வர்க்கமும் சமூக நிகழ்வுகளைத் தங்களால் முடிந்த அளவிற்கு ஆய்வு செய்ய வேண்டும் என்பதே. அதன்மூலம் மட்டுமே கட்சியில் தத்துவார்த்த உணர்வு மட்டம் பராமரிக்கப்பட முடியும். கடந்த கால நிகழ்வுகளைச் சீர்தூக்கிப் பார்த்தால் கம்யூனிஸ்ட் அமைப்புகளின் பிரச்னைகள் அனைத்தும் அத்தகைய உணர்வுமட்டக் குறைவின் அடிப்படையில் ஏற்பட்டுள்ளதையே பார்க்க முடியும். அந்த வகையில் சி.டபிள்யு.பி.ஐ வளர்த்தெடுத்து அதனைப் புரட்சிப் பாதையில் நடைபயிலச் செய்து, அப்பயணத்தை தொடர் ஓட்டமாக்கி, நீண்ட பயணமாக மலரச் செய்து இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலையைச் சாதிக்க உறுதி பூணுவோம்.

தோழர் ஆனந்தனின் உரைக்குப் பின் தோழர்களின் புரட்சிகர முழக்கங்களுடன் மாநாட்டின் பொதுக் கூட்ட நிகழ்ச்சி நிறைவு பெற்றது. கூட்டம் நடைபெற்ற அரங்கு நிரம்பியதோடு பொதுமக்கள் பலர் ஆங்காங்கே நின்று தலைவர்களின் உரைகளைச் செவி மடுத்தனர். அற்புதமான கட்டுப் பாட்டுடன் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடு முழுவதிலிருந்தும் வந்த உணர்வு பெற்ற உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த தோழர்கள் உரைகளைக் கிரகித்தது அரங்க உரிமையாளர் உட்பட அனைவரையும் நெகிழ வைப்பதாக இருந்ததோடு அவர்களின் மனமுவந்த பாராட்டையும் பெற்றது.

No comments:

Post a Comment