Wednesday, February 1, 2012

SUCI- கட்சியின் தற்போதைய தலைமையுடனான நமது கருத்து வேறுபாடுகள் (Our Differences)


              கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ்  பிளாட்பாரம் ,
தமிழ்நாடு 

முன்னுரை 

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு மாபெரும் தியாக வரலாற்றுடன் பங்கேற்றதும் பரந்த அளவில் மக்கள் ஆதரவினைப் பெற்றிருந்ததும் இந்தியப் பாட்டாளி வர்க்க விடுதலையை சாதித்துத் தரும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டதுமான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திரத்திற்கு முன்பும் , சுதந்திரமடைந்த பின்னரும் பல அடிப்படைத் தன்மை வாய்த்த தவறுகளைச் செய்தது. சுதந்திரமடைந்திற்கு முன்பு இந்திய விடுதலைப் போரில் சமரசமற்ற போக்கினைப் பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்புகளோடு ஒருங்கிணைந்து இந்திய விடுதலைப் போரையே ஒரு மக்கள் ஜனநாயகப் புரட்சியாக மாற்றுவதற்கு அக்கட்சி தவறியது. சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த இந்திய முதலாளி வர்க்கத்தை புரட்சியின் நேச சக்தியாகச் சித்தரிக்கும்  ' தேசிய ஜனநாயகப் புரட்சி ' திட்டத்தை அது தனது அடிப்படை அரசியல் வழியாக முன் வைத்தது. அக்கட்சியும் அதிலிருந்து பிரிந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) உட்பட பல கட்சிகளும் இன்று வரை எந்த முதலாளி வர்க்கம் மக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் மூல காரணமாக உள்ளதோ அந்த முதலாளி வர்க்கத்தை நேச சக்தியாகச் சித்தரிக்கும் ஏதாவதொரு அடிப்படை அரசியல் வழியையே இன்றும் பின்பற்றி வருகின்றன. இதனால் பொங்கிப் பிரவாகித்த மக்கள் எழுச்சி பல தருணங்களில் திசை திருப்பப்பட்டு முடங்கிப் போனதோடு இக்கட்சிகள் அனைத்தும் அப்பட்டமான வர்க்க சமரசப் பாதையைப் பின்பற்றி நாடளுமன்ற மற்றும் தேசியவாதச் சேற்றிலும் சகதியிலும் புரளும் இழி நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதையும் இன்றும் நாம் வேதனையுடன் கண்ணுறுகிறோம்.  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இத்தகைய இமாலயத் தவறுகளிலிருந்து உரிய படிப்பினை எடுத்துக் கொண்டதோடு சர்வதேச சூழ்நிலைகளையும் துல்லியமாக ஆய்ந்து இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான அடிப்படை அரசியல் வழியாக முதலாளித்துவ எதிர்ப்பு சோஷலிஸப் புரட்சிப் பாதையினை முன் வைக்கும் SUCI கட்சியினை பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான தோழர் சிப்தாஷ் கோஷ் அவர்கள் 1948 ம் ஆண்டு ஸ்தாபித்தார். தோழர்.சிப்தாஷ் கோஷின் தலைமையில் செயல்பட்டு பல அறிய வழங்கல்களை உலகக் கம்யூனிச இயக்கத்திற்கும் மார்க்சிஸ - லெனினிஸக் கருவூலத்திற்கும் நல்கும் அளவிற்கு இருந்த அக்கட்சி அவரது மறைவிற்குப் பின் போர்க்குணமிக்க இயக்கம் கட்டும் பாதையினைக் கைவிட்டு சம்பிரதாய ரீதியிலான செயல்பாட்டை மட்டும் நடத்த வல்லதாக ஆகியது. அதன் விளைவாக கட்சி வாழ்க்கையில் உயிரூட்டமிக்க போராட்டத்தை தக்க வைக்கத் தவறியதோடு மார்க்சிஸம் - லெனினிஸத்தையும் தோழர் சிப்தாஸ் கோஷ் சிந்தனைகளையும் வரட்டுச் சூத்திர வாதங்கள் போல் ஆக்கி செயல்படத் தொடங்கியது. இத்தகைய செயல்பாடுகளின் தவிர்க்க முடியாத விளைவாக கட்சியின்  அடிப்படை அரசியல் வழியிலையே தடம் புரளல் ஏற்பட்டு இந்தியாவில்  கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ற பெயரில் செயல்படும் மற்ற கட்சிகளைப் போல் அக்கட்சியும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற கோஷத்தை  பிரதானப்படுத்தி உள்நாட்டு முதலாளித்துவத்தை மூடி மறைத்துக் காக்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்தது. அக்கட்சி இத்திசை வழியில் நடத்திய 'ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாடு' அதன் இத்தகைய போக்கிற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டாகும்.